தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றத்துக்கு காரணமாகும் அனல்மின் நிலையங்களை உருவாக்குவது ஏன்? அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பேட்டி

பட மூலாதாரம், Twitter/SMeyyanathan
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவில் மிக நீண்ட கடற்கரையைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை வெகுவாக எதிர்கொள்ள வேண்டிய மாநிலம். தமிழ்நாட்டிற்கு காலநிலை மாற்றம் தொடர்பாக என்ன கொள்கைகள், திட்டங்கள் இருக்கின்றன என்பது குறித்து தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதனிடம் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். பேட்டியிலிருந்து:
கே. உலகம் முழுவதுமே காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை உணர ஆரம்பித்துவிட்டன. தமிழ்நாட்டில் இந்தப் பிரச்னை எந்த அளவுக்கு தீவிரமானது என நினைக்கிறீர்கள்?
ப. காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கடந்த காலத்தில் சரியாகக் கையாளாதால், கூடுதல் பாதிப்புகளை எதிர்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறோம். இருந்தாலும் புதிய அரசு காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் துவங்கியிருக்கிறது.
காலநிலை மாற்றத்திற்கு மிக முக்கியமான காரணம், புவிவெப்பமாதல். அதனை எதிர்கொள்ளும்விதமாக, தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக பசுமைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பசுமைக் குழு மூலமும் வனத் துறை மூலமும் பெரிய அளவில் மரங்களை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
தமிழக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பெயர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கமும் துவங்கப்பட்டு, 500 கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தினால் வரக்கூடிய பாதிப்புகள் எப்போதுமே ஏழை, எளிய மக்களைத்தான் அதிகம் பாதிக்கும். ஆகவே, இந்த பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. வசிக்கத் தகுதியற்ற இடங்களில் இன்னமும் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களை மீட்டெடுக்க 2.76 லட்ச ரூபாயில் வீடுகள் கட்டுத்தரப்பட்டு வருகின்றன.
கே. காலநிலை மாற்றத்திற்கான செயல் திட்டத்தை முழுமையாக உருவாக்கி, இன்னும் வெளியிடப்படவில்லை. அந்தப் பணி எந்தக் கட்டத்தில் இருக்கிறது?
ப. அந்தப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
கே. காலநிலை மாற்றத்திற்கு முக்கியக் காரணம், புவியின் வெப்பநிலை. அந்தத் திசையில் தமிழ்நாடு ஏதாவது திட்டமிட்டிருக்கிறதா?
ப. முதற்கட்டமாக தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் அளவைக் குறைக்க வேண்டும். அதற்கான பணிகளைச் செய்துவருகிறோம். மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இயற்கைக்கு எதிரான பணிகள் எங்கெல்லாம் நடக்கிறதோ, அவற்றை தடுக்க அதிகாரிகளிடம் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் அந்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
கே. புவியின் வெப்பத்தை அதிகரிப்பதில் அனல் மின் நிலையங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக புதிய அனல் மின் நிலையங்களை ஏற்படுத்தி வருகிறோம். இது முரண்பாடாக இல்லையா?
ப. இதற்காகத்தான் மாற்று எரிசக்தி ஆதாரங்களை ஊக்குவிக்க பெரிய அளவில் சூரிய மின் திட்டங்களை முன்னெடுக்கிறோம். ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதில் ஐந்தாண்டு காலத்தில் 20,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த ஆண்டில் 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

பட மூலாதாரம், Getty Images
இதுபோல, மாற்று மின் ஆதாரங்களைப் பயன்படுத்துவது அதிகரிக்கும்போது அனல் மின் நிலையங்களைச் சார்ந்திருப்பது குறைந்துவிடும்.
கே. காலநிலை மாற்றத்தால் கடல் மட்டும் உலகம் முழுவதுமே உயர்ந்து வருகிறது. நீண்ட கடற்கரையைக் கொண்ட தமிழ்நாட்டிற்கு இது மிகப் பெரிய பிரச்னையாக இருக்கும். என்ன செய்யப்போகிறீர்கள்?
ப. தமிழ்நாட்டின் கடற்கரை 1076 கி.மீ. நீளமுடையது. இதைப் பாதுகாக்க பல திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் பத்து கடற்கரைப் பகுதிகள் தேர்வுசெய்யப்பட்டு, அவற்றுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக 100 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 2 கடற்கரைகள் அதற்காக தேர்வுசெய்யப்பட்டுள்ளன.
கடலின் நீர்மட்டும் உயர்ந்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுவருகின்றன. அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.
ஆனால், இதில் இருவேறு கருத்துகள் சொல்லப்படுகின்றன. ஒருபக்கம், கடல் மட்டம் உயர்ந்து நிலப்பகுதிகள் மூழ்கும் என்று சொல்லப்படுகிறது. மற்றொரு பக்கம், அப்படி நடக்கவே வாய்ப்பில்லை என்கிறார்கள். எப்படியிருந்தாலும் எல்லா நிலையையும் எதிர்கொள்ளும்வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
கே. சதுப்பு நிலங்கள் அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அந்தப் பணிகள் எந்த நிலையில் உள்ளன?
ப. அந்தப் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஆட்சிக் காலத்தில் சதுப்பு நிலங்கள் பெரிய அளவில் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம், பாதுகாப்பு இல்லாமைதான். இந்த சதுப்பு நிலங்களை வனத்துறையோடு இணைத்தால் அவை பாதுகாக்கப்படும். தற்போது கடற்கரைக்கு அருகில் உள்ள சதுப்பு நிலங்களின் பெரும்பகுதியை வனத்துறைக்கு கீழ் கொண்டு வந்திருக்கிறோம். விரைவில் எல்லா ஈர நிலங்களும் வனத்துறைக்குக் கீழே கொண்டுவரப்பட்டு பாதுகாக்கப்படும்.
கே. உலகம் முழுவதுமே கொரோனாவிலிருந்து மீண்டு வருகிறது. முடங்கிக் கிடந்த தொழில்துறை வேகமாக செயல்பட ஆரம்பித்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் அதேதான் நடக்கிறது. மிக வேகமான தொழில் வளர்ச்சியை எதிர்பார்க்கிறது தமிழ்நாடு. தொழில்வளர்ச்சியும் காலநிலை மாற்றத்திலிருந்து பாதுகாப்பும் எதிர் எதிர் திசையில் செல்லக்கூடியவை. இதனை எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள்?
ப. தொழில்வளர்ச்சியின்போது மாசுபடாத தொழில்துறையை நாம் உருவாக்க முடியும். அது முழுமையாக சாத்தியப்படாவிட்டாலும், மாசுபாட்டைக் குறைக்க முடியும். எல்லா தொழிற்சாலைகளுக்கும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்தான் அனுமதிக்கிறது. ஆகவே, அதனைக் கண்காணிப்போம்.
கே. காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளை உருவாக்குவதில் பெரும் பங்கு மத்திய அரசிடம்தான் இருக்கிறது. அப்படியிருக்கும்போது நீங்கள் நினைத்தாலும் பல விஷயங்களைச் செய்ய முடியாது. என்ன செய்யப்போகிறீர்கள்?
ப. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்தான் தொழிற்சாலை மாசுபாடு குறத்த கொள்கையை வகுக்கிறது. அதனை ஒட்டித்தான் மற்ற மாநிலங்கள் தங்கள் மாசுக் கொள்கையை வகுக்கின்றன. தவிர, சிவப்பு என்ற மிக அச்சுறுத்தலான தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கும் பொறுப்பு மத்திய அரசிடம்தான் இருக்கிறது. மாநில அரசுகள் அவற்றைக் கண்காணிக்க மட்டுமே முடியும். மத்திய - மாநில அரசுகள் இணைந்துதான் மாசுபாட்டைத் தடுக்க முடியும். மத்திய அரசு அதற்கேற்ற வகையில் திட்டங்களையும், கொள்கைகளையும் வகுக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை நாம்தான் முதலில் தடைசெய்தோம். ஆனால், இப்போது மத்திய அரசும் அதற்கான கொள்கைகளை வகுத்திருக்கிறது. அதுபோலவும் செயல்படலாம்.
கே. காலநிலை மாற்றம் என்பது இப்போதுதான் கவனம் பெற ஆரம்பித்திருக்கிறது. அமைச்சகத்தின் பெயரே இப்போதுதான் மாற்றப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் பிற அமைச்சகங்களில் உள்ள அதிகாரிகள், அந்தக் கட்டமைப்பு ஆகியவை கால நிலை மாற்றத்தைப் புரிந்துகொள்கின்றனவா?
ப. இதற்காகத்தான் பசுமைப் பொறியாளர்களை உருவாக்கப்போகிறோம். அவர்களை வைத்து எல்லாப் பிரிவினருக்கும் இதைப் பற்றி எடுத்துச் சொல்வோம்.
இந்தியாவிலேயே பதிவுபெற்ற அரசியல் கட்சிகளில் முதல் முறையாக தி.மு.கதான் சுற்றுச்சூழலுக்கு அணி ஒன்றை உருவாக்கியது. அதேபோல, அமைச்சகத்தின் பெயரையும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை என மாற்றியது. இதையெல்லாம் மற்ற அமைச்சர்களும் அதிகாரிகளும் பார்க்கிறார்கள். ஆகவே அவர்கள் புரிந்துகொள்வார்கள்,
தவிர, பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் காலநிலை மாற்றம் குறித்து எடுத்துச் சொல்கிறோம். மேலும், பெரிய அளவில் மரம் வளர்ப்பு தொடர்பான பிரச்சாரங்களைச் செய்து வருகிறோம்.
கே. தமிழ்நாட்டிற்கு காலநிலை மாற்றத்தால் என்ன பாதிப்பு வருமென எதிர்பார்க்கிறார்கள். அதை எதிர்கொள்ள என்ன திட்டங்கள் இருக்கின்றன?
ப. முன்பெல்லாம் 3 ஆண்டு அல்லது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறைதான் தமிழக கடற்கரையை புயல் தாக்கும். ஆனால், இப்போது அடிக்கடி புயல் தாக்குவது நடக்கிறது. அதேபோல, இடி தாக்கி ஒரே நேரத்தில் பலர் மரணமடைவதும் நடக்கிறது. ஆகவே, இப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதற்கான கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டுவருகின்றன.
கே. தமிழக கடலோரம் தொடர்ந்து அரிக்கப்பட்டு வருகிறது. அங்கு வசிப்பவர்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டியிருக்கும்...
ப. கடலரிப்பு என்பது உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் பிரச்சனை. மாநில அரசால், இதில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்துவருகிறோம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












