அம்மாவின் அன்பு:'ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட என் மகனுக்கு குரல் கொடுக்க விரும்புகிறேன்'

- எழுதியவர், திவ்யா ஆர்யா
- பதவி, பிபிசி நியூஸ், மும்பை
"ஆட்டிசம் கிராமம்" என்று தான் அழைக்கும் ஒரு இடத்தில் தன்னால் இனி வாழ முடியாது என்பதை முக்தா கால்ரா உணர்ந்தபோது இது தொடங்கியது. அங்கு அவர் சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள், சிகிச்சையாளர்கள் மற்றும் மருத்துவர்களுடன் மட்டுமே தொடர்பில் இருந்தார்.
அவரது மகன் மாதவ், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதிலிருந்து, அதுவே முக்தாவின் வாழ்க்கையானது. ஒருவர் உலகத்துடன் பேசும் மற்றும் தொடர்புகொள்ளும் முறையை பாதிக்கும் ஒரு நோய் இது.
மாதவுக்கு மூன்று வயது இருக்கும்போது, அவர் பேசும்போது கண்ணோடு கண் பார்க்காமல், பார்வையை விலக்கியவாறு பேசுவதை அவரது பாட்டி முதலில் கவனித்தார். மெதுவாக மாதவ் அதிகம் பேசுவதை நிறுத்தினார். அதற்கு பதிலாக வாய் திறவாமல் குறிப்பாக உணர்த்த தொடங்கினார்.
அவரது பேச்சு, தேவை அடிப்படையிலானது என முக்தா விளக்கினார்.
"அவருக்கு ஏதாவது ஒன்றை சாப்பிட பிடிக்காதபோது 'இல்லை' என்று சொல்வார். ஆனால் பல நேரங்களில் அவர் பேசவே மாட்டார்," என்று அவர் கூறினார்.
"அவர் வலியில் இருக்கும்போது என் கையை தனது வயிற்றில் வைத்துக்கொண்டு 'ஆஓஆ' என்று சத்தம் போடுவார். ஒரு பெற்றோராக நான் அதைப் பற்றிய புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டியிருந்தது,"என்று அவர் குறிப்பிட்டார்.
"அந்த தொடக்க ஆண்டுகளில் மாதவ் பல நேரங்களில் உணர்ச்சிவசப்படுவார். அடக்கமுடியாமல் அழுவார்," என்று முக்தா கால்ரா கூறினார்.
எனவே, இந்த உணர்ச்சி தூண்டல்களுக்கான குறிப்பை முக்தா பராமரிக்க ஆரம்பித்தார். அதாவது அதிக சத்தம் அல்லது வண்ணம் போன்ற தூண்டுதல்கள் இந்த உணர்ச்சி பெருக்கை ஏற்படுத்துகிறதா என்று கண்காணிக்கத் தொடங்கினார்.
ஆட்டிஸ்டிக் குழந்தைகளைக் கொண்ட பெற்றோரையும் அவர் அணுகினார். தனது குழந்தையின் பிரச்சனையை புரிந்துகொள்ள அது அவருக்கு உதவியது. ஆனால் தன் மகனுக்காக இன்னும் அதிகம் செய்யவேண்டும் என்று தான் விரும்புவதை முக்தா உணர்ந்தார்.
ஒவ்வொரு பெற்றோரின் மனதிலும் உள்ள மிக முக்கியமான கவலை - நாம் இறந்த பிறகு என்ன ஆகும் என்பதுதான், என்று அவர் கூறினார்.
"எல்லோருடையதையும் போலவே இந்த உலகம் என்னுடையதாகவும் அவருடையதாகவும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனவே நான் அவரை வெளியே அழைத்துச் செல்ல ஆரம்பித்தேன். மக்களைச் சந்திக்க ஆரம்பித்தேன். அதுதான் அவர் தனது வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரே வழி," என்று முக்தா கூறினார்.

"ஆனால் மக்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு பல கேள்விகள் இருந்தன. மாதவை பார்க்கும்போதே வித்தியாசம் தெரியும். அவர் ஸ்டிம்மிங் செய்யும்போது (முன்னும் பின்னும் அசைதல் அல்லது தலையில் அடித்துக்கொள்ளல் போன்ற அசைவுகளை உள்ளடக்கிய சுய - தூண்டுதல் நடத்தைக்கான மொழி) அல்லது தன்னை அமைதிப்படுத்திக்கொள்ள விரல்களை ஒன்றுடன் ஒன்று தேய்ப்பது போன்ற செயலை மீண்டும் மீண்டும் செய்யும்போது அது மற்றவர்களுக்கு அசெளகர்யமான உணர்வை ஏற்படுத்தலாம் ,"என்று முக்தா கால்ரா கூறினார் .
மாதவுக்கு இப்போது 11 வயது. ஆனால் அவரது மூளை இன்னும் ஆறு வயது சிறுவனைப் போலவே வேலை செய்கிறது. இது அவரை குழந்தை போல் ஆக்குகிறது. அவர் அதிகம் பேசுவதில்லை. எப்போதும் தனியாகவே இருப்பார்.
மாதவ் சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தார். ஆனால் கோவிட் தொற்றுநோய் காரணமாக கற்றல் நடவடிக்கை ஆன்லைனுக்கு மாறியபோது அவருக்கு சிரமம் ஏற்பட்டது. அதனால், அவரது பெற்றோர் வீட்டில் கல்வி கற்பிக்க முடிவு செய்தனர்.
இந்திய சுமூகத்தில் ஆட்டிசம் பற்றிய புரிதல் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் உள்ளவர்கள் மற்றவர்களுடன் ஒருங்கிணைவதை இது கடினமாக்குகிறது. மேலும் விழிப்புணர்வு இல்லாததால் புறக்கணிப்பு நீடித்து வருகிறது.
அவர் ஏன் எங்களுடன் விளையாடுவதில்லை? ஏன் தன் கைகளால் காதுகளை மூடிக்கொள்கிறார்? என்று உறவுக்கார குழந்தைகள் முக்தாவிடம் கேட்பார்கள். "மாதவ் ஒரு போதும் கண்களை பார்த்து பேசமாட்டார் மற்றும் யார் சொல்வதையும் கேட்கமாட்டார் என்பதால் அவருக்கு மரியாதை தெரியாது என மற்றவர்கள் நினைப்பர்," என்று அவர் மேலும் சொன்னார்.
கேள்விகளுக்கு முடிவே இல்லை. எனவே முக்தா கால்ரா அவர்களுக்கு பதிலளிக்க மாறுபட்ட அணுகுமுறையை கடைப்பிடிக்க முடிவு செய்தார்: ஒரு காமிக் புத்தகம்.
'Not That Different ' என்று அழைக்கப்படும் இந்த காமிக் புத்தகம், சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான பள்ளிக்குப் பதிலாக வழக்கமான பள்ளிக்கு செல்லும் மாதவின் பயணத்தை கற்பனை செய்கிறது.
"காமிக் புத்தகத்தின் 'ந்யூரோ டைவர்ஸ்' கதாபாத்திரம் மாதவாக இருக்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன். ஏன் அவரை ஒளித்து வைக்க வேண்டும்? அதற்கு பதிலாக அவரது அனுபவத்திற்கு குரல் கொடுக்கலாம் என்று நினைத்தேன். மேலும் உங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல், மற்றவர்கள் உங்களுடன் இணைய மாட்டார்கள்," என்று கால்ரா கூறினார்.

'ந்யூரோ டைவர்ஜென்ஸ்' அதாவது 'நியூரோ டைவெர்சிட்டி' என்பது டிஸ்லெக்ஸியா, டிஸ்ப்ரெக்ஸியா, ADHD, ஆட்டிசம் பிரிவின் கீழ் உள்ளவர்கள் அல்லது பிற நரம்பியல் வேறுபாடுகளைக் கொண்டவர்களின் சமூகத்தைக் குறிக்கிறது.
மாதவின் மனம் இந்த காமிக்கை புரிந்துகொள்ளமுடியாத அளவிற்கு இளமையானது. காமிக்கில் உள்ள நகைச்சுவை மற்றும் சாரத்தை புரிந்துகொள்ளும் அளவிற்கு அவருடைய புரிதல் அளவு இல்லை என்று அவரது தாயார் கூறினார்.
அவரது இரண்டு ஆசிரியர்களும் மாதவுக்கு மூன்றெழுத்து வார்த்தைகள், அடிப்படை கூட்டல் - கழித்தல் மற்றும் வாழ்க்கைத் திறன்கள் அதாவது எந்தப்பொருள் மூழ்கும், எது கரையும் , ரூபாய் நோட்டுக்களை அடையாளம் காணல் போன்றவைகளை கற்பிக்க உதவுகிறார்கள்.
காமிக் புத்தகத்திற்காக முக்தா கால்ரா மூன்று பெண்களுடன் இணைந்து செயல்பட்டார்: நிதி மிஸ்ரா, புகோஸ்மியா என்ற உலகளாவிய படைப்பு வெளியீட்டு தளத்தின் நிறுவனர்; ஆயூஷி யாதவ், குழந்தைகள் ஓவியர்; மற்றும் விருது வென்ற குழந்தை எழுத்தாளர் அர்ச்சனா மோகன்.
இந்த திட்டத்திற்கு முன்பு மாதவ் போன்ற குழந்தையுடன் தான் நேரத்தை செலவிட்டதில்லை என்று ஆயூஷி யாதவ் கூறினார்.
அவரது ஓவியங்கள் பொதுவாக மிகைப்படுத்தலின் தனித்துவமான வடிவங்களில் வேரூன்றியுள்ளன. எனவே, சிரிக்கும் முகம் எல்லா பற்களையும், தொண்டையின் பின்புறத்தையும் கூட வெளிப்படுத்தும்.
ஆனால் மாதவை வரைவது ஒரு மாறுபட்ட அனுபவம் என்று ஆயூஷி யாதவ் கூறினார். இது "ஒரு விரும்பத்தக்க பாத்திரம்" என்று பரவலாக புரிந்து கொள்ளப்பட்ட கருத்தை கேள்விக்குள்ளாக்கியது. குழந்தையை "வெறுமையாக அல்லது முரட்டுத்தனமாக" காட்டுவது குறித்து தான் கவலைப்பட்டதாக அவர் கூறினார்.
முக்தா கால்ரா, மாதவ்வின் படங்களை இந்த குழுவிற்கு அனுப்புவார், ஜூம் அழைப்புகளில் அவது அறையைக் காண்பிப்பார், மேலும் காமிக் புத்தகத்தின் அடிப்படையை உருவாக்கும் நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்வார்.
உதாரணமாக ஒரு தொடர்படம் , மாதவ் உரத்த ஒலிகளை விரும்பாததால், காதுகளை எவ்வாறு மூட முனைகிறார் என்பதை விளக்குகிறது. இது கால்ரா தனது மகனின் ஆறாவது பிறந்த நாளில் கற்றுக்கொண்டது.
எனவே இப்போது அவருடைய பிறந்தநாள் ஹீலியம் நிரம்பிய பலுன்களை உயரத்தில் கட்டுவது, நூடுல்ஸ் போன்ற அவருக்கு பிடித்த உணவு, ஒன்று அல்லது இரண்டு நண்பர்களுடன் மிருகக்காட்சிசாலைக்கு ஒரு பயணம் என்று கொண்டாடப்படுகிறது.
ஆனால் மாதவின் கதையைச் சொல்வது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.

தான் கதையை சொன்ன விதம் பல முறை நிராகரிக்கப்பட்டது என முக்தா கூறினார். பல பதிப்பகங்கள் அதை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை, பிரச்சனை 'மிகவும் சலிப்பாக அல்லது பெரும்பாலான மக்கள் அடையாளம் காணக்கூடியதாக இல்லை' என்று அவர்கள் சொன்னார்கள். இருப்பினும், நிதி மிஸ்ரா இந்த வாய்ப்பைப் பயன்படுத்த தயாராக இருந்தார்.
முக்தா கால்ரா, ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தையை வளர்ப்பதில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், தன்னை அதிக உணர்திறன் கொண்டவராக மாற்றிக்கொண்டுள்ளார். காமிக் தவிர அவர் , வலைப்பதிவு, யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்காக இணையத்தைப் பயன்படுத்துகிறார்.
எதிர்மறை கருத்துக்களை எதிர்த்துப் போராடவும் இது உதவியது, என்று அவர் கூறினார்.
2019ல் மாதவுக்கு முதல் முறையாக வலிப்பு ஏற்பட்டது. பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சைக்குப்பிறகு மாதவ் இயல்பு நிலைக்கு திரும்பினார்.
மற்றொரு தாக்குதலுக்கான வாய்ப்பு நீடித்தாலும், மாதவ் நன்றாக இருக்கிறார் என்று முக்தா கூறினார்.
பயம் இல்லாமல் மகிழ்ச்சியை எதிர்பார்த்து வாழ தன்னைப் பயிற்றுவித்துக் கொண்டதாகவும், அதற்கு நேரம் பிடித்தது என்றும் அவர் தெரிவித்தார்.
"அதனால்தான் , அன்பான, புரிதல் உள்ள உலகில் அவரை விட்டுச் செல்வதற்கு என்னால் முடிந்ததைச் செய்கிறேன். அன்பு செலுத்தாவிட்டாலும் குறைந்தபட்சம் அவரைப் புரிந்து கொள்ளுங்கள். அவரை வாழ விடுங்கள்,"என்று சொல்லி முடித்தார் முக்தா கால்ரா.
பிற செய்திகள்:
- டி20 உலகக்கோப்பை: இந்தியா இனியும் அரைஇறுதிக்கு தகுதி பெறுவது சாத்தியமா?
- தமிழ்நாடு நாள்: நவம்பர் முதல் நாளா? ஜூலை 18ம் தேதியா- சர்ச்சையின் பின்னணி என்ன?
- கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குறைந்தது 15 சதவீத வரி: ஜி20 நாடுகள் இறுதி செய்த முக்கிய ஒப்பந்தம்
- இந்தியாவின் அக்னி-5 ஏவுகணையின் பலம் என்ன? எங்கெல்லாம் தாக்க முடியும்?
- பருவநிலை மாற்றத்தில் மீத்தேனின் பங்கு என்ன? - இன்னும் பல கேள்விகளுக்கு விளக்கம்
- மகாவீரர் நினைவு நாளில் கறிக்கடைகளை மூடுவது உணர்வை மதிப்பதா? உணவு உரிமையில் தலையிடுவதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












