நடிகர் ஆர்யா போல ஆள்மாறாட்டம் செய்து இளம் பெண்ணிடம் பணமோசடி செய்தது உண்மைதானா? - பின்னணி என்ன?

பட மூலாதாரம், @aryaoffl, Instagram
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
நடிகர் ஆர்யா, ஜெர்மனியை சேர்ந்த இளம்பெண் வித்ஜாவை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக ஆர்யாவை போல சமூக வலைதளங்களில் பேசி ஏமாற்றியதாகக் கூறி இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உண்மையில் இந்த வழக்கில் என்ன நடந்தது?
2019ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் காதல் திருமணம் நடந்தது. 'வனமகன்', 'கஜினிகாந்த்' உள்ளிட்ட படங்களில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர்.
இந்த நிலையில்தான், ஜெர்மனியை சேர்ந்த வித்ஜா, நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம் மோசடி செய்திருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அளித்திருந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, காவல்துறை விசாரணைக்காக ஆகஸ்ட் 10-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜரான ஆர்யா, அது தொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசுவதை தவிர்த்து விட்டுப் புறப்பட்டார். இந்த விவகாரத்தில் அடுத்த விசாரணை 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பண மோசடி

பட மூலாதாரம், @aryaoffl, Instagram
”ஜெர்மனியை சேர்ந்த இலங்கை தமிழ்ப்பெண் வித்ஜாவுக்கும் நடிகர் ஆர்யாவுக்கும் சமூக வலைதளம் மூலம் அறிமுகம் ஏற்பட்டதாகவும் பிறகு தனது காதலை வித்ஜாவிடம் வெளிப்படுத்தி, அவரை திருமணம் செய்வதாக ஆர்யா உறுதியளித்ததாகவும் வித்ஜா தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கொரோனா காலத்தில் தனக்கு பட வாய்ப்புகள் இல்லாததாலும் கடன் பிரச்னையில் சிக்கி உள்ளதால் நடிகர் ஆர்யாவும் அவரது தாய் ஜமீலாவும் தன்னிடம் கிட்டத்தட்ட 80,000 யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 70,40,000) வரை பணம் வாங்கியதாகவும் வித்ஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆர்யா- சாயிஷா திருமணம் ஏற்கெனவே நடந்துள்ளது பற்றி வித்ஜா கேட்டபோது, 'இன்னும் ஆறு மாதங்களில் ஆர்யா- சாயிஷாவுக்கு விவாகரத்து நடக்கும். அது ஷூட்டிங் கல்யாணம்' என ஆர்யா தரப்பில் கூறப்பட்டதாக வித்ஜா கூறினார்.
தனக்கும் ஆர்யாவுக்கும் இடையே நடந்த உரையாடல்கள், பணப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களை காண்பித்து ஆர்யாவுக்கு எதிரான புகாரை வித்ஜா தரப்பு காவல்துறையில் பதிவு செய்ததாக முன்பொருமுறை வித்ஜாவின் வழக்கறிஞர் ஆனந்தன் பிபிசி தமிழிடம் தெரிவித்திருந்தார்.
திடீர் திருப்பம்
இந்த வழக்கை சென்னை நகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு விசாரித்து வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, ஆர்யாவை போல ஆள்மாறாட்டம் செய்ததாகக் கூறி இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான் என்பவர் சமூக வலைதளத்தில் நடிகர் ஆர்யா என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு, திருமணம் செய்து கொள்வதாக கூறி வித்ஜாவிடம் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் இந்த செயலுக்கு தனது மைத்துனர் முகமது ஹூசைனி பையாக் உடந்தையாக இருந்துள்ளதாகவும் காவல்துறை தரப்பு கூறுகிறது.
இந்த இருவரையும் உதவி ஆணையாளர் ராகவேந்திரா கே. ரவி தலைமையில் ஆய்வாளர் சுந்தர் மற்றும் தனிப்படையினர் ராணிப்பேட்டை மாவட்டம், பெரும்புலிப்பாக்கத்தில் ஆகஸ்ட் 24ஆம் தேதி கைது செய்துள்ளனர்.

பட மூலாதாரம், @aryaoffl, Instagram
இது குறித்து, வித்ஜா தரப்பில் பேசுவதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள ராஜபாண்டியனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
"இத்தனை வருடங்களாக சினிமாவில் பார்த்து வந்த ஆர்யாவை வித்ஜாவுக்கு அடையாளம் தெரியாமல் இல்லை. இந்த வழக்கை பொருத்தவரையில் ஆர்யா தரப்பு என்ன நடக்க வேண்டும் என்பதை ஏற்கெனவே முடிவு செய்து விட்டார்கள். அதுதான் தற்போது நடந்திருக்கிறது. இந்த வழக்கில் கைதான அர்மான் எந்த எண்ணை உபயோகப்படுத்தினார், எங்கிருந்து பயன்படுத்தினார் என்ற விவரங்கள் எல்லாம் நிச்சயம் எடுக்க முடியும் அல்லவா?" என்று கேள்வி எழுப்பினார்.
வித்ஜா தரப்பு எழுப்பும் கேள்விகள்
"ஆர்யா மற்றும் அர்மானுடைய எண்கள் எந்த வகையில் தொடர்புபடுத்துப்படுகின்றன என்பதை பார்க்க வேண்டும். ஆனால், இதில் கவனிக்க வேண்டிய ஒன்று ஆர்யா மற்றும் அவரது அம்மா இருவரும் வித்ஜாவிடம் வீடியோ கால் பேசியிருக்கிறார்கள், வீட்டை எல்லாம் சுற்றி காண்பித்திருக்கிறார்கள்.
"வீடியோ கால் பேசியிதற்கான ஆதாரம் இல்லாததுதான் தற்போது அவர்களுக்கு சாதகமாய் போய் விட்டது. ஆர்யா மீது வழக்கு தொடுத்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகிறது. அப்படி இருக்கும் போது, அப்போது எல்லாம் வாய் திறந்து பேசாமல் விசாரணைக்கு மட்டும் பேருக்கு வந்து போனார்கள். இப்போது ஆள்மாறாட்டம் என கூறுவதை குழந்தை கூட நம்பாது," என்றார் ராஜபாண்டியன்.
"ஆர்யா போல நடித்து ஏமாற்றியவர் என கைது செய்துள்ள இருவரிடமும் ஏமாற்றிய பணத்தை திரும்ப பெறுவதற்கு என விசாரணை எதுவும் நடந்ததா? விசாரணையில் கைது செய்த குற்றவாளிகள் இருவரும் ஆர்யாவுடைய பெயரில் போலியாக செல்பேசி எண், சமூக வலைதள கணக்கு உருவாக்கியதாக சொல்லியிருக்கிறார்கள். இது உண்மை என்றால், ஆறு மாதங்களுக்கு முன்பே அந்த செல்பேசி எண், சமூகவலைதள கணக்கு என்னுடையது அல்ல, போலியானது. என்னுடைய எண்ணை பயன்படுத்தி ஏமாற்று வேலை நடந்திருக்கிறது," என ஆர்யா அப்போதே புகார் கொடுத்திருக்கலாமே," என்று வித்ஜா தரப்பில் ராஜபாண்டியன் கேள்வி எழுப்பினார்.
புகார் கொடுத்ததற்கு பிறகு ஆர்யா, வித்ஜாவுடைய எண்ணை ப்ளாக் செய்து வைத்திருந்தார். விசாரணைக்கு போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் அந்த எண்ணை 'அன்பிளாக்' செய்திருக்கிறார். இந்த கேள்விகளை எல்லாம் நிச்சயம் உயர்நீதிமன்றத்தில் விசாரணையின் போது முன்வைப்போம்" என்றார் ராஜபாண்டியன் .
யார் இந்த வித்ஜா?

பட மூலாதாரம், @arya_offl, Twitter
இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை தரப்பில், சைபர் க்ரைம் பிரிவு ஆய்வாளர் சுந்தரை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டோம்,
"காவல்துறை கைது செய்த முகமது அர்மான் மற்றும் முகமது ஹூசைனி இருவரும் நடிகர் ஆர்யாவை போல போலியாக சமூக வலைதள கணக்கு தயார் செய்து ஜெர்மனியை சேர்ந்த பெண்ணை ஏமாற்றி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த பெண்ணிடம் இருந்து பணம் வாங்கியதையதையும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
அதேபோல, வித்ஜா தரப்பு சொல்வது போல இவர்களிடம் வீடியோகால் எல்லாம் பேசவில்லை. வாய்ஸ் காலில் மட்டும்தான் பேசியிருக்கிறார்கள். கைதான இருவரும் நடிகர் ஆர்யாவுடைய ரசிகர்கள். அதனால்தான் அவரது பெயரை பயன்படுத்தி இப்படி ஏமாற்றி இருக்கிறார்கள். தற்போது இருவரையும், நீதிமன்ற காவலில் வைத்திருக்கிறோம். அடுத்த கட்ட விசாரணை விரைவில் நடக்கும்" என்றார்.
ஆர்யா தரப்பு விளக்கம் என்ன?
இது குறித்து நடிகர் ஆர்யா தரப்பின் விளக்கத்தை தெரிந்து கொள்ள அவரை தொடர்பு கொண்டோம்.
இந்த நிலையில் பெண் ஒருவர் கொடுத்த மோசடி புகாரில், மோசடி வழக்கிற்கும் ஆர்யாவுற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது காவல்துறையினரின் விசாரணையில் உறுதியாகி உள்ளதாக அவரது வழக்கறிஞர் ஜெரோம் கோவையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய,முகமது அர்மான்,முகமது ஹுசைனி பையாக் ஆகிய இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ஆனால், இந்த வழக்கில் இருவர் கைதான செய்தி வெளிவந்ததும் நேற்று இரவு ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்திருந்தார்.
அதில் சென்னை காவல்துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தினை டேக் செய்து காவல்துறை ஆணையாளர், மத்திய சைபர் க்ரைம் பிரிவு உதவி ஆணையாளர் மற்றும் சைபர் க்ரைம் படைக்கு உண்மையான குற்றவாளியை கைது செய்ததற்காக நன்றி தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கு தனக்கு மனதளவில் மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்திருந்ததாகவும், இந்த இக்கட்டான சூழலில் தன்னை நம்பிய அனைவருக்கும் நன்றி எனவும் குறிப்பிட்டிருந்தார்.
பிற செய்திகள்:
- பாஜக கே.டி.ராகவன் விவகாரம்: `சட்டப்படி என்ன நடவடிக்கை சாத்தியம்?'
- கே.டி. ராகவன் குறித்து வீடியோ வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் கட்சியிலிருந்து நீக்கம்
- பென்னிகுயிக் யார்? தமிழக சட்டப்பேரவையில் அவரது வீடு பற்றி ஏன் பேசப்படுகிறது?
- தாலிபன்கள் போதைப்பொருள் உற்பத்தியை தடை செய்வார்களா? உண்மை நிலை என்ன?
- தாலிபன்கள் விதித்த கெடுவுக்குள் மக்களை மீட்க முடியுமா? அமெரிக்காவுக்கு சிக்கல்
- கே.டி. ராகவன் விவகாரம்: அண்ணாமலை தரும் விளக்கம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












