கே.டி. ராகவன் குறித்து வீடியோ வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் கட்சியிலிருந்து நீக்கம்

பட மூலாதாரம், BJP
தமிழ்நாடு பா.ஜ.க. பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட யூடியூபரான மதன் ரவிச்சந்திரன், அவருக்கு உதவியாக இருந்த வெண்பா ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக பாஜக மேலிடம் அறிவித்திருக்கிறது.
'Madhan Diary' என்ற பெயரில் யு டியூப் சேனல் ஒன்றை நடத்திவந்த மதன் ரவிச்சந்திரன் செவ்வாய்க்கிழமையன்று காலையில், பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதையடுத்து, கே.டி. ராகவன் தனது கட்சிப் பதவியை ராஜிநாமா செய்தார். தன் மீதான குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக எதிர்கொள்ளப்போவதாகவும் அவர் காணொளியொன்றை தமது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த நிலையில் இது போன்ற பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, கட்சி அளவில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அறிவித்தார்.
இதற்கிடையே, அண்ணாமலையின் ஒப்புதலுடன்தான் ராகவன் தொடர்பான காணொளியை தாம் வெளியிடப்பட்டதாக அதே வீடியோவில் மதன் கூறியிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கே.டி. ராகவனை கட்சியில் ஓரங்கட்ட, இந்த வாய்ப்பை அண்ணாமலை பயன்படுத்திக்கொண்டாரா என சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டது.
ஆளுநர் ஒருவர் உட்பட மேலும் 15 பேர் குறித்த வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகவும் மதன் ரவிச்சந்திரன் அந்த காணொளியில் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று காலையில், கே.டி. ராகவனின் வீடியோ இடம்பெற்றிருந்த மதன் ரவிச்சந்திரனின் யூடியூப் சேனல் முடங்கியது. அவரே தனது சேனலை முடக்கினாரா அல்லது வேறு நிர்பந்தங்கள் இருந்தனவா என்பது குறித்து கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில், மதன் ரவிச்சந்திரனும் வெண்பாவும் பா.ஜ.கவிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் அறிவித்திருக்கிறார். இருந்தபோதும், அண்ணாமலை அமைத்துள்ள விசாரணைக் குழுவுக்கு மதன் ரவிச்சந்திரன், வெண்பா ஆகியோர் ஒத்துழைப்புத் தருவதாக தெரிவித்திருப்பதாகவும் பா.ஜ.கவின் அறிக்கை கூறுகிறது.
ஊடகவியலாளராக இருந்த மதன் ரவிச்சந்திரன் பல்வேறு தொலைக்காட்சிகளில் பணியாற்றிய பிறகு, கடந்த ஆண்டு அக்டோபரில் நடிகை குஷ்பு, முன்னாள் வருமானவரித் துறை அதிகாரி சரவணகுமார் ஆகியோருடன் தில்லி சென்று பா.ஜ.கவில் இணைந்தார்.
பிற செய்திகள்:
- தாலிபன்கள் போதைப்பொருள் உற்பத்தியை தடை செய்வார்களா? உண்மை நிலை என்ன?
- தாலிபன்கள் விதித்த கெடுவுக்குள் மக்களை மீட்க முடியுமா? அமெரிக்காவுக்கு சிக்கல்
- கே.டி. ராகவன் விவகாரம்: அண்ணாமலை தரும் விளக்கம் என்ன?
- பாலியல் காணொளி சர்ச்சை; கட்சிப் பதவியில் இருந்து விலகினார் கே.டி. ராகவன்
- அதிகமாக சாப்பிட தோன்றுகிறதா? மனநல பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்
- 'தாலிபன்களை எதிர்க்கத் தயார்' - சோவியத் படைகளை வென்ற ஆப்கானிஸ்தான் கிளர்ச்சி குழு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












