பாஜக கே.டி.ராகவன் விவகாரம்: `சட்டப்படி என்ன நடவடிக்கை சாத்தியம்?'

பட மூலாதாரம், K.T. RAGHAVAN FB
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாடு பா.ஜ.கவுக்குள் கே.டி.ராகவன் விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ` காணொளி சம்பவத்தில், வீடியோவில் உள்ள இருவரில் யார் முதலில் புகார் கொடுக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து இந்த விவகாரம் அடுத்தகட்டத்தை நோக்கி நகரும்' என்கின்றனர் வழக்கறிஞர்கள். சட்டப்படி கே.டி.ராகவன் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?
தமிழ்நாடு பா.ஜ.கவின் பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவன், ஊடக விவாதங்களின் மூலம் நன்கு அறியப்பட்டவர். தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் பதவிக்கான பெயர் அடிபடும்போதெல்லாம், ராகவனின் பெயரும் அதில் இடம்பெறும். பா.ஜ.கவில் தனக்கென ஆதரவாளர்கள் வட்டத்தோடு வலம் வந்த ராகவன், 24 ஆம் தேதி தான் பொறுப்பு வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகிவிட்டார். காரணம், அவர் தொடர்பான பாலியல் காணொளி காட்சி ஒன்று வலைதளங்களில் வைரலானதுதான். யூடியூபர் மதன் வெளியிட்ட இந்த வீடியோ காட்சிகள், கமலாலயத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமையன்று தனது ட்விட்டர் பதிவில் விளக்கம் அளித்த கே.டி.ராகவன், ` தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னைச் சார்ந்தவர்களுக்கும் நான் யாரென்று தெரியும். நான் 30 வருடங்களாக எந்தவிதப் பிரதிபலனும் இன்றி பணியாற்றி வருகிறேன். சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி ஒரு வீடியோ வெளிவந்ததை அறிந்தேன். என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்துவதற்காக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆலோசனை செய்தேன். என்னுடைய கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன், சட்டப்படி சந்திப்பேன், தர்மம் வெல்லும்' எனப் பதிவிட்டிருந்தார்.
அண்ணாமலை அமைத்த குழு
அதேநேரம், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் கூறிவிட்டே காணொளியை வெளியிட்டதாக யூடியூபர் மதன் கூறியிருந்தார். இதற்கு விளக்கமளித்த அண்ணாமலை, ` யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் என்னைச் சந்தித்துப் பேசியது உண்மை. முதல்முறையாக அவர் என்னைச் சந்தித்துப் பேசியபோது கட்சியின் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றிய வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் உடனடியாக அவர்கள் மீது கட்சிரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால், வீடியோ பதிவுகளை என்னிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டார். `அடுத்தநாளும் வலுவான வீடியோ பதிவுகள் உள்ளன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அடுத்தநாள் மறுபடியும் என்னை அலுவலகத்தில் சந்தித்த மதன் ரவிச்சந்திரன், `வலுவான வீடியோ பதிவுகள் உள்ளன. அவர்கள் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்திக் கூறினார். மேலும், உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், தான் வீடியோ பதிவுகளை வெளியிடப்போவதாக குறுஞ்செய்தியில் கூறியிருந்தார். `குற்றச்சாட்டு என்ன என்பதை அறியாமல் நடவடிக்கை எடுக்க முடியாது' என்ற என் முடிவில் நான் உறுதியாக இருந்தேன். ஆகவே என் பதிலில், `செய்துகொள்ளுங்கள்' என்று சுருக்கமாக முடித்துவிட்டேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், `சமூக வளைதளத்தில் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், இதுபோல இன்னும் வேறு நபர்களின் பதிவுகளும் வெளிவர இருக்கிறது எனக் கூறியிருப்பதன் மூலம் அவருக்கு ஏதேனும் உள்நோக்கம் இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இது கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல' எனவும் அண்ணாமலை சாடியிருந்தார். கூடவே, `கட்சியின் மாண்பு கருதி குற்றம் சுமத்தப்பட்ட உறுப்பினர்கள், நிர்வாகிகள் மீது விசாரணை நடத்த மாநில செயலாளர் மலர்கொடி தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைத்து வீடியோ பதிவில் உள்ள உண்மைத்தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
கே.டி.ராகவன் மீது மட்டுமா புகார்?

பட மூலாதாரம், K.T. RAGHAVAN FB
இந்நிலையில், `கே.டி.ராகவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறி தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபுவுக்கு கரூர் எம்.பி ஜோதிமணி புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், `தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் முக்கிய தலைவர்கள் பலர் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க தலைவர் கலிவரதன் மீது, அதே கட்சியைச் சேர்ந்த மகளிர் அணி பொதுச் செயலாளர் ஒருவர் பாலியல் புகார் மற்றும் பண மோசடிப் புகார் ஒன்றை அளித்தார்.
அதேபோல், பா.ஜ.கவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியின் தலைவர் சண்முகம் சுப்பையா, அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஒரு பெண்ணிடம் பாலியல் வக்கிரத்துடன் நடந்து கொண்ட வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது பூஜை அறையின் அருகில் நின்று கொண்டு ஒரு பெண்ணிடம் கே.டி.ராகவன் தகாத வகையில் நடந்து கொண்டுள்ளார். பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள் அ.தி.மு.க தலைவர்களால் கொடுமையான பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். அந்த வழக்கிலும் இன்று வரையில் எந்தவிதமான தீவிர நடவடிக்கைகளும் இல்லை. அதில், பெயரளவுக்கு மட்டும் அ.தி.மு.க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், `கடந்த ஆட்சியில் மூடி மறைக்கப்பட்ட பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு குற்றங்கள் உள்ளிட்ட கொடுமையான பாலியல் வண்புணர்வு குற்றங்களையும் அ.தி.மு.க, பா.ஜ.க அரசுகளால் பாதுகாக்கப்பட்ட பாலியல் குற்றவாளிகளையும் இந்த அரசு உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கும் என்கிற உத்திரவாதத்தை, நம்பிக்கையை இந்த அரசு மக்களுக்கு அளிக்கும் என்று நம்புகிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.
பின்னணியில் யார்?

பட மூலாதாரம், ANNAMALAI FB
`கே.டி.ராகவன் விவகாரத்தில் பா.ஜ.கவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?' என அக்கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
"இது தொடர்பாக விசாரணைக் குழு ஒன்றை மாநிலத் தலைமை அமைத்துள்ளது. அதன்பேரில் நடவடிக்கை எடுக்க உள்ளனர். இதைத்தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை," என்றார்.
அதேநேரம், பாலியல் காணொளி குறித்துப் பேசும் பா.ஜ.க நிர்வாகிகள் சிலர், ``இதை ஒரு திட்டமிட்ட வேலையாகத்தான் பார்க்கிறோம். பா.ஜ.க நிர்வாகிகளிள் பலரின் வீடியோக்கள் உள்ளதாகவும் சொல்வதைப் பார்த்தால் இதன் பின்னணியில் வேறு சிலர் இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஒரு தனி நபராக இதனைச் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை.
யாரோ ஒருவரின் முகமூடியாக யூடியூபர் இருப்பதாக அறிகிறோம். அது யாராக இருக்கலாம் என்ற விவாதம் கட்சி நிர்வாகிகள் மத்தியில் நடந்து வருகிறது. இன்னும் பலரின் வீடியோ காட்சிகள் இருப்பதாகத் தகவல் வருவதால், மாநில நிர்வாகிகள் பலரும் பேசவே பயப்படுகின்றனர். உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ள சூழலில், மக்கள் மத்தியில் பா.ஜ.கவுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைக்கும் வழியைப் பற்றியும் ஆலோசனை நடந்து வருகிறது," என்கின்றனர்.
சட்டப்படி என்ன செய்ய முடியும்?

பட மூலாதாரம், Getty Images
``பாலியல் காணொளி விவகாரத்தில் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?" என மூத்த வழக்கறிஞர் ராமலிங்கத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
``இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து புகார் வரவில்லையென்றால், இருவரும் விருப்பப்பட்டு பேசியதாக எடுத்துக் கொள்ளலாம். இதைத்தவிர, `இது என்னுடைய வீடியோ கிடையாது, என் உருவத்தை மாஃர்பிங் செய்து வெளியிட்டுவிட்டனர்' எனக் கூறி கே.டி.ராகவன் ஒரு புகார் கொடுத்தால் அதன்பேரில் விசாரணை நடத்தலாம்.
அவ்வாறு புகார் கொடுத்தால், `பாதிக்கப்பட்ட நபர்' என்ற வரிசையில் ராகவன் வருகிறார். மேலும், `நான் ஒரு அரசியல் பிரபலம். என்னுடைய நற்பெயரைக் குலைக்க பொய்யாக புனைந்து வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளனர்' எனவும் புகாரில் ராகவன் கூறலாம். இது இரண்டும் நடக்கவில்லையென்றால், தன்னிச்சையாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது," என்கிறார்.
``வீடியோ வெளியிட்ட நபர் மீது சைபர் கிரைம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா?" என்றோம். ``அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் எனத் தோன்றவில்லை. இதுபோன்ற வழக்குகளில், அந்த வீடியோ உண்மையாக இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. `அரசியலில் இதுபோன்ற நபர்களை சுத்தப்படுத்துவதற்காக வெளியிட்டேன்' என அந்த யூடியூபர் கூறலாம். இந்த விவகாரத்தில் பழிவாங்க வேண்டும் என நினைத்தால் அரசு நடவடிக்கை எடுக்கலாம்" என்கிறார்.
மேலும், ``தற்போது பா.ஜ.க பக்கம் சேதாரம் அதிகமாகியுள்ளது. அதனால், உள்கட்சி விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதிலேயே அவர்களுக்கு நேரம் போய்விடும். முன்பொரு தருணத்தில், `கமலாலயத்தில் சி.சி.டி.வி போட வேண்டும்' அவர்கள் கட்சியின் தேசிய நிர்வாகி ஒருவரே கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் யார் முதலில் புகார் கொடுக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் அடுத்தகட்ட நடவடிக்கைகளை கவனிக்க முடியும்" என்கிறார்.
பிற செய்திகள்:
- தாலிபன்கள் போதைப்பொருள் உற்பத்தியை தடை செய்வார்களா? உண்மை நிலை என்ன?
- தாலிபன்கள் விதித்த கெடுவுக்குள் மக்களை மீட்க முடியுமா? அமெரிக்காவுக்கு சிக்கல்
- கே.டி. ராகவன் விவகாரம்: அண்ணாமலை தரும் விளக்கம் என்ன?
- பாலியல் காணொளி சர்ச்சை; கட்சிப் பதவியில் இருந்து விலகினார் கே.டி. ராகவன்
- அதிகமாக சாப்பிட தோன்றுகிறதா? மனநல பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்
- 'தாலிபன்களை எதிர்க்கத் தயார்' - சோவியத் படைகளை வென்ற ஆப்கானிஸ்தான் கிளர்ச்சி குழு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












