மக்கள் ஆசி யாத்திரை: பாஜக கொடி நிறத்தில் வண்ணம் பூசப்பட்ட குதிரை - மேனகா காந்தியின் அமைப்பு கொடுத்த புகார்

பாஜக கொடி நிறத்தில் வண்ணம் பூசப்பட்ட குதிரை

பட மூலாதாரம், Akanksha Tripathi, Twitter

படக்குறிப்பு, பாஜக கொடி நிறத்தில் வண்ணம் பூசப்பட்ட குதிரை

(இன்று 22.08.2021 ஞாயிற்றுக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)

குதிரை மீது பாஜக கொடி நிறத்தில் வண்ணங்கள் பூசப்பட்டு, அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னங்கள் வரைந்தது குறித்து காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு இருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தி வெளியாகி உள்ளது.

பாஜக அமைச்சர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் ஆசி யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் இந்திய அரசில் அமைச்சராக இருக்கும் ஜோதிராதித்ய சிந்தியாவும் ஆசி யாத்திரையை நடத்தினார். அது கடந்த வியாழக்கிழமையோடு நிறைவடைந்தது.

மத்தியப் பிரதேசத்தில், இந்தூர் நகரில் ஜோதிராதித்ய சிந்தியா கலந்து கொண்ட மக்கள் ஆசி யாத்திரையில், அவர் பயணித்துக் கொண்டிருந்த வாகனத்துக்கு அருகிலேயே ஒரு குதிரையும் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தது.

அக்குதிரை மீது பாஜகவின் கொடி நிறத்தில் வண்ணங்கள் பூசப்பட்டு ஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட்டது. அக்குதிரையின் மீது ஆங்கிலத்தில் பாஜகவின் கட்சிப் பெயரும், கட்சி சின்னமும் வரையப்பட்டு இருந்தன.

விலங்குகளுக்கான மக்கள் அமைப்பு (People for Animal) என்கிற விலங்கு நலன் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த ப்ரியான்ஷூ ஜெயின் என்பவர், சன்யோகிதகன்ச் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு, குதிரையை (விலங்குகளை) இப்படி வண்ணம் பூசி ஊர்வலமாக கொண்டு செல்வது கொடூரமானது என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது பீடா 1960 சட்டத்தின்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறும் புகார் கொடுத்திருக்கிறார்.

இந்த தன்னார்வ அமைப்பு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மேனகா காந்தி நிறுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாகவும், குதிரையின் உரிமையாளரை தேடி வருவதாகவும், இதுவரை முதல் தகவல் அறிக்கை தயார் செய்யப்படவில்லை எனவும் காவல் துறை ஆய்வாளர் ராஜீவ் த்ரிபாதி கூறியுள்ளார். என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைப்புக்கு இழப்பீடாக தமிழகத்துக்கு ரூ.5,600 கோடி ஏன் வழங்க கூடாது?- மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 41-ல் இருந்து 39 ஆக குறைத்ததால், கடந்த 14 தேர்தல்களில் ஏற்பட்ட இழப்புக்கு மத்தியஅரசு இழப்பீடாக தமிழகத்துக்கு ஏன் ரூ.5,600 கோடி வழங்க கூடாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.

தென்காசி நீண்ட காலமாக தனி தொகுதியாக இருப்பதால் அதைபொது தொகுதியாக மாற்றக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதைவிசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில்:

தென்காசி தொகுதியில் வசிக்கும் பட்டியலின, பழங்குடியினத்தவர் மக்கள்தொகை பிற சமூகத்தினர் எண்ணிக்கையைவிட அதிகமாக இருப்பதன் அடிப்படையிலேயே, அது தனி தொகுதியாக மறுவரையறை செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. எனவே, மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையது அல்ல. இருப்பினும், இந்த வழக்கில் முக்கியமான ஒரு விஷயத்தை இந்தநீதிமன்றம் ஆராய விரும்புகிறது.

தமிழகத்தில் கடந்த 1962-ல் மக்களவைக்கு 41 எம்.பி.க்கள் இருந்துள்ளனர். தமிழகமும், ஆந்திராவும் மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை சிறப்பாக அமல்படுத்தியதன் காரணமாக, தமிழகத்தில் 41 ஆக இருந்த எம்.பி.க்கள் எண்ணிக்கை 39 ஆகவும், ஆந்திராவில் 42 ஆக இருந்த எம்.பி.க்கள்எண்ணிக்கை 40 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அரசியல் அதிகாரம் வெகுவாக பறிபோய் இருக்கிறது.

தமிழகத்தில் 1967 முதல் 2019 வரை நடந்த 14 மக்களவை தேர்தல்களில் தலா 2 எம்.பி.க்கள் என மொத்தம் 28எம்.பி.க்கள் மூலம் கிடைத்திருக்க வேண்டிய உரிமை, பலன்களை தமிழகம் இழந்துள்ளது.

மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதன் மூலமாக தொகுதி மறுவரையறை என்ற பெயரில் எம்.பி.சீட்டுகளின் எண்ணிக்கையை குறைத்தால், அது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயலாகும்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மூலமாக மாநிலத்துக்கு வளர்ச்சிப் பணிகளுக்காக 5 ஆண்டுகளில் ரூ.200 கோடி கிடைக்கும் என தோராயமாக கணக்கிட்டால், கடந்த 1967 முதல் 2019 வரை நடந்த 14 தேர்தல்களில் 2 எம்.பி.க்களை இழந்து தமிழகம் சந்தித்த இழப்புக்கு மத்திய அரசு ஏன் ரூ.5,600 கோடியை இழப்பீடாக தமிழகத்துக்கு வழங்கக்கூடாது.

இனி வரும் தேர்தல்களில் மக்கள்தொகையை அடிப்படையாக வைத்து தமிழக எம்.பி.க்கள் எண்ணிக்கையை குறைக்க ஏன் தடை விதிக்க கூடாது. மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கையை குறைத்தால், அதற்கு பதிலாக ஏன் மாநிலங்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கையை உயர்த்த கூடாது என மத்திய அரசு 4 வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்த வழக்கில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளையும் எதிர்மனுதாரர்களாக தாமாக முன்வந்து சேர்க்கிறோம். அவர்களும் இதுதொடர்பாக 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்திருப்பதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

நிலவொளியில் தாஜ்மஹாலை கண்டுரசிக்க மீண்டும் அனுமதி

தாஜ்மஹால்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாஜ்மஹால்

காதலின் சின்னமான தாஜ்மஹாலை நிலவொளியில் கண்டு ரசிப்பது அலாதியானது. இதற்காக ஒவ்வொரு பெளர்ணமியை ஒட்டியும் இரவுநேரத்தில் தாஜ்மஹாலை கண்டு ரசிக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த பல மாதங்களாக அனுமதி வழங்கப்படவில்லை.

தற்போது நிலவொளியில் தாஜ்மஹாலை பார்வையிட மீண்டும் அனுமதி அளித்து இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெளர்ணமி என்பதால், நேற்று, நாளை (திங்கட்கிழமை) இரவு, நாளை மறுநாள் இரவு என மூன்று நாட்கள் இரவு நேர பார்வைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

முன்பதிவு அடிப்படையில் ஒரு பார்வை நேரத்திலும் 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தினத்தந்தி செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 139 மி.மீ. மழை பதிவு - டெல்லியில் 13 ஆண்டுகளில் இல்லாத கனமழை

டெல்லியில் கனமழை

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, டெல்லியில் கனமழை

டெல்லியில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில், ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 139 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக தினமணியில் செய்தி பிரசுரமாகியுள்ளது.

மேலும், சனிக்கிழமை அன்று டெல்லிக்கு 'ஆரஞ்சு நிற' எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் "டெல்லியில் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்துள்ளது. இதன் காரணமாக வெப்பநிலை வெகுவாகக் குறைந்துள்ளது. டெல்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 139 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ரிட்ஜ் வானிலை ஆய்வு மையத்தில் 149.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இது குறைந்தபட்சம் கடந்த 13 ஆண்டுகளில் ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழையாகும். எப்போதும், இல்லாத வகையில் 1961-இல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி அதிகபட்ச அளவாக 184 மி.மீ. மழை பதிவாகி இருந்தது" என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஞாயிற்றுக்கிழமை மோசமான வானிலை இருப்பதற்கான 'மஞ்சள் நிற' எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :