கோவிஷீல்டு, கோவேக்சின் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒவ்வொரு டோஸ் வழங்கலாமா? புதிய ஆய்வுக்கு இந்தியாவில் அனுமதி

பட மூலாதாரம், Getty Images
கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பு மருந்துகளின் இரு வெவ்வேறு டோஸ்களை செலுத்துவது குறித்து ஆய்வு செய்ய இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் அனுமதி அளித்துள்ளது.
இந்த இரு தடுப்பு மருந்துகளே இந்தியாவில் பெரும்பான்மையாக வழங்கப்படுகின்றன.
இது குறித்த ஆய்வு மற்றும் மனித உடலில் செலுத்தி மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியால் மேற்கொள்ளப்படும்.
இரண்டு டோஸ்களையும் வெவ்வேறு தடுப்பு மருந்துகளாக வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று நிடி ஆயோக்கின் சுகாதார உறுப்பினர் வி.கே. பால் செவ்வாய் கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வுக்கு அனுமதி வழங்கப்படும் முன்னரே இரு தடுப்பூசிகளையும் இரு வேறு டோஸ்களாக வழங்குவது குறித்த ஆய்வு ஒன்றை இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் கூறியுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஆய்வு
கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகளையும் செலுத்திக்கொண்டவர்களுக்கு உண்மையா்வே நல்ல முடிவுகள் கிடைக்கின்றன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த வாரம் தெரிவித்தது.
எனினும் இந்த ஆய்வு முடிவுகள் இன்னும் துறைசார் வல்லுநர்களால் ஆராயப்படவில்லை. அவ்வாறு வல்லுநர்கள் ஆராய்ந்து இந்த ஆய்வு முடிவுகளை அங்கீகரித்தால், இந்தியாவில் வெவ்வேறு தடுப்பு மருந்துகளின் இரண்டு டோஸ்களை வழங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 18 பேரிடம் செய்யப்பட்ட ஆய்வில் இந்த முடிவுகள் கிடைத்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இரண்டு டோஸ்களும் ஒரே தடுப்பூசி வழங்கப்படுவதற்கு பதிலாக, இவர்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பு மருந்துகள் தலா ஒரு டோஸ் தவறுதலாக வழங்கப்பட்டது. ஆறு வார கால இடைவெளியில் இவர்களுக்கு இந்த இரு டோஸ் தடுப்பு மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் எவை?
இந்தியாவில் அவசர கால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ள கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் - வி மற்றும் மாடர்னா ஆகிய தடுப்பூசிகள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
ஐந்தாவதாக அனுமதி வழங்கப்பட்ட ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை ஒரு டோஸ் செலுத்தினால் போதும்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராசெனீகா மருந்து நிறுவனம் ஆகியவை தயாரித்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு எனும் பெயரில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுவே இந்தியாவில் இதுவரை வழங்கப்பட்ட தடுப்பூசியில் சுமார் 90% ஆகும்.
இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் தயாரித்த கோவேக்சின் மற்றும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி ஆகிய தடுப்பூசிகளும் இந்தியாவில் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்துடன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தயாரித்த தடுப்பு மருந்து மற்றும் ஒரு டோஸ் மட்டுமே செலுத்த வேண்டிய ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பு மருந்து ஆகியவற்றுக்கும் இந்திய அரசு அவசரகால பயன்பாட்டு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய மருந்து நிறுவனமான சிப்லாவுக்கு, அமெரிக்காவின் மாடர்னா தடுப்பு மருந்தை இறக்குமதி செய்வதற்கான ஒப்புதலை இந்திய அரசு வழங்கியுள்ளது.
பயாலஜிகல் - இ நிறுவனத்துடன் ஜான்சன் அண்ட் ஜான்சன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் அதன் தடுப்பூசி தயாரித்து விநியோகம் செய்யப்படும்.
பிற செய்திகள்:
- ரூ.1.25 லட்சம் கோடி ரூபாய் கடனில் மின் வாரியம்: கட்டணத்தை உயர்த்துவதுதான் ஒரே தீர்வா?
- பருவநிலை மாற்றம் உங்களை மோசமாக பாதிக்கும் 4 வழிகள் - முழு விவரங்கள்
- ஏடிஎம்மில் பணம் இல்லையா? இனிமேல் வங்கிகளுக்கு அபராதம் - ஆர்பிஐ அதிரடி
- மறதி நோயால் கவலையா? - நல்ல செய்தி சொல்கிறது புதிய தொழில்நுட்பம்
- 'யானை வருது; வழிய விடுங்க' - ஒன்றரை லட்சம் பேரை இடம்பெயர வைத்த சீனா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












