தமிழகத்தில் கறுப்புப் பூஞ்சை பாதிப்பால் 17 பேர் பலி - ஊடகச் செய்திகள்

கறுப்புப் பூஞ்சை

பட மூலாதாரம், Getty Images

(இன்று (ஜூன் 2, 2021, புதன்கிழமை) இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

கறுப்புப் பூஞ்சை நோய்க்கு தமிழ்நாட்டில் இதுவரை 17 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

"தமிழகம் முழுவதும் இதுவரை 518 போ் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் அனைவரும், அரசு மற்றும் பல்வேறு தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை நோய்க்கு இதுவரை 17 போ் உயிரிழந்துள்ளனா். கட்டுப்பாடற்ற சா்க்கரை நோயாளிகள், புற்றுநோயாளிகள், ஸ்டீராய்டு போன்ற எதிா்ப்பாற்றல் மருந்து சிகிச்சையில் இருப்பவா்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு வருகிறது எனக் கூறப்படுகிறது" என அமைச்சர் கூறியுள்ளார்.

பூஞ்சை நோய்க்கு ஆரம்ப நிலையிலேயே சிறிய அறிகுறிகளுடன் வருபவா்களுக்கு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. அதற்கென பிரத்யேகமாக புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய மருத்துவமனைகளில் அனைத்து நோய்களுக்கும் 'ஸ்டீராய்டு' தான் கொடுக்கப்படுகிறது. ஆனால் அதன் மூலம் அங்கு யாருக்கும் கருப்பு பூஞ்சை வரவில்லை. எனவே, இதற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ள 13 மருத்துவ வல்லுநா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்க சிறப்புப் பிரிவு தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறியதாக தினமணி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா மூன்றாவது அலைக்கு தயாராகும் கர்நாடகா

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

கொரோனாவின் மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளை கர்நாடக அரசு செய்து வருவதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் தனியாக குழந்தைகள் பிரிவை உருவாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா மரபீனி மாதிரிகளை ஆய்வு செய்வதற்கான ஆய்வகங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு மருத்துவமனையிலும் 70 முதல் 80 படுக்கைகளைக் கொண்ட குழந்தைகள் பிரிவு உருவாக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறியுள்ளார்.

இதற்கென கூடுதலாக செவிலியர்களை நியமிக்கவும் மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது. மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சி முகாம்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

19 வயது வரையிலானவர்கள் குழந்தைகள் பிரிவில் சிகிச்சை பெற வேண்டும் எனவும் அதற்கென விழிப்புணர்வு அளிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இரண்டாம் அலையின்போது பரவிய கொரோனா திரிபின் மரபீனி வரிசையை ஆய்வு செய்வதற்கான ஏழு ஆய்வகங்களை மாநில அரசு அமைக்க இருக்கிறது. இதன் மூலம் சிகிச்சை முறைகளில் திருத்தம் செய்து முடியும் எனவும் மாநில அரசு நம்புவதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டுப்பாடம் குறித்து மோதிக்கு வீடியோ மூலம் புகார் அளித்த காஷ்மீர் சிறுமி: நடவடிக்கைக்கு உத்தரவு

மோதி

பட மூலாதாரம், SAJJAD HUSSAIN

அதிக வீட்டுப்பாடம் தருவதாக பிரதமர் மோடிக்கு வீடியோ மூலம் புகார் அளித்துள்ளார் காஷ்மீரைச் சேர்ந்த ஒரு சிறுமி. அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார் என தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறுமியின் வீடியோவை ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குழந்தைகளுக்கு அதிக வீட்டுப்பாடம் தருவதாக அந்த வீடியோவில் பிரதமர் மோதியிடம் சிறுமி புகார் கூறுகிறார்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாக மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதாக 6 வயதான அந்தச் சிறுமி கூறும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.

"ஆசிரியர்கள் ஏன் சிறு குழந்தைகளுக்கு அதிக வேலை கொடுக்கிறார்கள் மோதி ஐயா. ஆறு அல்லது ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அதிக வேலை கொடுக்க வேண்டும்" என அந்தக் காணொளியில் சிறுமி கூறியிருந்தார். தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறது.

எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி

பள்ளி

பட மூலாதாரம், Getty Images

ஊரடங்கு முடிந்த பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து தெரிவிக்கப்படும் என்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்படுவதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக பள்ளிகளில் கடந்த கல்வியாண்டு முழுவதும் ஆன்லைன், வாட்ஸ்-அப் மற்றும் கல்வித் தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து நோய்த் தொற்றின் தாக்கம் குறையாததால், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வும், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வும் நடத்தப்படாமலேயே அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை அரசு அறிவித்தது.

இந்த நிலையில், தொடக்கக்கல்வி இயக்ககம் சார்பில் நேற்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

அதில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தளர்வில்லா ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் எனவும் தினத்தந்தியின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுப்பூசிக்கு லஞ்சம் வாங்கியதாக மருத்துவமனை ஊழியர்கள் 2 பேர் கைது

தடுப்பூசி

பட மூலாதாரம், Reuters

சென்னையில் தடுப்பூசி செலுத்துவதற்கு லஞ்சம் வாங்கியதாக மருத்துவமனை ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இந்து தமிழ்திசை செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையை அடுத்த புழல் லட்சுமிபுரம் கல்பாளையத்தை சேர்ந்தவர் நந்தகோபால் தனது மனைவியுடன் புழல் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளச் சென்றுள்ளார்.

அப்போது, அங்கிருந்த பணியாளர்கள் தடுப்பூசி காலியாகிவிட்டதாக கூறி இரண்டு நாட்களுக்கு பிறகு வரும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து இருவரும் வீடு திரும்ப இருந்த நிலையில், அங்கு தற்காலிக காவலராக பணியாற்றிய கதிர்வேடு பகுதியைச் சேர்ந்த தினகரன் என்பவர் ரூ.500 கொடுத்தால் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தற்காலிக கம்பவுண்டராக பணியாற்றிய புளியந்தோப்பைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரிடம் நந்தகோபால் ரூ.300 கையில் கொடுத்துள்ளார். மீதி 200 ரூபாயை கூகுள்பே மூலம் அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து தடுப்பூசி போட இருவரையும் மருத்துவரிடம் அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் நந்தகோபால் புகார் அளித்ததைத் தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்திருப்பதாக இந்து தமிழ்திசை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :