தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: 4 தொகுதிகளில் வேட்பாளர் யார்? ராகுலுக்கு சென்ற பட்டியல்! தமிழ்நாடு காங்கிரஸில் என்ன நடக்கிறது?

ராகுல் காந்தி

பட மூலாதாரம், TNCC

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தி.மு.க கூட்டணியில் 25 இடங்கள் கிடைத்தாலும் அதனைப் பங்கிட்டுக் கொடுப்பதில் காங்கிரஸ் தலைமை திணறி வருகிறது. வேளச்சேரி, மயிலாடுதுறை, விளவங்கோடு, குளச்சல் தொகுதிகளில் யாருக்கு சீட் என்பது ராகுல்காந்தியின் கைகளில் இருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் என்ன குழப்பம்?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 25 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதற்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் 13 ஆம் தேதி இரவு வெளியானது. கூடவே, கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் விஜய் வசந்த் போட்டியிட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.

வாரிசுகள் பட்டியல்

முதல்கட்டமாக வெளியான 21 தொகுதிகளில், பொன்னேரி - துரை சந்திரசேகர், ஸ்ரீபெரும்புதூர் - செல்வப்பெருந்தகை, சோளிங்கர் - ஏ.எம்.முனிரத்னம், ஊத்தங்கரை - ஜே.எஸ்.ஆறுமுகம், கள்ளக்குறிச்சி - மணிரத்னம், ஓமலூர் - ஆர்.மோகன் குமாரமங்கலம், ஈரோடு கிழக்கு - திருமகன் ஈவேரா, உதகை - ஆர்.கணேஷ், கோவை தெற்கு - மயூரா எஸ்.ஜெயக்குமார், உடுமலைப்பேட்டை - கே.தென்னரசு, விருதாச்சலம் - எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன், அறந்தாங்கி - எஸ்.டி.ராமச்சந்திரன்

காரைக்குடி - எஸ்.மாங்குடி, மேலூர் - டி.ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் -பி.எஸ்.டபிள்யூ. மாதவராவ், சிவகாசி - அசோகன், திருவாடானை - ஆர்.எம்.கருமாணிக்கம், ஸ்ரீவைகுண்டம் - ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், தென்காசி - எஸ்.பழனி நாடார், நாங்குநேரி - ரூபி ஆர்.மனோகரன், கிள்ளியூர் - எஸ்.ராஜேஷ்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இதில், திருவாடானையில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமியின் மகன் கரியமாணிக்கம், அறந்தாங்கியில் திருநாவுக்கரசரின் மகன் எஸ்.டி ராமச்சந்திரன், ஓமலூர் தொகுதியில் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலம், ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா ஆகியோர் போட்டியிடுவதும் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிரிகளுக்கு உதவும்!

இந்தப் பட்டியலை எதிர்த்து ஆரணி தொகுதி எம்.பியான விஷ்ணு பிரசாத் தனது ஆதரவாளர்களுடன் சத்தியமூர்த்தி பவனுக்குள் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து கரூர் எம்.பி ஜோதிமணியும், பணம் கொடுப்பவர்களுக்குத்தான் காங்கிரஸ் கட்சி சீட் வழங்குவதாகத் தெரிவித்தார். இதனால் ஆவேசப்பட்ட விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், `சிலர் விளம்பரத்திற்காக காங்கிரஸ் இயக்கத்துக்கு மிக பெரிய இழிவை ஏற்படுத்தி வருகிறார்கள். எதிரிகளுக்கு உதவும் துரோகிகளை கண்டுகொள்ளுங்கள்' என ட்விட்டரில் பதிவிட்டார்.

வெலவெலக்க வைக்கும் வேளச்சேரி!

காங்கிரஸ்

பட மூலாதாரம், TNCC

அதேநேரம், 25 தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மட்டுமே வெளியாகியுள்ளது. விளவங்கோடு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ விஜயதரணிக்கும் குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ பிரின்ஸுக்கும் சீட் கொடுக்கக் கூடாது என அந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அதேபோல், மயிலாடுதுறை தொகுதியில் தனது ஆதரவாளரான ராஜ்குமாருக்கு மணிசங்கர் ஐயர் சீட் கேட்கிறார்.

அங்கு சிறுபான்மை மக்கள் அதிகம் வசிப்பதால் காங்கிரஸ் கட்சியின் எஸ்.எம்.இதயத்துல்லாவும் அமீர்கானும் சீட் கேட்கின்றனர். சென்னையில் ஒரே ஒரு தொகுதியாக வேளச்சேரி மட்டும் ஒதுக்கப்பட்டதால் அசன் மவுலானா, முத்தழகன், அடையாறு பாஸ்கர், சுதா என ஏராளமானோர் சீட் கேட்கின்றனர். இதனால் திகைத்துப் போன தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்சியின் மத்திய தேர்தல் குழுவின் பார்வைக்குப் பட்டியலை அனுப்பி வைத்திருக்கிறார்.

யார் அந்த 4 பேர்?

இதன் காரணமாக, தனக்கு சீட் ஒதுக்கப்படாவிட்டால் வேறு முடிவை எடுக்கப் போவதாக விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ விஜயதரணி பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய விஜயதரணி ஆதரவாளர் ஒருவர், `` விளவங்கோடு தொகுதியை சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு ஒதுக்கக் கூடாது என அந்த மாவட்ட தலைவர் உள்பட 10 பேர் மட்டுமே பிரச்னை செய்கின்றனர். அவர்களில் 4 பேர் எந்தக் கட்சி என்றே தெரியவில்லை. `சிட்டிங் தொகுதிகளில் தவறு செய்ய வேண்டாம்' என கே.எஸ்.அழகிரியிடம் விஜயதரணி கூறிவிட்டார்," என்றார்.

டெபாசிட் இழந்த அ.தி.மு.க!

கடந்த 2011 தேர்தலில் விளவங்கோட்டில் 24,000 வாக்குகள் வித்தியாசத்தில் விஜயதரணி வென்றார். அதற்கு அடுத்து வந்த 2016 தேர்தலில் 32,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2016 தேர்தலில் அ.தி.மு.க டெபாசிட் இழந்த ஒரே தொகுதியும் இதுதான். காங்கிரஸின் ஒரே ஒரு பெண் எம்.எல்.ஏவாகவும் இருக்கிறார். அவரைப் போட்டியிட வைக்கக் கூடாது என்பதில் சிலர் உறுதியாக உள்ளனர். ஆனால், அகில இந்திய தலைமை உறுதியாக சீட் கொடுக்கும் என நம்புகிறார். குளச்சல் தொகுதியின் எம்.எல்.ஏ பிரின்ஸுக்கும் இதே பிரச்னைகள்தான்" என்றார்.

காரணம் தெரியவில்லை!

காங்கிரஸ்

பட மூலாதாரம், TNCC

இதையடுத்து, எம்.எல்.ஏ விஜயதரணியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` எனக்குக் காரணங்கள் தெரியவில்லை. டெல்லியில் மத்திய தேர்தல் குழு இன்னும் கூடவில்லை. எனது தொகுதியில் வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. நான்கு தொகுதிகளில் யார் வேட்பாளர்கள் என்பதை கட்சியின் தேர்தல் குழு விரைவில் கூடி அறிவிப்பை வெளியிடும். அதன்பிறகு பேசுகிறேன்" என்றதோடு முடித்துக் கொண்டார்.

ராகுல் கையில் பட்டியல்

`4 தொகுதிகளின் வேட்பாளர் பிரச்னை எப்போது தீரும்?' என தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் க.ராமலிங்க ஜோதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` தி.மு.க கூட்டணியில் 25 தொகுதிகளை வாங்கியதால், நிறைய பகைமை பாராட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அனைவருமே போட்டி போட விரும்புகிறார்கள். அதனால் எங்கள் கட்சித் தலைமை சிரமப்படுகிறது. சென்னையில் ஒரே ஒரு தொகுதியைக் கொடுத்ததால் அதிகப்படியான போட்டி ஏற்பட்டுள்ளது. சொல்லப்போனால், தொகுதிகளை இன்னும் கூடுதலாகப் பெற்றிருக்க வேண்டும். நான்கு தொகுதிகளில் யாரை நிறுத்தலாம் என்பது குறித்த பட்டியல் ராகுல்காந்தியின் கவனத்துக்குச் சென்றிருக்கிறது. அதில், சிறந்த வேட்பாளரை அவர் தேர்வு செய்து கொடுப்பார் என நம்புகிறோம்" என்றார்.

வேட்புமனுத்தாக்கலுக்கான இறுதித் தேதி நெருங்கி வருவதால், காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் கூடுதல் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் முடிவையும் அவர்கள் எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். பட்டியல் வெளியான பிறகு சத்தியமூர்த்தி பவனில் மீண்டும் சர்ச்சை வெடிக்குமா என்பது ஓரிரு நாள்களில் தெரிந்துவிடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :