கருணாநிதி, ஜெயலலிதா போட்டியிடாத முதல் சட்டமன்றத் தேர்தலா இது? உண்மை என்ன?

கருணாநிதி, ஜெயலலிதா
படக்குறிப்பு, கருணாநிதி, ஜெயலலிதா
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி இறந்த பிறகு திமுக சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது. இந்தத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சில நாள்களுக்கு முன்பு வெளியிட்டார். இந்தப் பட்டியல் வெளியானதுமே, கருணாநிதியின் பெயர் இல்லாத முதல் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இது என்று கூறி பலர் தங்கள் வருத்தத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தினர்.

அதைப் போலவே ஜெயலலிதா அரசியலுக்கு வந்த பிறகு அவரது பெயர் இல்லாமல் வெளியான முதல் அதிமுக வேட்பாளர் பட்டியல் என்று அதிமுக வேட்பாளர் பட்டியலையும் சிலர் கருதுகின்றனர்.

உண்மையில் மு. கருணாநிதியும் ஜெயலலிதாவும் உயிரோடு இருக்கும்போது எல்லா சட்டமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டிருக்கிறார்களா?

இதற்கு முன்பே சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் கருணாநிதி பெயர் இல்லாமல் இருந்திருக்கிறது. ஜெயலலிதா போட்டியிடாத சட்டமன்றத் தேர்தலும் இருந்திருக்கிறது.

1949ல் தி.மு.க. துவங்கப்பட்டது. 1952ல் நடந்த முதல் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. போட்டியிடவில்லை. 1957ல் நடந்த தேர்தலில் இருந்துதான் அக்கட்சி போட்டியிட ஆரம்பித்தது. அந்தத் தேர்தலில் முதன் முதலாக குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட மு. கருணாநிதி 8,296 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அதற்குப் பிறகு தொடர்ச்சியாக 1962ல் தஞ்சாவூர், 1967, 1971ல் சைதாப்பேட்டை, 1977ல் அண்ணா நகர் என தொடர்ந்து போட்டியிட்டார். போட்டியிட்ட எல்லாத் தேர்தல்களிலுமே வெற்றியும்பெற்றார்.

1980ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவும் காங்கிரசும் கூட்டணி அமைத்து தலா 113 இடங்களில் போட்டியிட்டன. ஆனால், இந்தத் தேர்தலில் எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க. பெரும் வெற்றிபெற்றது. சென்னை அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட மு. கருணாநிதி 699 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

இந்த நிலையில் இலங்கையில் நடந்த ஈழப்போராட்டத்தின் தாக்கம் தமிழ்நாட்டில் அதிகரித்துவந்த நிலையில், 1983 ஆகஸ்ட் 10ஆம் தேதி கருணாநிதியும் அன்பழகனும் (புரசைவாக்கம்) தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதற்குப் பிறகு 1984 மார்ச் 30ஆம் தேதியன்று காலியான 7 எம்.எல்.சி. பதவிகளுக்குத் தேர்தல் நடந்தபோது அந்தத் தேர்தலில் மு. கருணாநிதி போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இந்த நிலையில் அதே ஆண்டில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தருணத்தில் மு. கருணாநிதி போட்டியிடவில்லை. வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. அவரது தொகுதியான அண்ணா நகரில் சோ.மா. ராமச்சந்திரன் நிறுத்தப்பட்டு வெற்றிபெற்றார்.

ஆனால், 1986ஆம் ஆண்டுவாக்கில் மேல் சபையைக் கலைத்துவிட அ.தி.மு.க. அரசு முடிவுசெய்தது. "நான் மேல் - சபையில் எதிர்க்கட்சித் தலைவராக வந்துவிட்டதால் இந்தச் சபையையே கலைத்துவிட முதல் அமைச்சர் முடிவுசெய்துள்ளதாக அறிகிறேன். நான் இல்லாவிட்டால் இந்தச் சபை கலைக்கப்படாமல் நீடிக்கும் என்றால் நான் எனது பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன்" என்று கருணாநிதி கூறினார். முடிவில் 1986 மே 14ஆம் தேதி தமிழக மேலவையைக் கலைக்கும் சட்டம் நிறைவேறியது.

ஆகவே, 1984ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியலிலேயே மு. கருணாநிதியின் பெயர் இடம்பெறவில்லை. அதற்குப் பிறகு 1989ல் நடந்த தேர்தலில்தான் கருணாநிதி மீண்டும் சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டார்.

டான்சி வழக்கில் தண்டனை

ஜெயலலிதா அரசியலுக்கு வந்த பிறகு அவர் பெயர் இடம்பெறாத அ.தி.மு.கவின் வேட்பாளர் பட்டியல் என்றால், அது இந்த முறை வந்திருக்கும் வேட்பாளர் பட்டியல்தான். ஆனால், ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அவர் போட்டியிடாத சட்டமன்றத் தேர்தல் இருந்திருக்கிறது.

சிவாஜி கணேசன் -கருணாநிதி - எம்ஜிஆர் - ஜெயலலிதா
படக்குறிப்பு, சிவாஜி கணேசன் -கருணாநிதி - எம்ஜிஆர் - ஜெயலலிதா

ஜெயலலிதா மீது தொடரப்பட்ட டான்சி ஊழல் வழக்கில் 2000வது ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி தீர்ப்பு வெளியானது. அந்த வழக்கில் அவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதையெதிர்த்து அவர் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படவே, முதலில் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தார் ஜெயலலிதா. அதற்குப் பிறகு புதுக்கோட்டை, புவனகிரி ஆகிய தொகுதிகளிலும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தார் அவர். ஒரு வேட்பாளர் நான்கு தொகுதிகளில் வேட்புமனுக்களைத் தாக்கல்செய்யக்கூடாது என்ற விதி இருந்தும் அவர் இவ்வாறு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தார்.

டான்சி வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்ததால், ஜெயலலிதாவால் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலையில் 4 தொகுதிகளில் அவர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தது, தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கப்போகிறது என்று பலரும் ஆவலோடு கவனித்தனர். நான்கு மனுக்களையுமே தள்ளுபடி செய்தது தேர்தல் ஆணையம்.

முடிவில் ஜெயலலிதா போட்டியிடாமலேயே அந்தத் தேர்தலை எதிர்கொண்டது அ.தி.மு.க. இருந்தாலும் அ.தி.மு.க. கூட்டணி 197 இடங்களில் வெற்றிபெற்றது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாத ஜெயலலிதா முதல்வராகவும் பதவியேற்றுக்கொண்டார்.

ஆனால், சில நாட்களிலேயே அவர் பதவியேற்றது செல்லாது என உச்சநீதிமன்றம் கூறியதும் பதவியிலிருந்து இறங்கிய ஜெயலலிதா, டான்சி வழக்கின் மேல் முறையீட்டில் விடுதலையான பிறகு மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் ஜெயலலிதா போட்டியிடுவதற்கு ஏதுவாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்தத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றிபெற்றார்.

ஆகவே, மறைந்த முதலமைச்சர்கள் மு. கருணாநிதியும் ஜெயலலிதாவும் போட்டியிடாத சட்டமன்றத் தேர்தல்கள் உண்டு. மு. கருணாநிதி பெயர் இடம்பெறாத வேட்பாளர் பட்டியலும் இருந்திருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :