மியான்மர் ராணுவ ஆட்சி: போராடிய 38 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலி; சீன சொத்துகள் சூறை

பட மூலாதாரம், Getty Images
மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு பிந்தைய மோசமான நாட்களில் ஒன்றாக நேற்று ஞாயிற்றுக்கிழமை 38 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மியான்மரில் மிகப்பெரிய நகரமான யங்கூனில் உள்ள ஒரு பகுதியில், ஞாயிறன்று போராட்டம் நடத்தியவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அப்போது ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களிடம் தடிகளும் கத்திகளுமே இருந்துள்ளன.
சீனாவைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளான பிறகு அந்த பகுதியில் ராணுவ ஆட்சி அமல் படுத்தப்படுவதாக மியான்மர் ராணுவம் அறிவித்தது.
சீன அரசு பர்மிய ராணுவத்துக்கு ஆதரவளிப்பதாக போராட்டக்காரர்கள் நம்புகின்றனர்.
பிப்ரவரி 1ஆம் தேதி ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் மியான்மரில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மியான்மர் குடிமை அரசின் தலைவரும் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவருமான ஆங் சான் சூச்சி ராணுவ ஆட்சியாளர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவரது கட்சி கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் தேர்தலின் போது மிகவும் பரவலான முறைகேடுகள் நடந்ததாக ராணுவம் குற்றம் சாட்டுகிறது. எனினும் சுயாதீன தேர்தல் பார்வையாளர்கள் இதை மறுக்கின்றனர்.
ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ராணுவ ஆட்சியை ஏற்றுக் கொள்ள மறுத்து தலைமறைவாக உள்ளனர்.

பட மூலாதாரம், Reuters
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவரான மான் வின் காங், "புரட்சி" என்று அவர் கூறும் ராணுவத்துக்கு எதிரான இந்த போராட்டங்களின் போது தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ளுமாறு போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
"இது இந்த நாட்டின் மிகவும் இருண்ட தருணம். விடியலுக்கான நேரம் நெருங்கி வருகிறது. இந்த எழுச்சி கட்டாயம் வெல்ல வேண்டும்," என்று ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியபின் பின் வெளியாகியுள்ள அவரது முதல் உரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரங்கூனில் நடந்த போராட்டங்களின் போது குறைந்தது 21 பேர் ரங்கூனில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிற மரணங்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளுக்கான உதவி கூட்டமைப்பு (ஏ.ஏ.பி.பி) எனும் கண்காணிப்பு அமைப்பு ஞாயிற்றுக்கிழமை போராட்டங்களின்போது இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 38 ஆக இருக்கும் என்று தெரிவிக்கிறது.
ரங்கூன் நகரிலுள்ள லெய்ங் தாரியார் எனும் பகுதியில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். அவர்களில் டஜன் கணக்கானவர்களுக்கு துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டுள்ளது.
தாக்கப்படும் சீன நிறுவனங்கள்
ரங்கூனில் உள்ள லெய்ங் தாரியார் மற்றும் அதன் அருகில் உள்ள ஷுவெப்யிதா பகுதியில் உள்ள சீன தொழிற்சாலைகள் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளதாகவும், அவற்றுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் சீனா கேட்ட பின்பு அந்த பகுதியில் ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டது.

பட மூலாதாரம், EPA
இரும்பு தடிகள், கோடாரிகள் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றை கொண்டிருந்தவர்கள் சீனாவுக்கு சொந்தமான 10 கட்டமைப்புகளை தீயிட்டு எரித்ததாக சீன அரசு கூறுகிறது. அவற்றில் பெரும்பாலானவை ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் அல்லது பாதுகாப்பு கிடங்குகள் ஆகும். ஒரு சீன உணவகமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
"தொழிற்சாலைகள் சூறையாடப்பட்டு அழிக்கப்படுகின்றன. பல சீன ஊழியர்கள் காயமடைந்துள்ளனர் மற்றும் உள்ளே சிக்கியுள்ளனர்," என்று மியான்மரில் உள்ள சீன தூதரகம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

வன்முறைகளை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மியான்மர் அரசை வலியுறுத்திய சீன தூதரகம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது.
மியான்மரில் உள்ள சீன நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் உயிர் மற்றும் உடமைகள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் சீன வலியுறுத்தி இருந்தது.
ராணுவ அரசு சொல்வது என்ன?
தீயை கட்டுப்படுத்த சென்ற தீயணைப்பு வீரர்கள் அவர்களது வழியில் தடுக்கப்பட்டதாக ராணுவத்துக்கு சொந்தமான மயாவதி மீடியா எனும் ஊடகம் தெரிவித்துள்ளது.
நாள் முழுவதும் லெய்ங் தாரியார் பகுதியில் துப்பாக்கி சத்தம் ஒலித்துக்கொண்டே இருந்தது. தெருக்களில் ராணுவ வாகனங்களில் நடமாட்டத்தையும் காணமுடிந்தது.

ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது மணல் பைகள், இரும்பு கம்பிகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு போராட்டக்காரர்கள் தங்களுக்கு தாங்களே தடுப்பரண்கள் அமைத்துக்கொண்டனர்.
தற்காலிகமாக பயன்படக்கூடிய கேடயங்களை வைத்துக்கொண்டு காயமடைந்தவர்களை போராட்டக்காரர்கள் மீட்பதையும் காண முடிந்தது.
டிக் டாக் மூலம் எச்சரிக்கை
கனரக ஆயுதங்களை பயன்படுத்த காவல்துறை திட்டமிட்டு இருந்ததாக சமூக ஊடக பதிவு ஒன்றில் அரசு அலுவலர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
லெய்ங் தாரியார் பகுதியிலுள்ள போராட்டக்காரர்கள் மீது நான் கருணை காட்ட மாட்டேன். அவர்கள் தீவிரமாக நம்மை எதிர்த்துப் போராடுவார்கள். அங்கு எல்லாவிதமான நபர்களும் இருக்கின்றனர் என்று பின்பு அளிக்கப்பட்ட டிக் டாக் பதிவு ஒன்றில் அந்த அலுவலர் தெரிவித்திருந்தார்.
நான் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த பொழுது என் கண் முன் மூன்று பேர் உயிரிழந்தனர். மற்ற இருவரை நான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறேன். இப்போதைக்கு என்னால் இதை மட்டும்தான் தெரிவிக்க முடியும் என்று ஒரு மருத்துவ பணியாளர்ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
மியான்மரின் பாகாந்த் நகரில் ஓர் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டது, ரங்கூனுக்கு வடக்கே உள்ள பாகோ எனும் நகரில் பெண்ணொருவர் கொல்லப்பட்டது என நாட்டின் பிற பகுதிகளிலும் ராணுவத்தில் நடவடிக்கைகளால் இறந்தவர்கள் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.
காவல்துறையை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் கற்களை எரிந்து மற்றும் கவண் மூலம் தாக்கியதில் பாகோ பகுதியில் மூன்று பேர் காயமடைந்ததாகவும் எம்ஆர்டிவி எனும் அரசு ஊடகம் தெரிவிக்கிறது. ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் இதுவரை 120க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஏ.ஏ.பி.பி அமைப்பு தெரிவிக்கிறது.
மியான்மர் ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தின் பின்னணி
நாட்டின் நிர்வாகப் பொறுப்பை தாங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாக மியான்மர் ராணுவம் பிப்ரவரி 1ஆம் தேதி அறிவித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டு ஒரு தசாப்தம் கழித்து இது மீண்டும் நடந்திருக்கிறது.

பட மூலாதாரம், Reuters
இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை நாட்டில் அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. 2011-ல் ஜனநாயக ஆட்சி அமைவதற்கு முன்பு, சுமார் 50 ஆண்டு காலம் ராணுவத்தின் சர்வாதிகார ஆட்சியை சந்தித்த நாடு மியான்மர். அதிகாலை நேரத்தில் ஆங் சான் சூச்சி மற்றும் பிற அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பாணி, தாங்கள் மறந்துவிட்ட அதே ராணுவ பாணியை நினைவுபடுத்துவதாக அந்த மக்களுக்கு இருந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, சூச்சி மற்றும் ஒரு காலத்தில் தடை செய்யப்பட்டிருந்த அவருடைய ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி ஆட்சி நடத்தி வந்தது. 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுதந்திரமாக, நேர்மையாக 2015ல் நடந்த தேர்தலில் அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்திருந்தது. பிப்ரவரி 1ஆம் தேதி காலையில், அந்தக் கட்சியின் இரண்டாவது பதவிக் காலம் தொடங்கி இருக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் கால்வாசி இடங்கள் ராணுவத்தின் வசம் இருக்கும் வகையிலும், மிக முக்கியமான அமைச்சகங்கள் ராணுவத்தின் வசம் இருக்கும் வகையிலும் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தின் காரணமாக, மியான்மர் நிர்வாகத்தில் ராணுவம்தான் திரைமறைவில் கட்டுப்பாட்டை செலுத்தி வந்தது.
பிற செய்திகள்:
- ஜார்ஜ் ஃப்ளாய்ட் குடும்பத்தினருக்கு 196 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை
- தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக கார்த்திகேய சிவசேனாபதி - வெற்றி யாருக்கு?
- அதிருப்தியில் கோவை அதிமுக - பாஜக தொண்டர்கள்; தொகுதி ஒதுக்கீட்டில் ஏமாற்றம்
- தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அதிமுக – தேமுதிக கூட்டணி உடைந்ததன் காரணம் இதுதான்
- தங்க பத்திரத்தை எவ்வாறு வாங்கலாம்? தங்க நகைகள் தவிர பிற முதலீடுகள் என்னென்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








