Ind vs Eng கிரிக்கெட்: அறிமுக போட்டியிலேயே அரைசதம், ஆட்ட நாயகன் விருது - யார் இந்த இஷன் கிஷன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், எம். பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழுக்காக
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது இந்திய அணி. முதல் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சொதப்பிய இந்தியா, இந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலுமே சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. இங்கிலாந்து நிர்ணயித்த 164 ரன் என்ற இலக்கை, 17.5 ஓவர்களில் சேஸ் செய்தது இந்திய அணி. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1-1 என சமநிலை அடைந்திருக்கிறது. பல வீரர்கள் இந்தப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து கவனம் ஈர்த்திருக்கிறார் இஷன் கிஷன். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதும் வென்றிருக்கிறார்.
அறிமுக ஆட்டத்திலேயே அசத்திய கிஷன்!
ஷிகர் தவான், அக்ஷர் படேல் இருவருக்கும் பதிலாக இளம் வீரர்கள் சூர்யகுமார் யாதவ், இஷன் கிஷன் இருவரும் இன்று இந்திய அணியில் இடம்பிடித்தார்கள். தவானின் ஓப்பனிங் ஸ்லாட்டில் இஷன் கிஷன் ஆடுவார் என்று டாஸிலேயே சொல்லியிருந்தார் கோலி. அதனால், அவர்மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. 32 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து, அந்த எதிர்பார்ப்பை சிறப்பாக பூர்த்தி செய்தார் அவர்.
முதல் ஓவரின் கடைசிப் பந்திலேயே கே.எல்.ராகுல் டக் அவுட் ஆகி வெளியேறினார். சாம் கரண் வீசிய அந்த ஓவர் மெய்டன் ஆனது. அதனால், அப்போதே இந்திய அணியின் மீது பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இரண்டாவது ஓவரின் முதல் பந்தை வீசுகிறார் ஆர்ச்சர். அதை எதிர்கொள்கிறார் கிஷன். ஆனால், ராகுலின் விக்கெட் ஏற்படுத்திய நெருக்கடி துளியும் இல்லாமல், முதல் பந்தையே பௌண்டரியாக்கினார். லெக் சைடில் அழகாக ஃபிளிக் செய்து தன் சர்வதேச ரன் கணக்கைத் தொடங்கினார் அவர்.
சாம் கரணின் அடுத்த ஓவரில் தான் சந்தித்த முதல் பந்தையும் பௌண்டரியாக்கினார். கேப்டன் கோலி ஒருபக்கம் அதிரடி காட்டியதால், எந்த நெருக்கடியும் இல்லாமல் தன் நேச்சுரல் கேமை ஆடினார் கிஷன். பௌண்டரிகள் மட்டுமல்லாமல் ஸ்டிரைக் ரொடேட் செய்துகொண்டிருந்ததால் இந்தியாவின் ரன்ரேட் சீராக சென்றுகொண்டிருந்தது. ஓரளவு வேகமாக ஆடிய கிஷன், பவர்பிளேவின் கடைசி ஓவரில் ருத்ரதாண்டவம் ஆடினார்.
அதிரடி அரைசதம்!
டாம் கரண் வீசிய ஆட்டத்தின் ஆறாவது ஓவரில், முதல் பந்தையே லாங் ஆன் திசையில் சிக்ஸர் அடித்து தொடங்கியவர், மேலும் இரண்டு பௌண்டரிகள் அடித்தார். அதிலும் அந்த மூன்றாவது பந்தில் அடித்த கவர் டிரைவ் பௌண்டரி அட்டகாசமாக இருந்தது. அந்த ஓவரில் தொடங்கிய கிஷனின் அதிரடி அதன்பிறகு நிற்கவேயில்லை. ஸ்டோக்ஸ் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர், அடில் ரஷீத்தின் முதல் ஓவரில் ஒரு பௌண்டரி என ஓயாமல் விளாசினார். கிஷனின் அதிரடி பார்த்து, தன் வேகத்தை கோலியே குறைத்துக்கொண்டார். அதிரடியாக ஆடும் அந்த இளம் வீரர் அதிக பந்துகளை சந்திக்கும் வகையில் சிங்கிள்கள் மட்டும் ஆடினார் இந்திய கேப்டன்.

பட மூலாதாரம், Getty Images
ரஷீத் வீசிய பத்தாவது ஓவரின் முதல் பந்தை டீப் மிட்விக்கெட் திசையில் மிகப்பெரிய சிக்ஸர் அடித்தார் கிஷன். அடுத்த பந்தை மீண்டும் ஆகாய மார்க்கமாக லாங் ஆன் திசையில் அனுப்பி சிக்ஸராக்கினார். இந்த ஷாட் மூலம், தன் அறிமுக போட்டியிலேயே அரைசதம் கடந்தார் (28 பந்துகளில்) கிஷன். அஜிங்க்யா ரஹானேவுக்குப் பிறகு அறிமுக டி-20 போட்டியிலேயே அரைசதம் அடித்த இந்திய வீரர் இவர்தான்!
உலகத்தர பந்துவீச்சாளர்களை சந்தித்தாலும், எந்தவித நெருக்கடியும் இல்லாமல் ஆடினார். அவர் 50 ரன்களைக் கடந்தபோது, "இந்த மைதானத்தில் பலநூறு விளக்குகள் எரிந்துகொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றையெல்லாம்விட அதிகம் ஜொலிப்பது கிஷன்தான்" என்று கூறினார் வர்ணனையில் இருந்த ஹர்ஷா போக்ளே.
அரைசதம் அடித்தும் அதிரடியை நிறுத்தாத கிஷன், அந்த ஓவரிலேயே அவுட்டானார். ஓவரின் கடைசிப் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சி செய்தவர், பந்தைத் தவறவிட்டு எல்.பி.டபிள்யூ ஆனார். 32 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து வெளியேறியர் பெவிலியன் திரும்பும்போது, ஒட்டுமொத்த அஹமதாபாத் மைதானமும் எழுந்து நின்று பாராட்டியது.
யார் இந்த இஷன் கிஷன்
இந்தப் போட்டியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் இஷன் கிஷன், பாட்னாவில் பிறந்தவர். பிஹார் கிரிக்கெட் சங்கத்துக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் இடையே வீரர்களை ஒப்பந்தம் செய்யும் விஷயத்தில் பிரச்னை நிலவியதால், ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடத் தொடங்கினார். 22 வயதான இவர், விக்கெட் கீப்பிங்கும் செய்யக்கூடியவர். இடது கை பேட்ஸ்மேனான கிஷன், தன் அதிரடி ஆட்டத்துக்குப் பெயர் போனவர்.
2014-ம் ஆண்டு, வெறும் 15 வயதே ஆகியிருந்த நிலையில் ஜார்க்கண்ட் அணிக்காக ஆடத் தொடங்கினார். ஓப்பனிங், மிடில் ஆர்டர் என எங்குமே ஆடும் திறமை கொண்ட அவர், அப்போதிருந்தே பலரின் கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கினார். ராகுல் டிராவிட் தேர்ந்தெடுத்த 2016 அண்டர் 19 அணிக்கு கேப்டனாகச் செயல்பட்டதே இஷன் கிஷன் தான்! இவர் தலைமையில் விளையாடிய அந்த இந்திய அணியில்தான் ரிசப் பந்த், வாஷிங்டன் சுந்தர் போன்றவர்கள் விளையாடினார்கள். அந்தத் தொடரில் இறுதிப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் தோற்றது இந்தியா.
ஐ.பி.எல் 2020 & விஜய் ஹசாரே
அந்தத் தொடர் இஷனுக்கு சிறப்பாக அமையவில்லை. 6 போட்டிகளிலும் சேர்ந்தே 73 ரன்கள்தான் அடித்தார். இருந்தாலும் அந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணிக்காக சில வாய்ப்புகள் பெற்றார். அப்போதும் அவரால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. ஆனால், கிஷன் அதற்கெல்லாம் மனம் தளரவில்லை. உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து தன் திறமையை நிரூபித்துக்கொண்டே இருந்தார். அடுத்த ஐ.பி.எல் தொடரில் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு சிறப்பாக செயல்பட்டார். அவர் அதிரடியைப் பார்த்த மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், 2018 ஐ.பி.எல் ஏலத்தில் 6.2 கோடி ரூபாய் கொடுத்து அவரை வாங்கியது.
பொதுவாக ஜார்க்கண்ட் அணிக்கு ஓப்பனிங் ஆடும் கிஷனுக்கு, மும்பை இந்தியன்ஸ் அணியில் பெரும்பாலும் மிடில் ஆர்டரிலேயே வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் அந்த வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். ஜார்கண்ட் அணிக்கும் கேப்டனாகி அமர்க்களப்படுத்தினார். குறிப்பாக கடந்த ஐ.பி.எல் தொடரில் இவர் ஆடிய ஆட்டம், "இவருக்கு இந்திய அணியில் இடம் தரவேண்டும்" என்று அனைவரையும் சொல்லவைத்தது. துபாயில் நடந்த அந்தத் தொடரில், 14 போட்டிகளில் 516 ரன்கள் குவித்தார் கிஷன்.
இந்த இங்கிலாந்து டி-20 தொடருக்கான இந்திய அணி, கடந்த பிப்ரவரி 20-ம் தேதி மாலை அறிவிக்கப்படுவதாக இருந்தது. அன்று காலை நடந்த விஜய் ஹசாரே டிராபி தொடரின் முதல் போட்டியில் மத்திய பிரதேச அணிக்கு எதிராக 173 ரன்கள் குவித்தார் இஷன் கிஷன். மாலை அறிவிக்கப்பட்ட அணியில் இடம்பிடித்துவிட்டார். இன்று கிடைத்த முதல் வாய்ப்பையே மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி ஆட்ட நாயகன் விருதும் வென்றிருக்கிறார்.
"இங்கு வந்து முதல் போட்டியை விளையாடுவது எளிதான விஷயம் இல்லை. மும்பை இந்தியன்ஸ் அணி எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது. அங்கு பல முன்னணி வீரர்களோடு விளையாடியிருக்கிறேன். அவர்கள் எனக்கு நிறைய அறிவுரைகள் கூறியிருக்கிறார்கள். இந்தப் போட்டியை முடிக்கவேண்டும் என்று நினைத்தேன். அதனால், அவுட்டானது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த இன்னிங்ஸை சமீபத்தில் காலமான என் தந்தையின் பயிற்சியாளருக்கு சமர்ப்பிக்கிறேன்" என்று ஆட்டத்துக்குப் பின்பு கூறினார் இஷன் கிஷன்.
மீண்டு வந்து அசத்திய கோலி

பட மூலாதாரம், Getty Images
இஷன் கிஷன் மட்டுமல்ல, இந்திய கேப்டன் விராட் கோலியும் இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொரு ஷாட்டும் துல்லியமாக ஆடினார். நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு மிகச் சிறந்த கோலியின் இன்னிங்ஸ் பார்க்க முடிந்தது. ஆரம்பத்தில் கோலி அதிரடி காட்டியதால், கிஷன் நெருக்கடி இல்லாமல் ஆடினார். கிஷன் அவுட் ஆனதும் பந்த் உடன் இணைந்து அதிரடியைத் தொடர்ந்தார் விராட்.
டாம் கரண் ஓவரில் லாங் ஆன் திசையில் ஒரு அதி அற்புதமான டிரைவ் மூலம் சிக்ஸர் அடித்து அரைசதம் கடந்தார் கோலி. 35 பந்துகளில் அரைசதம் கடந்தவர், 49 பந்துகளில் 76 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கிறிஸ் ஜோர்டன் பந்தில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்துவைத்த விராட், அந்த ஷாட்டின் மூலம் சர்வதேச டி-20 போட்டிகளில் 3000 ரன்களையும் கடந்தார்.
நம்பிக்கை கொடுத்த பௌலர்கள்
இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தபோது, ஜேசன் ராய் மீண்டும் அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கினார். அனைத்து பௌலர்களையும் அவர் சிதறடிக்க, 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து. இப்படியே போனால், 180-190 ரன்கள் எடுத்துவிடுவார்கள் என்று நினைக்கையில், மீண்டு வந்து அசத்தினார்கள் இந்திய பௌலர்கள். ஒவ்வொருவருமே அதன்பிறகான தங்கள் ஓவர்களைச் சிறப்பாக வீசினார்கள்.
போன ஆட்டத்தைப் போலவே 12-வது ஓவரின் முதல் பந்தில் வாஷிங்டன் சுந்தர் ஜேசன் ராயை வெளியேற்ற, அதன்பிறகு எந்த பேட்ஸ்மேனையும் அதிக நேரம் களத்தில் இருக்க இந்திய பௌலர்கள் அனுமதிக்கவில்லை. குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்கள் தங்கள் வேகத்தை மாற்றியும் குறைத்தும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைத் திணறடித்தனர். அதனால், எந்த இங்கிலாந்து பேட்ஸ்மேனாலும் பெரிய ஸ்கோர் எடுக்க முடியவில்லை.
இறுதியில் 164 ரன்கள் மட்டுமே எடுத்தது இங்கிலாந்து. கடைசி 9 ஓவர்களில் வெறும் 73 ரன்களை மட்டுமே இந்திய பௌலர்கள் கொடுத்தது, பேட்ஸ்மேன்களுக்கும் சரி, ரசிகர்களுக்கும் சரி பெரிய நம்பிக்கை கொடுத்தது. அதை பேட்ஸ்மேன்கள் சரியாகப் பயன்படுத்தி வெற்றியை வசமாக்கியிருக்கின்றனர்.
பிற செய்திகள்:
- ஜார்ஜ் ஃப்ளாய்ட் குடும்பத்தினருக்கு 196 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை
- தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக கார்த்திகேய சிவசேனாபதி - வெற்றி யாருக்கு?
- அதிருப்தியில் கோவை அதிமுக - பாஜக தொண்டர்கள்; தொகுதி ஒதுக்கீட்டில் ஏமாற்றம்
- தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அதிமுக – தேமுதிக கூட்டணி உடைந்ததன் காரணம் இதுதான்
- தங்க பத்திரத்தை எவ்வாறு வாங்கலாம்? தங்க நகைகள் தவிர பிற முதலீடுகள் என்னென்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












