தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 : பிபிசி தமிழுடன் இணைந்து மக்களை சந்திக்கும் புல்லட் பெண்கள் TamilNadu on wheels

இன்னும் ஒரு சில வாரங்கள்தான். தமிழகத்தில் 10 ஆண்டுகளாக இருந்துவரும் அதிமுக ஆட்சி தொடரப் போகிறதா அல்லது ஆட்சி மாறப்போகிறதா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்து வேட்பாளர் பட்டியல்கள் வெளியாகிவிட்டன. பரபரப்பாக வேட்பு மனுத் தாக்கல் நடந்துகொண்டிருக்கிறது. தேர்தல் அறிக்கைகள் தூள் பறக்கின்றன. அரசியல் தலைவர்களின் பிரசாரங்கள் இனி அனல் பறக்கும்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இதெல்லாம் நடப்பது வழக்கம்தான். இந்த முறையும் வழக்கம்போல தேர்தல் திருவிழா தொடங்கியிருக்கிறது.
இந்த பரபரப்பான சூழலில், அரசியலைத் தாண்டி மக்களின் அன்றாட பிரச்னைகளை, முக்கிய விவகாரங்களைத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் முற்பட்டுள்ளது.
TamilNadu On Wheels திட்டத்தின் கீழ் களத்திற்கு சென்று மக்களை சந்தித்து, அவர்களின் முக்கிய பிரச்சனைகளை கேட்டறிய உள்ளனர் இந்த புல்லட் பெண்கள்.
TamilNadu On Wheels பயணத்தில் 4 இளம் பெண்கள் தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு சென்று மக்களை நேருக்கு நேர் சந்திக்க உள்ளனர்.

சென்னையில் இருந்து இன்று (மார்ச் 15) அதிகாலை புறப்பட்ட அவர்கள், திருவண்ணாமலை, தருமபுரி, அரியலூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பைக்கிலேயே பயணிக்கின்றனர்.
இந்த பயணம் சென்னையில் துவங்கி, 12 நாட்கள் முடிவில் மீண்டும் சென்னையில் முடிகிறது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் சுமார் 1,200 கிலோ மீட்டர் தூரத்துக்கும் மேல் இந்தப் பயணம் அமையப் போகிறது.
இத்தனை கிலோ மீட்டர் பைக்கில் பயணித்து, மக்கள் பிரச்னையை கேட்பது இந்தப் பெண்களுக்கு சாத்தியமா என்று நீங்கள் நினைக்கலாம். நூறு சதவீதம் சாத்தியம் என்பதே இவர்களின் பதில்.
TamilNadu on wheels பயணத்தில் வெவ்வேறு துறையை சேர்ந்த இந்த நான்கு பெண்களும் பல கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களின் கதைகளை பதிவு செய்யவுள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் சூழல் நிலவுவதால், அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டே இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

இவர்களுடன் பயணிக்கும் பிபிசி குழுவினரும், இந்தப் பெண்களுக்கு உதவும் வகையில், அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்கள்.
இந்த பயணத்தில் பிபிசி தமிழுடன் இணைந்துள்ள மருத்துவர் இலக்கியா, "மிக சவாலான நேரத்தில் தமிழ்நாட்டுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதாவது கொரோனா பெருந்தொற்று என்ற மிகப்பெரிய சவால் மிகுந்த நேரத்தில் இந்த தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறோம். இதையும் தாண்டி எத்தனையோ சவால்களை மக்கள் தினமும் எதிர்கொள்கிறார்கள். அதைப் பற்றி நாங்கள் பேசப் போகிறோம்" என்று கூறினார்.

இந்த பயணத்தை மேற்கொள்ளும் கட்டட வடிவமைப்பாளர் ருத்ரா கூறுகையில், "நாங்கள் அடிக்கடி பைக்கில் பயணம் செய்வது வழக்கம்தான். பைக் ரைடிங் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஆனால், இந்த முறை இத்தனை கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து மக்களை பார்த்து அவர்களது பிரச்சனைகளைக் கேட்டறிவது என்பது எனக்கு ஒரு மிகப்பெரிய அனுபவமாக இருக்கப்போகிறது" என்று தெரிவித்தார்.
அதே போல, இந்த பயணத்தில் கலந்து கொள்ளும், ஐடி துறையை சேர்ந்த சந்தியா மற்றும் BPO-வில் பணியாற்றும் தேன்மொழி ஆகியோர் தேர்தல் காலத்தில் பல விஷயங்கள் இருந்தாலும், மக்களின் குரல்களை பதிவு செய்யப்போவது, அவர்களிடம் அதுகுறித்து பேசப்போவது தங்களுக்கு புதிய அனுபவமாக இருக்கப்போகிறது என்று தெரிவித்தனர்.
TamilNadu on wheels பயணம் குறித்த செய்திகள் மற்றும் காணொளிகளைக் காண, பிபிசி தமிழின் ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
பிற செய்திகள்:
- தேர்தல் வரலாறு: ராஜீவ் கொலை நடந்தது எப்போது? ஜெயலலிதா முதலில் ஆட்சிக்கு வந்தது எப்படி?
- மியான்மர் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் பலி; சீன சொத்துகள் சூறை
- Ind vs Eng: அறிமுக போட்டியிலேயே அரைசதம், ஆட்ட நாயகன் விருது - யார் இந்த இஷன் கிஷன்?
- தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அதிமுக – தேமுதிக கூட்டணி உடைந்ததன் காரணம் இதுதான்
- தங்க பத்திரத்தை எவ்வாறு வாங்கலாம்? தங்க நகைகள் தவிர பிற முதலீடுகள் என்னென்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












