"பாகிஸ்தான், சீனாவுடன் போரிடும் தேதியை மோதி முடிவு செய்துவிட்டார்" - பாஜக தலைவர் கருத்தால் சர்ச்சை

மோடி

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

"பாகிஸ்தான், சீனாவுடன் போரிடும் தேதியை மோதி முடிவு செய்துவிட்டார்"

பாகிஸ்தான், சீனாவுடன் போரிடும் தேதியை பிரதமர் நரேந்திர மோதி முடிவு செய்துள்ளதாக உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இந்தியா எப்போது போரிடும் என்று பிரதமர் நரேந்திர மோதி முடிவு செய்துள்ளதாக சர்ச்சைக்குரிய வகையில் கூறியுள்ளார்.

ராமர் கோயில் விவகாரத்தில் வெற்றி பெற்று கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது மற்றும் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது ஆகியவற்றைப் போன்று பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் எப்போது போர் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோதி முடிவு செய்துள்ளார்," என்று அந்த காணொளியில் அவர் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

"ராமர் கோயிலை விட சீதை கோயிலைப் பெரிதாகக் கட்டுவோம்"

அயோத்தி

பட மூலாதாரம், Getty Images

பிகாரில் 'ராமர் கோயிலை விட சீதை கோயிலைப் பெரிதாகக் கட்டுவோம்' என்று லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

"தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுவரும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை விட சீதாமாரியில் மிகப் பெரிய கோயில் ஒன்று சீதா தேவிக்கு கட்டப்பட வேண்டும் என்பது எனது விருப்பம். ஏனெனில் சீதா தேவி இல்லாமல் பகவான் ராமர் முழுமை அடையமாட்டார். மேலும், அயோத்தியின் ராமர் கோயிலையும் சீதாமாரியையும் இணைக்கும் ஒரு நடைபாதையும் கட்டப்பட வேண்டும்.

எங்கள் அரசு அமைக்கப்பட்டால் சீதா தேவி கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவோம். குறைந்த பட்சம் இப்போது முதலமைச்சராக இருப்பவர், மீண்டும் முதலமைச்சராக இருக்க மாட்டார், பாஜக தலைமையில் நாங்கள் பாஜக எல்ஜேபி இணைந்து அரசாங்கத்தை அமைப்போம்," என்று அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

"அரசுகளை கவிழ்ப்பதற்கு பதில் பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துங்கள்"

உத்தவ் தாக்கரே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உத்தவ் தாக்கரே

நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதில் அரசுகளை கவிழ்ப்பதில் பா.ஜ.க. தொடர்ந்து ஆர்வமுடன் உள்ளது என்று மகாராஷ்டிர முதல்வர் கூறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"மும்பையில் தசராவை முன்னிட்டு சிவசேனா கட்சியின் வருடாந்திர பேரணி நேற்று நடந்தது. அப்போது பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே, "நாட்டில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான பணிகளை செய்வதனை விட்டுவிட்டு, அரசுகளை கவிழ்க்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நாம் அராஜக அரசியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு சிவசேனா பேராசைப்படவில்லை" என கூறிய அவர், தனது 11 மாத கால அரசை முடிந்தால் கவிழ்த்து பாருங்கள் என பா.ஜ.க.வுக்கு சவால் விடுத்து பேசினார். முதலில் மத்தியில் உள்ள உங்கள் அரசை பாதுகாத்திடுங்கள் என்றும் அவர் கேட்டு கொண்டார்."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: