RR Vs MI: வெற்றி பெற்ற ராஜஸ்தான் - அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்த சென்னை அணி

ராஜஸ்தான் அணி

பட மூலாதாரம், BCCI/IPL

ஐபிஎல் போட்டிகளில் பந்துவீச்சில் மிகவும் வலிமை வாய்ந்த அணியாக கருதப்படும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்திருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். 196 ரன்கள் எனும் இமாலய இலக்கை அதிரடியாக சேஸிங் செய்து அசத்தியிருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.

போல்ட், பும்ரா, பாட்டின்சன், ராகுல் சாஹர், க்ரூனால் பாண்டியா, பொல்லார்டு என பந்துவீச வந்தவர்கள் அனைவரின் ஓவர்களையும் நையப்புடைத்தது ஸ்டோக்ஸ் - சாம்சன் இணை.

முன்னதாக இந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியின் 223 ரன்கள் எனும் இலக்கை அபாரமாக சேசிங் செய்து சாதனை படைத்த ராஜஸ்தான் அணி, மீண்டும் ஒரு முறை சேஸிங்கில் மிரட்டியிருக்கிறது.

அதிரடி காட்டிய ஸ்டோக்ஸ்

ஸ்டோக்ஸின் அதிரடி பேட்டிங்குக்கு முன்னால் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களிடம் எந்த பதிலும் இல்லை. மிட் ஆன், மிட் ஆஃப், தேர்டு மென், ஸ்கொயர் லெக், கவர் திசை என அனைத்து மூலைகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டர்களை ஓடவிட்டது ஸ்டோக்ஸ் - சாம்சன் ஜோடி.

சிக்ஸர் அடித்து இந்த போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணியினர் மறக்க முடியாத அளவில் ஒரு சதத்தை விளாசி அசத்தினார் ஸ்டோக்ஸ்.

19வது ஓவரிலேயே எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ். இதன் மூலம் 10 புள்ளிகளோடு ஆறாம் இடத்திற்கு முன்னேறிவிட்டது. சென்னை அணி மீண்டும் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்னிங்ஸின்போதும் சரி, ராஜஸ்தானின் சேஸிங்கின்போதும் சரி, பந்துவீச்சாளர்கள் நிலைமை கவலைக்கிடமாய் போனது. இந்த தோல்வியின் மூலம் கேப்டனாக பொறுப்பேற்று தொடர்ந்து 15 போட்டிகளில் வென்றுவந்த பொல்லார்ட்டின் வெற்றிநடை தடைப்பட்டிருக்கிறது.

ஹர்டிக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரிலேயே டீ காக்கை வீழ்த்தினார் ஆர்ச்சர். அதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரன் ரேட்டை ஓரளவு கட்டுப்படுத்தியே வைத்திருந்தனர் ராஜஸ்தான் அணியினர். மேலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்திருந்தது மும்பை.

மும்பை அணி

பட மூலாதாரம், BCCI/IPL

பின்னர் சவுரப் திவாரி, ஹர்டிக் பாண்டியா பந்துகளை பறக்கவிட துவங்கினர். ஆர்ச்சரின் 17வது ஓவரில் மும்பை அணி 17 ரன்களை குவித்தது. 18வது ஓவரை அங்கித் ராஜ்புட் வீசினார். அதில், 4 சிக்ஸர்களை விளாசினார் ஹர்டிக், அந்த ஓவரில் மட்டும் 27 ரன்கள் வந்தது. 19வது ஓவரை மீண்டும் ஆர்ச்சர் வீசினார். திவாரி விக்கெட்டை வீழ்த்தி 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரை இளம் வீரர் கார்த்திக் தியாகி வீசினார். மூன்று சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரி விளாசினார் ஹர்டிக், ஒரே ஓவரில் மீண்டும் 27 ரன்கள் எடுத்து மும்பை. 20 ஓவர்கள் முடிவில் 195 ரன்கள் குவித்தது.

ஹர்டிக் 21 பந்துகளில் ஏழு சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் விளாசி 60 ரன்கள் குவித்து மிரட்டினார்.

ராஜஸ்தான் அணி வெற்றி

ஆனால் ஹர்டிக் இன்னிங்க்ஸை மறக்கடிக்கும் வகையில் சேஸிங்கில் ஸ்டோக்ஸ் - சாம்சன் இணை சிறப்பாக செயல்பட்டது. உத்தப்பா, ஸ்மித் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அதற்கடுத்து ராஜஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பட்லர் களத்துக்குள் வருவதற்கு முன்னதாகவே மேட்சை வென்று முடித்தது ஸ்டோக்ஸ் - சாம்சன் இணை.

மும்பை மற்றும் ராஜஸ்தான் அணி

பட மூலாதாரம், BCCI/IPL

ஸ்டோக்ஸ் 60 பந்துகளில் 14 பௌண்டரிகள், மூன்று சிக்ஸர்கள் விளாசி 106 ரன்கள் குவித்தார், சஞ்சு சாம்சன் கடந்த சில போட்டிகளாகத் தொடர்ந்து சொதப்பி வந்த நிலையில் இன்றைய தினம் ஸ்டோக்ஸுக்கு பக்கபலமாக நின்றது மட்டுமின்றி கடைசி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியைப் பெற்று தந்தார். 31 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் விளாசி 54 ரன்கள் எடுத்தார்.

ஸ்டோக்ஸுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

ராஜஸ்தான் அணியின் வெற்றி மூலம், அதிகாரப்பூர்வமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஞாயிற்று கிழமையன்று புள்ளிப்பட்டியலில் டாப் ஆர்டரில் இருந்த மும்பை, பெங்களூரு அணிகள் இரண்டுமே தோல்வியை தழுவியுள்ளன. கடைசி இடங்களில் இருந்த சென்னை, ராஜஸ்தான் அணிகள் சேஸிங்கில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: