விவசாய மசோதாக்கள்: கடும் அமளிக்கிடையே மாநிலங்களவையில் நிறைவேற்றம்; நரேந்திர மோதி விவசாயிகளுக்கு வாழ்த்து

farmers bill

பட மூலாதாரம், Rajnath singh twitter page

இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய மசோதாக்களில், இரண்டு மசோதாக்கள், எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் அமளிக்கு இடையே, இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்கள் அவையில் இன்று நிறைவேற்றப்பட்டன.

விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகியவற்றுக்கான மசோதாக்கள் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 இன்று வாக்கெடுப்புக்கு வரவில்லை.

இந்தியாவில் விவசாயம் என்பது மாநில அரசின் கீழ் உள்ளது. ஆகவே விவசாயம் தொடர்பாக இயற்றப்பட்டிருக்கும் இந்த மூன்று சட்டங்களும் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. மேலும், பெரிய விதை நிறுவனங்கள், கான்ட்ராக்ட் விவசாய நிறுவனங்கள், மிகப் பெரிய சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்களுக்கு ஏதுவாக இந்தச் சட்டங்களைக் கொண்டுவந்திருப்பதாக அவை குற்றம்சாட்டுகின்றன.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் இல்லாதது மட்டுமல்லாது, ஒரு மாநிலத்தில் ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும், மாநில அரசால் ஏதும் செய்ய முடியாது , விவசாய வர்த்தகத்தின் மீது மாநில அரசு கொண்டிருக்கும் கட்டுப்பாடு இல்லாமல் போகும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

எதிர்க் கட்சியினர் இன்று அனைத்து எல்லைகளையும் கடந்து விட்டனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் இவ்வாறு நடந்து கொள்வதை இதுவரை நான் பார்த்ததில்லை என்று குரல் வாக்கெடுப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் செய்து அமளியைக் குறிப்பிட்டு நரேந்திர மோதி அரசின் மூத்த அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

"குறைந்த பட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசுகளின் வேளாண் விளைபொருட்களுக்கான சந்தைப்படுத்தல் கமிட்டி முறை தொடரும். ஆனால் எதிர்க்கட்சியினர் தவறான தகவல் பரப்பி வருகிறார்கள். இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் உயரும். இந்தியாவில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் விவசாயிகள் தங்களது வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்ய இந்த சட்டங்கள் வழிவகுக்கும்," என்று ராஜ்நாத் சிங் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

narendra modi

பட மூலாதாரம், Pti

இந்த சட்டங்கள் விவசாயிகள் நலனுக்கு எதிரானது என்று கூறி, நரேந்திர மோதி அமைச்சரவையில் உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் துறை அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியில் இருந்து வியாழக்கிழமை விலகியிருந்தார்.

விவசாயிகளுக்கு எதிரான அவசர சட்டத்தை நிறைவேற்ற பாரதிய ஜனதா கட்சி முயல்வதாக, ஹர்சிம்ரத் கவுர் பாதல் சார்ந்துள்ள ஷிரோமணி அகாலி தளம் குற்றம்சாட்டிய பின்னர் அவர் பதவி விலகினார்.

இந்திய விவசாய சந்தையில் மாற்றங்களைக் கொண்டு வர, இந்திய அரசு முன்மொழிந்துள்ள மேற்கண்ட மூன்று மசோதாக்களும் மக்களவையில் ஏற்கனவே நிறைவேறியுள்ளன.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

மாநிலங்களவையில் போதிய அளவு பலம் இல்லாததால் குரல் வாக்கெடுப்பு மூலம், விதிகளை மீறி இந்த மசோதாக்களை இந்திய அரசு நிறைவேற்றியுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

"இந்திய வேளாண் துறையின் வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையான தருணம்; நாடாளுமன்றத்தில் முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றுவதற்கு கடுமையாக உழைக்கும் நமது விவசாயிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்; இந்த மசோதாக்கள் வேளாண் துறையை முழுமையாக மாற்றி அமைப்பதுடன் பலகோடி விவசாயிகளையும் வலிமைப்படுத்தும்," என்று பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் வேளாண் விளை பொருட்களின் அரசாங்க கொள்முதல் ஆகியவை இல்லாமல் போகும் என்று எதிர்க்கட்சிகள் கூறும் நிலையில் இவை தொடரும் என்றும் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோதி இந்திய விவசாயிகளை முதலாளித்துவவாதிகளின் அடிமைகளாக மாற்ற பார்க்கிறார். அது இந்த தேசத்தில் ஒருபோதும் நடக்காது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி ட்விட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

farmers bill

பட மூலாதாரம், Rstv

படக்குறிப்பு, இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.

குறைந்தபட்ச ஆதரவு விலையை இந்திய அரசு உறுதி செய்யும் என்று வேளாண்மை அமைச்சர் கூறுகிறார். "இப்பொழுதும் தனியார் வர்த்தகம் நிகழ்கிறது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகை குறைந்தபட்ச ஆதார விலையை விட மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதை அமைச்சரால் மந்திரம் செய்வதுபோல வழங்க முடியும் என்றால், இதுநாள் வரை ஏன் அவர் அதை உறுதிப்படுத்தவில்லை?" என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான சிதம்பரம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்

திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் இந்த மசோதாக்களை கடுமையாக எதிர்க்கின்றன.

"அவர்கள் ஏமாற்றினார்கள். நாடாளுமன்றத்தின் அனைத்து விதிகளையும் அவர்கள் மீறினார்கள். இது வரலாற்றில் ஒரு முக்கியமான நாள் என்பதை மோசமான பொருளில் எடுத்துக் கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் இதைப் பார்த்து விடக்கூடாது என்பதற்காக ராஜ்யசபா தொலைக்காட்சியின் ஒளிபரப்பை நிறுத்தினார்கள். ராஜ்யசபா தொலைக்காட்சியை தணிக்கை செய்தார்கள். உங்கள் பிரசாரங்களை பரப்பாதீர்கள். எங்களிடம் ஆதாரம் உள்ளது," என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களுக்கு கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: