இந்திய குடும்பமுறை: கூட்டுக் குடும்பங்கள் இன்னும் பலமாக இருப்பது ஏன்

கூட்டு குடும்ப வாழ்க்கைமுறை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி

இந்தியாவில் குடும்ப உறவுகள் பலமானவை. இந்தியக் குடும்பங்கள் குலமரபின்படியாக அமைந்துள்ளன. அது பாதுகாப்பு மற்றும் அடையாளத்தைத் தருவதுடன், "மக்களை வெறுமையில் இருந்து காப்பாற்றியுள்ளது'' என்று எழுத்தாளர் வி.எஸ். நய்பால் எழுதியுள்ளார்.

அதில் பெரிய மாற்றம் எதுவும் நடந்துவிடவில்லை என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

உதாரணமாக, பொருளாதார வளர்ச்சி, நகரமயமாக்கல், கல்வி மற்றும் கலாசார மாற்றங்கள் காரணமாக இந்தியாவின் பெருமைக்குரிய கூட்டுக் குடும்ப நடைமுறை மெல்ல மெல்ல சிதைந்துவிடும் என்று பல அறிஞர்கள் நம்பினார்கள். ஆனால் உண்மை நிலை அதில் இருந்து மிகவும் மாறுபட்டதாக உள்ளது என்று மக்கள் தொகை நிபுணரும், கார்னெல் பல்கலைக்கழகத்தின் பகுதிநேர பேராசிரியராகவும் உள்ள எட்டியென் பிரெட்டன் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் நவீனமயமாக்கலுக்கும் குடும்ப அமைப்பு மாற்றங்களுக்கும் இடையிலான உறவுகள் குறித்து அவர் ஆய்வு நடத்தியுள்ளார்.

ஊகித்தபடி இல்லாமல், இந்தியாவில் தனிக்குடித்தனங்களின் எண்ணிக்கை குறைந்த அளவுதான் அதிகரித்திருக்கிறது என்று அவர் கூறுகிறார்.

20ஆம் நூற்றாண்டு தொடங்கியதில் இருந்து குடும்பத்தின் சராசரி அளவின் நிலையில் கணிசமான சரிவு எதுவும் ஏற்படவில்லை. திருமணங்கள் வழக்கமான அளவில் நடக்கின்றன. விவாகரத்து விகிதம் குறைவாக உள்ளது. பருவ வயதைத் தாண்டிய சிலர் திருமணம் செய்து கொள்ளாதது மற்றும் குழந்தையில்லாதது போன்ற காரணங்களால் தனிநபர் குடும்பங்களும் உள்ளன. கூட்டுக் குடும்பங்கள் என்பதற்கான மக்கள் வாழ்வியல் சூழ்நிலைகள் பலமாக நீடிக்கின்றன.

"குடும்ப மாற்றங்கள் என்ற விஷயத்தின் புரிதல்களுக்கு இந்தியா கடும் சவாலாக இருக்கிறது'' என்று டாக்டர் பிரெட்டன் என்னிடம் கூறினார்.

திருமணமான மகன்களுடன் வாழும் பெற்றோர்கள் என்ற அம்சத்தின் அடிப்படையில் அவருடைய சமீபத்திய ஆய்வு கவனம் செலுத்தியது. இந்தியாவில் திருமணமான பெண்கள், கணவர் எடுக்கும் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களாக இருந்தாலும் குடும்பத்தைப் பிரிப்பதற்கு பெரும்பாலும் காரணமாக இருப்பதில்லை. அபூர்வமாகத்தான் அப்படி நடக்கிறது.

கூட்டு குடும்ப வாழ்க்கைமுறை

பட மூலாதாரம், Getty Images

தந்தையின் மரணத்துக்கு முன்னதாக ஒரு மகன் தனியாக குடும்பத்தை அமைத்துக் கொள்ளும் போதுதான் இந்தியாவில் தனிக்குடித்தனம் உருவாகிறது.

பெற்றோரில் ஒருவர் - சாதாரணமாக தந்தை - காலமாகிவிட்டால், ஏற்கெனவே தனிக்குடித்தனத்தில் வசித்து வந்தாலும், தனிமையில் இருப்பவரை பராமரிக்கும் பொறுப்பை மகன்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

வளரும் உலகில் குடும்ப அமைப்புகள் குறித்து மிக நீண்டகாலமாக இந்தியாவின் தேசிய சாம்பிள் சர்வே (என்.எஸ்.எஸ்.) அமைப்பு ஆய்வு நடத்தி வருகிறது. மொத்த மக்களில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் திருமணம் ஆனவர்களாக இருக்கிறார்கள். அதில் சுமாராக 45 சதவீதம் பேர் - பெரும்பாலும் பெண்கள் - துணைவரை இழந்தவராக இருக்கிறார்கள். வயது முதிர்ந்த விதவையர் மற்றும் மனைவியை இழந்தவர்களில் சுமார் 80 சதவீதம் பேர் தங்கள் பிள்ளைகளுடன் வாழ்கிறார்கள் என்று என்.எஸ்.எஸ். அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் வயது முதிர்ந்த தம்பதியினரில் 40 சதவீதம் பேர் மட்டுமே பிள்ளைகளுடன் அல்லாமல் வாழ்கிறார்கள் அல்லது திருமணம் ஆகாத தங்கள் பிள்ளையுடன் வாழ்கிறார்கள். இந்த எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகளில் ஆறு சதவீதம் அதிகரித்திருக்கிறது.

"இந்தியாவில் தனிக் குடித்தனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்பதற்கு சிறந்த ஆதாரமாக இது உள்ளது'' என்று டாக்டர் பிரெட்டன் கூறுகிறார்.

வாழ்நாள் அதிகரிப்பு காரணமாக இளவயதினர் தொடர்ந்து பெற்றோருடன் வாழ்கின்றனர். அது ஒரு முக்கிய காரணமாக உள்ளது. 30 வயதான ஓர் ஆண் உயிருடன் உள்ள தன் பெற்றோரில் யாராவது ஒருவருடன் வாழும் நிலை 2020ல் உள்ளது. 1980ல் இருந்ததைவிட இது மாறுபட்டதாக உள்ளது.

மெல்ல மெல்ல நகரமயமாதல் நடந்து வருவதும் மற்றொரு காரணமாக உள்ளது. இந்தியர்களில் 35 சதவீதம் பேர் நகர்ப்புறப் பகுதிகளில் வாழ்கிறார்கள். சீனாவில் இது 60 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் பல நகரப் பகுதிகள் கிராமப் பகுதிகளாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் காட்டப்பட்டிருந்தாலும், கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில் தனிக் குடித்தனங்கள் அதிகமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

லண்டன் கிங்ஸ் கல்லூரியில் சமூக அறிவியலாளராக இருக்கும் அலைஸ் இவான்ஸ் என்பவர் பாலின சமத்துவம் குறித்த புத்தகம் பற்றி ஆய்வு நடத்தி வருகிறார். கூட்டுக் குடும்பங்கள் குடும்பத்தின் தொழிலை ஊக்குவிக்கின்றன என்பதாலும், பெண்களுக்கு குறைந்த வேலைவாய்ப்பு மட்டுமே உள்ளதாலும் கூட்டுக்குடும்ப பந்தங்கள் பலமாக உள்ளன, அதனால் உறவுகள் பலமாக இருக்கின்றன என்று அவர் நம்புகிறார். அதனால் இந்தியர்கள் தொடர்ந்து கூட்டுக் குடும்பங்களாக வாழ்கிறார்கள் என்று அவர் குறிப்பிடுகிறார். வீட்டுக்கான செலவு அதிகம் என்பதும், தனியாகக் குடும்பம் நடத்துவதை சிரமமானதாக ஆக்குகிறது. இந்தியக் குடும்பங்கள் அசாதாரணமானவை கிடையாது. 1900-ல் சீனா, ஜப்பான், கொரியா மற்றும் தைவான் குடும்பங்கள் அனைத்துமே இந்தியக் குடும்பங்களின் நீட்டிக்கப்பட்ட அமைப்புகள் போலத்தான் இருந்தன என்று டாக்டர் இவான்ஸ் கூறுகிறார். அப்போது தனிக் குடித்தனங்கள் என்பது அபூர்வமாக இருந்தன என்கிறார்.

கூட்டு குடும்ப வாழ்க்கைமுறை

பட மூலாதாரம், Getty Images

ஏழைகள் பெரும்பாலும் தனிக் குடும்பமாக வாழும் சூழல் அதிகமாக உள்ளது.

``கிழக்காசிய குடும்பங்கள், இந்தியக் குடும்பங்களைப் போல வலுவான குடும்ப பந்தங்கள் கொண்டதாக இருந்தன. ஆனால் 20வது நூற்றாண்டில், குடும்பத் தொழில் என எதுவும் இல்லாததாலும், கிராமப் பகுதிகளில் இருந்து நகரப் பகுதிகளுக்கு குடிபெயர்வு நடந்ததாலும், பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்ததாலும், அதிகமான தனிக் குடித்தனங்கள் உருவாயின'' என்று டாக்டர் இவான்ஸ் என்னிடம் கூறினார். பருவ வயதை தாண்டிய பெரியவர்கள் தொடர்ந்து தங்கள் பெற்றோருக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் ``சேர்ந்து வாழ்வதாக அல்லாமல் பணம் அனுப்புவதன் மூலம்'' ஆதரவாக இருக்கிறார்கள்.

தனிக் குடித்தனங்கள் உருவாக பெண்கள் வேலைவாய்ப்பும் ஒரு காரணமாக உள்ளது. இதிலும் கிழக்கு ஆசியா மாறுபட்ட உதாரணமாக உள்ளது.

ஜப்பான், கொரியா, தைவான் மற்றும் சீனாவில் நிறைய பெண்கள் கடந்த நூற்றாண்டில் வேலைக்குச் செல்லத் தொடங்கிய நிலையில், தம்பதியினரின் இரட்டை வருமானம் காரணமாக பொருளாதார சுதந்திரம் அதிகரித்தது.

உதாரணமாக, பெரிய நிறுவனங்களில் தென்கொரியா நிறைய முதலீடு செய்தது. தொழிற்சாலைகளில் , பிறருடன் சேர்ந்து வேலைபார்ப்பதுடன், டார்மிட்ரிகளில் வாழ்க்கை, உரிமைகளுக்காகப் போராடுதல் என்று தொழிலாளர்கள் ``தங்கள் வாழ்க்கை அந்தஸ்து பற்றி உணரத் தொடங்கினர். குடும்பங்களுக்கு வெளியே உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர்'' என்று டாக்டர் இவான்ஸ் கூறினார்.

பொருளாதார சுதந்திரம் கிடைத்த நிலையில், பெண்கள் குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகள் பெற்றுக் கொண்டனர். வெளியில் வேலைக்குச் செல்வது அப்போதுதான் எளிதாக இருக்கும்.

தெற்காசியாதான் ஆய்வில் மாறுபட்ட அம்சமாக இருக்கிறது என்று டாக்டர் இவான்ஸ் நம்புகிறார்.

``அங்கே பெண்கள் வேலைவாய்ப்பு என்பது ஒடுக்கப்பட்ட நிலையுடன் தொடர்புடையதாக இருக்கிறது. தொழிலாளர் சந்தையில் இருந்து விலகிக் கொள்வதன் மூலம் கிராமப்புற பெண்களின் அந்தஸ்து அதிகரிக்கிறது. தொழிற்புரட்சியின் ஆரம்ப காலத்தில் மேற்கு ஐரோப்பாவில் இருந்ததைப் போன்ற அதே நிலைப்பாடு இங்கே காணப்படுகிறது. கிராமப்புற பெண் வேலைக்குச் செல்ல விரும்பினாலும், வேளாண்மையில் இயந்திரமயமாக்கல் வந்ததால், பெண்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு'' என்று இவான்ஸ் கூறியுள்ளார். பெண்களுக்கு வேலை வாய்ப்பு குறைவு என்பது, இளம் ஜோடிகளின் பொருளாதார சுதந்திரத்திற்குத் தடையாக உள்ளது. ``பெண்கள் வேலைக்குச் செல்லாவிட்டால், தங்கள் தொடர்புகளை விரிவுபடுத்திக் கொள்ளாவிட்டால், குடும்பத்துடன் அதிக பிணைப்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள்'' என்று டாக்டர் இவான்ஸ் தெரிவித்தார்.

கூட்டு குடும்ப வாழ்க்கைமுறை

பட மூலாதாரம், Getty Images

முதிய வயதினர் பெரும்பாலும் திருமணமான தங்கள் மகன்களுடன் வாழ்ந்து, பேரப் பிள்ளைகளை கவனித்துக் கொள்கின்றனர்.

நிச்சயமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஜிடிபி அளவில் ஒப்பிடும்போது, இதில் இந்தியாவில் அசாதாரண சூழ்நிலை இல்லை. பல நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் நாடுகளில், நீட்டிக்கப்பட்ட குடும்பங்கள் என்பது சாதாரணமானது என்று ஸ்டீபன் ரக்கிள்ஸ் மற்றும் மிஸ்ட்டி ஹெக்கெனெஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 15 வளரும் நாடுகளின் மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்களை இவர்கள் ஆய்வு செய்ததில், தலைமுறைகளாக சேர்ந்து வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்துவிடவில்லை என்று தெரிய வந்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இருந்தாலும் இந்தியாவில் உருவாகி வரும் மற்றும் சிக்கலான குடும்ப அமைப்பு முறை குறித்து முழுமையான விளக்கம் கிடைக்கவில்லை.

இந்தியக் குடும்பங்கள் பற்றி சமூகவியலாளர் துளசி பட்டேல் நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்தியாவில் தனிக் குடித்தனம் என்பதை விவரிப்பதே கூட சில சமயங்களில் சிக்கலானதாக இருக்கிறது என்று அவர் கூறுகிறார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

``பெற்றோர்கள் முதிய வயதில் ஒரு மகனின் வீட்டில் இருந்து இன்னொரு மகனின் வீட்டுக்குச் செல்கின்றனர். தங்கள் பேரக் குழந்தைகளுக்கு துணையாக இருக்கவும், தங்களை தங்களின் பிள்ளை கவனித்துக் கொள்ளவும் அப்படி செல்கிறார்கள். பிள்ளைகள் வெளிநாட்டிற்குச் சென்றால், மகள்கள் மற்றும் மகன்களுடன் சேர்ந்து வாழ்ந்து, பேரக் குழந்தைகளை கவனித்துக் கொள்கிறார்கள். வீட்டில் சேர்ந்து வாழும் நிலையில் மாறிக் கொண்டே இருக்கும் இந்த சூழ்நிலையை எந்த அடிப்படையில் வகைப்படுத்துவது?'' என்று டாக்டர் பட்டேல் என்னிடம் கூறினார்.

ஆச்சர்யமான இன்னொரு விஷயம் என்னவென்றால், பெரும்பாலானோரின் எண்ணத்தின்படி அல்லாமல், வசதிமிக்கவர்களைக் காட்டிலும், ஏழ்மையில் உள்ள இந்தியர்கள்தான் அதிக அளவில் தனிக் குடித்தனமாக வாழ்கிறார்கள்.

2000வது ஆண்டுகளின் ஆரம்பத்தில் இருந்து, 30 வயதுகளில் உள்ள திருமணமானவர்கள் மத்தியில், கல்வி அறிவு இல்லாத விவசாயிகள்தான் அதிக அளவில் தனிக் குடித்தனங்களாக வாழ்கிறார்கள், கல்லூரிக் கல்வி பெற்ற சம்பளம் பெறும் அலுவலர்களைக் காட்டிலும் இது அதிகமாக உள்ளது என்று டாக்டர் பிரெட்டன் கண்டறிந்துள்ளார்.

கூட்டு குடும்ப வாழ்க்கைமுறை

பட மூலாதாரம், Getty Images

ஏழைகள் தனிக் குடித்தனமாக வாழ்வதில் அதிக நாட்டம் காட்டுகின்றனர்; ஏனெனில் கட்டுப்பாடுகள் குறைவு - தங்கள் பிள்ளைகள் மீது தங்கள் பெற்றோர்கள் கட்டுப்பாடு செலுத்த முடியாது, ஏழைக் குடும்பத்தினர் சிறிய வீடுகள் வாங்குகிறார்கள். ஒன்றாக சேர்ந்து வாழ்வதற்கு ஏற்ற வருமானம் கிடையாது. குடும்ப விவசாய நிலங்கள் அல்லது சிறிய வியாபாரங்கள் மூலம் வருமானம் குறைவு ஆகியவை இதற்குக் காரணங்களாக உள்ளன.

``முதிய வயது, தனிக் குடித்தனங்கள் ஆகியவை கல்வி அறிவற்ற தொழிலாளர்கள் மத்தியில் அதிக அளவில் காணப்படுகிறது. விவசாயிகள் மத்தியில் இது கணிசமாக அதிகரித்துள்ளது'' என்று டாக்டர் பிரெட்டன் தெரிவித்துள்ளார்.

``இந்தியாவில் தனிக் குடித்தன அமைப்பு உருவாதலுக்கு நவீன மேல்தட்டு மனப்போக்கு காரணமாக இல்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. ஆனால் பொருளாதாரத் தேக்கம் அல்லது நவீனமயமாக்கத்தால் மக்கள் தொகையில் பின்னுக்குத் தள்ளப்பட்டு பாதிப்பு சூழலில் இருப்பவர்கள் ஏழ்மையில் தள்ளப்படுவது ஆகியவை தான் இதற்குக் காரணங்களாக உள்ளன'' என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியக் குடும்ப அமைப்பு மாற்றங்கள் இல்லாமல் இருக்கின்றன என்று சொல்லிவிட முடியாது.

பெற்றோர் ஏற்பாட்டில் நடைபெறும் திருமணங்களில் கணவரைத் தேர்வு செய்வதில் பெண்கள் மெல்ல ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். பொருளாதார ரீதியில் தனித்து நிற்கும் வாய்ப்புள்ள முதிய பெற்றோர்கள், தனியாக வாழும் வாய்ப்பைத் தேர்வு செய்கின்றனர்.

குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், ஒரு மகன் உள்ள அல்லது மகன் இல்லாத நிலையில், கூட்டுக் குடும்பங்கள் உருவாதலுக்கு எதிரான வாழ்வியல் சூழ்நிலைகளம் பலம் பெறும்'' என்று டாக்டர் பிரெட்டன் கூறுகிறார். திருமணமான தங்கள் மகளுடன் பெற்றோர்கள் முதிய வயதில் சேர்ந்து வாழும் சூழல் வருமா என்று பார்க்க வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இருந்தாலும், இந்தியக் குடும்ப அமைப்பில் கல்வி கற்றவர்களைக் காட்டிலும், ஏழைகள் தான் மாற்றங்களை முன்னெடுப்பவர்களாக இருப்பார்கள் என்று நிறைவாக டாக்டர் பிரெட்டன் கூறியுள்ளார்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: