சென்னையில் மதுபான கடைகள் திறப்பு: கட்டுப்பாடுகளும் எதிர்ப்புகளும்

மதுபானம்

பட மூலாதாரம், Getty Images

சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குள் செயல்படும் 700க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செவ்வாய்க்கிழமை முதல் திறக்கப்படுகின்றன. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், இந்த நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மாநில அரசின் டாஸ்மாக் நிறுவனத்தால் நடத்தப்படும் மதுபான கடைகள் மார்ச் மாதம் 24ஆம் தேதியோடு மூடப்பட்டன.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ள 4,550 கடைகள் மே மாதம் 7ஆம் தேதியே மதுபான கடைகள் திறக்கப்பட்டன.

இதற்கிடையே, நீதிமன்ற விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படாததால் கடைகள் மே 9ஆம் தேதி மூடப்பட்டன. பிறகு உச்ச நீதிமன்ற உத்தரவைப் பெற்று கடைகள் மீண்டும் மே 16ஆம் தேதியன்று திறக்கப்பட்டன.

ஆனால், சென்னை பெருநகர காவலுக்குட்பட்ட பகுதிகளில் இருந்த சுமார் 750 மதுபான கடைகள் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில், சென்னை நகர காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் மதுபான கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் நீடித்து வருவதால், விற்பனைக்கென பல்வேறு கட்டுப்பாடுகளை டாஸ்மாக் விதித்துள்ளது.

அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் வழங்கி விற்பனையை நடத்த வேண்டும். ஒரு நாளைக்கு 500 டோக்கன்களை மட்டுமே வழங்க வேண்டும். வாடிக்கையாளர்கள் நிற்பதற்கு ஷாமியானா பந்தல்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும், 50 பேர் வரிசையில் நிற்க ஏதுவாக 50 வட்டங்களை இட வேண்டும். கடையில் இடமிருந்தால் இரண்டு கவுன்டர்களை அமைக்க வேண்டும். எல்லா வாடிக்கையாளர்களையும் சானிடைசரால் சுத்தம் செய்த பிறகே கவுன்டரில் அனுமதிக்கப்பட வேண்டும். கடையின் பணியாளர்கள் கையுறை, முக கவசம் அணிந்தே விற்பனையில் ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மதுபான கடைகளைத் திறப்பதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Banner image reading 'more about coronavirus'
Banner

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சென்னை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பரவியதில் டாஸ்மாக் கடைகளுக்கு பெரும்பங்கு உண்டு எனத் தெரிந்தும், சென்னையிலும் அக்கடைகளைத் திறப்பது பெரும் தவறு. யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்!" என்று கூறியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், சென்னைக்கு வெளியே ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா பரவல், மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்பட்டதற்குப் பிறகுதான் வேகமெடுத்தது என்பது தெரிந்திருந்தும் இப்படியோர் முடிவெடுப்பது துளியும் மனசாட்சி இல்லாத செயலாகும். மக்கள் எப்படி வேண்டுமானாலும் போகட்டும்; அரசுக்கு வருமானம் வந்தால் போதும் என்ற ஆட்சியாளர்களின் எண்ணத்தை ஏற்கவே முடியாது" என்று கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக மக்கள் நீதி மைய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில், "காய்கறி வாங்கச் சென்றவருக்கு கொரோனா, வழிபாட்டுத் தலம் சென்றவருக்கும் கொரோனா, பணியிடத்தில் மருத்துவர், செவிலியர், காவலர் என எங்கும் கொரோனா என்று அரசு கூறுகிறது. மதுபான கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படாததால் சென்னையில் நாளை திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: