டாஸ்மாக் - மதுவைத் தள்ளிவைத்து வளர்ந்த தமிழக தலித் கிராமத்தில் எட்டிப்பார்க்கும் போதை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
- பதவி, பிபிசி தமிழ்
மதுவைத் தள்ளிவைத்து பண்பாட்டுப் புரட்சி நடத்திக்கொண்ட ஒரு தலித் கிராமம் மூன்று நான்கு பத்தாண்டுகளில் வியக்கத்தக்க வளர்ச்சி கண்டது. ஆனால், அரசே மதுக்கடைகளை ஏற்று நடத்த தொடங்கிய பிறகு அந்த ஊரின் சுய ஒழுங்கில் விரிசல் ஏற்பட்டு, போதை பாய்வதை முந்தைய தலைமுறையால் முழுவதும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
மதுவிலக்கு தொடர்பான அரசின் கொள்கை என்னவாக இருந்தாலும், வெள்ளூர்-1 கிராமத்தின் கொள்கை மதுவைத் தவிர்ப்பதுதான்.
திருவண்ணாமலை மாவட்டம், சந்தவாசல் அருகே இருக்கிறது வெள்ளூர். இங்கு தலித் மக்கள் வசிக்கும் பகுதி தம் பெயரில் இருந்த காலனி என்ற சொல்லை நீக்கிக்கொண்டு, வெள்ளூர்-1 என்று புதுப் பெயர் சூட்டிக்கொண்டது.
இந்த ஊரில் சுமார் 40 ஆண்டுகள் முன்பு பொது வேலைகளில் இணைந்து செயல்பட்ட சில நண்பர்கள் ஊர் மக்கள் தங்கள் மீது வைத்திருந்த மரியாதையை அடிப்படையாக கொண்டு சில சீர்திருத்தங்களை செயல்படுத்தினார்கள்.

அவற்றில் முதன்மையானது, ஊரில் கள்ளச்சாராயம் காய்ச்சவோ, விற்கவோ அனுமதிப்பதில்லை என்பது. ஆனால், சாராயத்தையோ, பிற மதுவகைகளையோ அருந்தக்கூடாது என்பதை ஊர்க்கட்டுப்பாடு போல இறுக்கமான சட்டமாக இவர்கள் மேலிருந்து பிரயோகிக்கவில்லை. கண்டிப்பும் கரிசனமும் கலந்த தங்கள் அணுகுமுறையால், ஓர் இயக்கம்போல விரிந்த தங்கள் செயல்பாட்டால் ஊரில் இவர்கள் ஒரு பண்பாட்டைக் கட்டமைத்தார்கள்.
அந்தப் பண்பாட்டால், இளைஞர்களைத் தழுவிக்கொண்டார்கள். அதில் மது விலக்கப்பட்டிருந்தது. முதியவர்கள், உடலுழைப்பு மிகுந்த தொழிலாளர்கள் வெகுசிலர் ரகசியமாக வெளியூர்களில் மது அருந்துவதுண்டு என்றாலும், அவர்கள் இந்த இளைஞர்கள் கட்டியெழுப்பிய பண்பாட்டுக்கு இடையூறு செய்யவில்லை. இளைஞர்களும் இந்த வெகு சிலரை கண்டும் காணாமலும் சகித்துக்கொண்டு தாங்கள் உருவாக்கிய பண்பாட்டைப் பராமரித்தார்கள்.

மது விலக்கிக்கொண்ட வெள்ளூர் படிப்பெனும் ஏணியைப் பற்றிக்கொண்டது. இந்த சில பத்தாண்டுகளில் 264 வீடுகளைக் கொண்ட தங்கள் சிற்றூரில் உருவாகி வந்திருப்பவர்கள் “7 டாக்டர்கள் (அவர்களில் ஒருவர் எம்.டி.), சுமார் 40 ஆசிரியர்கள், சுமார் 20 பொறியாளர்கள், சுமார் 50 முன்னாள் ராணுவத்தினர், 30 இன்னாள் ராணுவத்தினர். ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட பட்டதாரிகள். அவர்களில் 6 பேர் எம்.ஃபில். ஆய்வு முடித்தவர்கள்” என்கிறார் து.வேலுமயிலோன். எம்.ஃபில் ஆய்வுப் பட்டம் பெற்றவர்களில் இவரும் ஒருவர்.
ஊரின் முகத்தை மாற்றியமைத்துக் கொண்டிருந்த சீர்திருத்த இயக்கத்தில் தமது 19வது வயதில் சேர்ந்துகொண்ட வேலுமயிலோனுக்கு இப்போது வயது 55. ஊருக்குள் முந்தைய தலைமுறை கொண்டுவந்த ஒழுக்க நெறிகளை தற்போதும் காத்துக்கொண்டிருப்பவர்களில் ஒருவர் இவர்.
இப்போதும் இந்த ஊரில் மதுவிலக்கு எப்போதும்போல கட்டுப்பாட்டுடன் கடைபிடிக்கப்படுகிறதா என்று வேலுமயிலோனிடம் கேட்டோம்.
“பெரும்பாலும் மதுவுக்கு எதிரான கட்டுப்பாடு தொடர்கிறது. ஆனால், பழைய ஒழுங்கு கொஞ்சம் குலைந்துதான் இருக்கிறது. சுமார் 5 சதவீதம் பேர், வெளியே சென்று குடித்து வருகிறார்கள். எங்கள் ஊரில் டாஸ்மாக் மதுக்கடை இல்லைதான். ஆனால், சுற்றி மூன்று புறங்களிலும் 5 கி.மீ. தூரத்துக்குள் மதுக்கடைகள் உள்ளன” என்கிறார் அவர்.

ஏற்கெனவே மதுவை கிட்டத்தட்ட முழுமையாக விலக்கி இருந்த தலைமுறை படித்து உயர்ந்தது போல இப்போதும் நடக்கிறதா? குடிப்பழக்கம் தலை தூக்குவதால் ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்று அவரிடம் கேட்டோம்.
“பாதிப்பு தெரியத் தொடங்கிவிட்டது. முன்பெல்லாம் படித்தவர்கள் வெளியில் செல்லவேண்டும், ஏதாவது வேலை செய்யவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவார்கள். அந்த ஆர்வம் கொஞ்சம் குறைகிறது” என்றார்.
அந்த ஊரில் இருந்து உருவாகி வந்து தனியார் துறையில் வேலை செய்கிற நடுத்தர வயது ஆண் ஒருவர் பெயரை வெளியிடவேண்டாம் என்ற நிபந்தனையோடு சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
டாஸ்மாக் வருகைக்குப் பிறகு இந்த ஊரில் மதுப்பழக்கம், வேலுமயிலோன் குறிப்பிடுவதைப் போல 5 சதவீதம் அல்ல அதைவிட பல மடங்கு கூடுதலாகவே தலையெடுத்துவிட்டது என்று அவர் கவலை தெரிவிக்கிறார்.
குடிப்பழக்கம் ஊரில் தலையெடுப்பதற்கு டாஸ்மாக் மட்டும்தான் காரணம் என்று எப்படி சொல்லமுடியும் என்று கேட்டபோது, “ஊரில் இப்போது 40 வயதுக்கு மேல் இருக்கிற தலைமுறையில் மது அருந்துகிறவர்கள் மிகமிக குறைவு. வேறு ஊர்களில் இருக்கிற கள்ளச்சாராயக் கடைகளில்கூட சிறுவர்கள், விடலைப் பையன்கள் போய்க் கேட்டால் சாராயம் தரமாட்டார்கள். குடிப்பவர்கள் சங்கடப்பட்டார்கள். ஆனால், டாஸ்மாக் வந்தபிறகு அதற்கு ஒரு சட்ட, சமூக அங்கீகாரம் கிடைத்தது போல இருக்கிறது. விடலைப் பையன்கள்கூட குடிக்கிறார்கள்” என்றார் அவர்.

தேர்தல் பிரசாரத்தில் ஒழுங்கு
இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு இந்த ஊரில் ஏற்பட்ட பண்பாட்டு மாற்றம் என்பது வெறும் மதுவிலக்கு, பள்ளி, கல்லூரிக் கல்வியில் கவனம் செலுத்துவது மட்டுமல்ல. வேலுமயிலோன் போன்றவர்கள் திரட்டிவைத்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பகிர்ந்து படிப்பதும் அந்தப் பண்பாட்டின் அங்கம்தான்.
அது மட்டுமல்ல, இந்த ஊரில் ரசிகர் மன்றங்கள் இல்லை. தேர்தல் காலங்களில், ஓடும் வண்டிகளில் ஸ்பீக்கர்கள் அலறியபடி பிரசாரம் செய்யவோ, சுவர் பிரசாரம் செய்யவோ அனுமதிப்பதில்லை. தேர்தலில் போட்டியிடுகிற எவரும் ஊர்மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தால் ஊர் மக்கள் ஓரிடத்தில் கூடுவார்கள். அவர்கள் மத்தியில் வேட்பாளரோ, அவரது பிரதிநிதிகளோ தாங்கள் பேச விரும்புகிறவற்றை பேசலாம். அதைப் போலவே மற்றொரு தரப்பு பேச விரும்பினாலும், அவர்களுக்கும் ஒரு நாள் வாய்ப்பு தரப்படும். வேறு எந்த வகை பிரசாரமும் அனுமதிக்கப்படாது. இரு தரப்பு பேச்சையும் கேட்டு மக்கள் தங்கள் தேர்வை தாங்கள் விரும்பியபடி செய்துகொள்ளலாம்.
ஒழுங்கைப் பராமரிப்பது எப்படி?
பல பத்தாண்டுகளாக நீடிக்கும் இந்த ஒழுங்கை ஒரு சிற்றூர் மட்டும் தனித்து நின்று செயல்படுத்துவது எப்படி? ஏதேனும் அமைப்பு வைத்திருக்கிறார்களா? யாரும் இந்த ஒழுக்க நெறிகளுக்கு சவால் விட்டால் என்ன செய்வார்கள்?
இந்தக் கேள்விகளை வேலு மயிலோனிடம் கேட்டோம்.
“நாங்கள் ஒரு அமைப்பு மாதிரி செயல்படுகிறோமே தவிர, முறைப்படியாக ஒரு அமைப்பு ஏதும் பதிவு செய்து நடத்தவில்லை. அப்படி நடத்தினால், போட்டி அமைப்புகள் உருவாகும். பிளவு தோன்றும். மாணவர்களுக்கு இலவச தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்திவந்தேன். ஊரின் சுக துக்கங்களில் பங்கேற்று, பணிகளைப் பகிர்ந்து செய்கிறோம். க.மோகன், து.முருகேசன் போன்றோர் துணையாக இருக்கிறார்கள். மாணவர்கள், இளைஞர்கள் படிப்பதற்கு நூல்களை அளிக்கிறேன்.

- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?

இப்போது நிலைமை கொஞ்சம் தளர்ந்துதான் இருக்கிறது. மது அருந்துகிறார்கள். ஆனால், யாரும் மது அருந்தக் கூடாது என்ற ஒழுங்கை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை. ஒரு முறைகூட அப்படி நடந்ததில்லை. ஒளிவு மறைவாகத்தான் மது அருந்துவது நடக்கிறது.
அப்படி யாரும் கேட்டால் என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. படித்த முந்தைய தலைமுறை தொடர்ந்து அடுத்த தலைமுறையை ஊக்குவிப்பதும் நடந்துவருகிறது.
பொங்கல் விழா, விளையாட்டுப் போட்டிகள் நடத்துவோம். 7-8 பேர் அறக்கட்டளை போல தங்கள் தாய்-தந்தை பெயரில் நிதியுதவி செய்கிறார்கள், பரிசு கொடுக்கிறார்கள். அந்த ஆண்டில், படிப்பில் சிறந்த இடம் பிடித்த மாணவர்களுக்கு இந்த உதவிகள் சென்று சேர்கின்றன ” என்றார் அவர்.
வெள்ளூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தியிடம் இது பற்றிப் பேசினோம். இவர் தலித் அல்லாத இடைநிலை சாதியைச் சேர்ந்தவர். “வெள்ளூர்-1ல் படித்தவர்கள் அதிகம். மது அருந்தமாட்டார்கள். ஆனால், அந்தப் பழைய ஒழுங்கு டாஸ்மாக் வருகைக்குப் பிறகு குறைந்துவிட்டது உண்மைதான். எங்கள் ஊராட்சியில் சாதிச்சண்டைகள் எப்போதும் இருக்காது. தலித்துகள் –பிற்படுத்தப்பட்டோர் இடையே நல்லுறவு இருக்கும். இதனால், நான் ஊராட்சித் தலைவராக இருந்தபோது, சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதினைப் பெற்றேன்” என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












