உம்பான் புயல் இன்று கரையை கடக்கிறது - சில முக்கிய தகவல்கள்

உம்பான் புயல்

பட மூலாதாரம், ARUN SANKAR / Getty

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கியச் செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ் திசை - வங்கக் கடலில் புயல்கள் உருவாவது ஏன்?

வங்காளவிரிகுடாவில் இயல்பான வெப்பநிலையைக் காட்டிலும் அதிகமான வெப்ப நிலை காரணமாக சூப்பர் புயல்கள் உருவாவதாக வானிலை ஆய்வு மற்றும் வளிமண்டல விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர் என்கிறது இந்து தமிழ் திசை.

1999-ம் ஆண்டு பாரதீப் மற்றும் ஒடிசாவைப் புரட்டி எடுத்த சூப்பர் புயலுக்குப் பிறகு தற்போது வங்கக்கடலில் உம்பான் புயல் உருவாகி சூப்பர் புயலாக மேற்கு வங்கம் நோக்கி கரையைக் கடக்கவுள்ளது.

கடல்களின் மேற்புற உஷ்ணமாதலால் உருவாகும் வெப்பம் மற்றும் ஈரப்பதங்களினால் புயல்கள் தங்கள் ஆற்றல்களைப் பெறுகின்றன. இந்த ஆண்டு வங்கக்கடலில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை அதிகரித்தது. புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டினால் புவிவெப்பமடைதல் துரிதமடைந்து கடல்களின் மேற்பரப்பு உஷ்ணமாகின்றன. இதனையடுத்து சாதாரண புயல்கள் சூப்பர் புயல்களாக உருவாகின்றன என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

"வங்கக்கடலில் மே மாதத்தின் முதல் 2 வாரத்தில் சீராக தினமும் 32-34 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இது பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் மிகப்பெரிய சாதனை வெப்ப அளவு மாற்றங்களாகும், இது போன்று இதுவரை நாங்கள் கண்டதில்லை" என்று இந்திய உஷ்ணவியல் வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி ராக்ஸி மேத்யூ கோல் என்பவர் தெரிவிக்கிறார்.

உம்பான் புயல்

பட மூலாதாரம், SURANJAN DATTA

இதனால்தான் உம்பான் புயல் 1-ம் எண் புயலிலிருந்து 18 மணி நேரத்தில் 5ம் எண் சூப்பர் புயலாக உருவெடுத்தது. இது வழக்கத்துக்கு மாறான திரட்சியாகும். இதுவும் வங்கக்கடலின் அதி உஷ்ண நிலையின் விளைவுதான்.

புவிவெப்பமடைதல் விளைவாக கடல் மேற்பரப்பு நீர் உஷ்ணமடைதல் என்பது வங்கக்கடலில் மட்டுமல்லாது அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல், ஆகியவற்றிலும் நிகழ்ந்துள்ளது. இதனால் புயல் எச்சரிக்கை கணிப்பு துல்லியமாக இருப்பதில்லை என்பதோடு பருவமழை வகைமாதிரிகளையும் இடையூறு செய்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Presentational grey line

தினத்தந்தி - உம்பான் புயல் கரையை கடக்கிறது

வங்காள விரிகுடாவில் உம்பான் புயல், நேற்று முன்தினம் அதிதீவிர புயலாக உருவெடுத்தது. அந்த புயல், மேலும் தீவிரமடைந்து, இன்று பிற்பகலில் மேற்கு வங்காளத்தின் டிகாவுக்கும், வங்காளதேசத்தின் ஹடியா தீவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.

இதனால், மேற்கு வங்காளத்தின் கரையோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டுவதுடன், பெருத்த சேதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அண்டை மாநிலமான ஒடிசாவின் கடலோர பகுதிகளிலும் பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உம்பான் புயல்

பட மூலாதாரம், NAYANA MAJUMDAR

ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 185- கி.மீட்டர் வரை சூறாவளிக் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால், செல்போன் டவர்கள், மின்சார கோபுரங்கள், கூரை வீடுகள், பலவீனமான அடித்தளங்களைக் கொண்ட கட்டிடங்கள் சேதத்திற்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்கிறது அந்த செய்தி.

Presentational grey line

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - அதிமுகவில் கட்சி பதவி ஒழிப்பு

அதிமுகவில் 'கிராம ஊராட்சி செயலாளர்' பதவி ஒழிக்கப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இந்தப் பதவிகள் 2006ஆம் ஆண்டு முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டவை.

பதவியிழந்த 12,500க்கும் மேற்பட்டவர்களுக்கு, கட்சியில் மாற்று பதவிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: