நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள்: வெளிமாநிலத் தொழிலாளர் பிரச்சனைக்கு சீர்திருத்தங்கள் தீர்வாகுமா?

பட மூலாதாரம், Hindustan Times
கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் பெரும் சவாலைச் சந்தித்திருக்கும் நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்ட நிதிச் சலுகைகள் எத்தகையவை, தற்போதைய பிரச்சனைகளுக்கு அவை தீர்வாகுமா என்பதெல்லாம் குறித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் ஜோதி சிவஞானத்திடம் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். பேட்டியிலிருந்து:
கே. கொரோனா நோய்ப் பரவல் இந்தியப் பொருளாதாரத்திற்கு பெரும் சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துமெனக் கருதுகிறீர்கள்?
ப. பொதுவாகவே பொருளாதாரத்தில் ஏற்ற - இறக்கம் இருக்கும். தேவை மற்றும் விநியோகத்தில் ஏற்படும் மாறுபாடுகளால் இந்த ஏற்ற - இறக்கம் ஏற்படும். ஆனால், இப்போது ஏற்பட்டிருக்கும் சிக்கல் வேறுமாதிரியானது. விநியோகம் (Supply) முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. காரணம், கொரோனாவுக்காகப் போடப்பட்ட ஊரடங்கு. அதேபோல, 'தேவை'யிலும் (Demand) பெரும் தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதையும் நாம்தான் நிறுத்திவைத்துள்ளோம். இது உலகம் முழுக்கவே நடந்திருக்கிறது.
2007-08லிருந்தே நமது பொருளாதாரம் சரிவைச் சந்தித்துவருகிறது. ஆனால், அண்மைக் காலத்தில் அது மிக வேகமாக நடப்பதற்குக் காரணம், அரசினுடைய சில கொள்கைகள்தான். பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்த வீழ்ச்சியை அதிகரித்தது. ஜி.எஸ்.டி. அமலாக்கம் இன்னும் அதிகப்படுத்தியது. 2019ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு வெளியிடப்பட்ட பட்ஜெட் அதை மேலும் அதிகப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை நான்கு சதவீதத்தில் கொண்டுவந்து நிறுத்தியது. பொருளாதார வளர்ச்சியை பழைய முறைப்படி கணக்கிட்டால் உண்மையில் வளர்ச்சி என்பது வெறும் ஒரு சதவீதமாகத்தான் இருக்கும். அதாவது காலனி ஆதிக்ககாலத்தில் இருந்த வளர்ச்சி விகிதம் இது.

பட மூலாதாரம், Getty Images
இது தவிர, தற்போது நிதிப் பற்றாக்குறை மிக அதிகமாக இருக்கிறது. பொதுக் கடனின் அளவு மிக அதிகமாக இருக்கிறது. கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்திலேயே மத்திய அரசின் கடன் 50 சதவீதம் + மாநில அரசின் கடன் 20 சதவீதம் என ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 70 சதவீதத்திற்கு நமக்குக் கடன் இருந்தது. அதாவது கிட்டத்தட்ட 140 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இதற்கு வட்டி கட்டிக் கொண்டிருக்கிறோம்.
பொருளாதாரம் இவ்வளவு மோசமான சூழலில் இருந்தபோதுதான் மார்ச் 24ஆம் தேதி நாம் எல்லாவற்றையும் மூடுவதென முடிவெடுத்தோம். இதனால், தேவையும் விநியோகமும் கடுமையான பாதிப்பிற்குள்ளாயின.
பிறகு அத்தியாவசியமான பொருட்களின் விற்பனை அனுமதிக்கப்பட்டது. ஆனால், மதுபான வகைகள் அத்தியாவசியமான ஒன்றாக கருதப்பட்டு விற்கப்படும் நிலையில், மாணவர்கள் பயன்படுத்தும் லேப்டாப் போன்றவை அத்தியாவசிமானவையாக கருதப்படவில்லை. இதனால், பெரும்பாலான துறைகள் கீழே வீழ்ந்தன.
இதில், முறைசார தொழில்துறையும் வெளிமாநில தொழிலாளர்களும்தான் மிகப் பெரிய சிக்கலைச் சந்தித்தார்கள். வெளிமாநிலத் தொழிலாளர்கள் எவ்வளவு எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பது இப்போதுதான் தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் முன்பெல்லாம் வறுமையைக் கணக்கீடு செய்வோம். கடந்த ஆறு ஆண்டுகளில் அதைச் செய்வதில்லை. திட்டக் குழு கடைசியாக செய்த கணக்கீட்டின்படி இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்தார்கள். திட்டக் குழு கலைக்கப்பட்ட பிறகு அந்தக் கணக்கீடு செய்யப்படுவதில்லை.
முந்தைய கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், வறுமை இரண்டு மடங்காகியிருக்கும் என்கிறார்கள். வேலைவாய்ப்பின்மை 27 சதவீதமாக உயர்ந்திருப்பதாக சிஎம்ஐஇ சொல்கிறது. தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களிலேயே 47 சதவீதம் வேலைவாய்ப்பின்மை இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த வேலை இழப்பு, வருமான இழப்பையும் ஏற்படுத்தும். இதனால், தேவை என்பது கடுமையாகக் குறைந்துவிட்டது.

- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?

கே. மத்திய அரசு பல சலுகைகளை, பல திட்டங்களை stimulusஆக அறிவித்திருக்கிறது. இது பொருளாதாரத்தை மீட்க உதவுமா? வெளி மாநிலத் தொழிலாளர்களுக்காக அரசு அறிவித்துள்ள திட்டங்கள் போதுமானவையா?
ப. பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் அறிவிப்புகள் வேண்டுமென பலரும் கோரிவந்த நிலையில், மத்திய அரசு அதற்கு பதிலளிக்கும்விதமாக இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. முதன்முதலில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு 1.70 கோடிக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டின் பட்ஜெட் 30 லட்சத்து 42 ஆயிரம் கோடி. இந்த பட்ஜெட்டுக்கு மேல் அரசு செலவுசெய்தால்தான் அது கூடுதல் செலவு அல்லது stimulus.
ஆனால், இவர்கள் அறிவித்த stimulusல் பட்ஜெட்டில் சொன்னதையே திரும்பச் சொன்னார்கள். நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம், விவசாயிகளுக்குக் கொடுக்கக்கூடிய இரண்டாயிரம் ரூபாய், ஜன் தன் கணக்குகளில் ஐநூறு ரூபாய் அளிப்பது போன்ற எல்லாமே பட்ஜெட்டில் சொல்லப்பட்டவைதான். அப்படிப் பார்த்தால், அந்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடியில் 60 ஆயிரம் கோடிதான் கூடுதலாகச் சொல்லப்பட்டது. ஒரு லட்சத்துப் பத்தாயிரம் கோடி ஏற்கனவே பட்ஜெட்டில் சொல்லப்பட்டதுதான்.
இதற்கு அடுத்து, ரிசர்வ் வங்கி பணக் கொள்கையை அறிவித்தது. அது எந்தப் பலனையும் தரவில்லை. வட்டியைக் குறைத்து அறிவிக்கும் இந்தப் பணக் கொள்கை என்பது இந்தியாவில் மிகவும் தோல்வியடைந்த ஒரு முறை. இந்த ஆளுநர் பதவியேற்றதிலிருந்து வட்டி விகிதங்களைத் தொடர்ந்து குறைத்துவருகிறார். கிட்டத்தட்ட 300 புள்ளிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. ரிசர்வ் வங்கி குறைந்த வட்டியில் அதாவது 3.5 சதவீத வட்டியில் கடன் தருவதாகச் சொல்கிறது. வங்கிகள் அந்தப் பணத்தை வாங்கி நிறுவனங்களுக்கும் மற்றவர்களுக்கும் கடன் கொடுங்கள் என்கிறது.
ஆனால், வங்கிகள் தங்கள் பணத்தை ரிசர்வ் வங்கியில் போட்டுவைத்தால் கிடைக்கும் 2.5 சதவீத வட்டியே தங்களுக்குப் போதும் என்கின்றன. யாருக்கும் கடன் கொடுக்கத் தயங்குகின்றன. சக்தி காந்ததாஸ் ஆளுநராக வந்த பிறகு 'ரிவர்ஸ் ரெபோ ரேட்' (வங்கிகள் ரிசர்வ் வங்கியில் பணத்தைப் போட்டுவைத்தால் கிடைக்கும் வட்டி) 90 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது. இப்படி 90 சதவீதம் குறைக்கப்படுவதற்கு முன்பாக, வங்கிகள் 3 லட்சம் கோடி ரூபாயைத்தான் டெபாசிட் செய்திருந்தன. வட்டி விகிதம் குறைக்கப்பட்ட பிறகு மேலும் 8 லட்சம் கோடி ரூபாயை வங்கிகள் டெபாசிட் செய்திருக்கின்றன.
இதற்கு என்ன காரணம் என்றால், வங்கிகள் தங்கள் முதலைப் பாதுகாக்க நினைக்கின்றன. யாருக்கும் கடன் கொடுக்க முடியாத சூழல் நிலவுகிறது. வராக் கடன் பிரச்சனை இருக்கிறது. வங்கிகளை நடத்தும் அரசு, அவற்றில் மேலும் முதலீடுகளைச் (recapitalization) செய்ய வேண்டும். அது நடக்கவில்லை.
ரிசர்வ் வங்கி ஆளுநர் பேசும்போது, தான் வட்டியைக் குறைத்திருப்பதால் ஐந்தேகால் லட்சம் கோடி புழக்கத்திற்கு வரும் என்கிறார். அப்படி ஏதும் வரவில்லை. இருந்தபோதும், நிதியமைச்சர் பேசும்போது, 8.1 லட்சம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி கொடுத்து பணப் புழக்கத்தை ஏற்படுத்தியதாகச் சொல்கிறார்.
முதலாவதாக, ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை தோல்வியடைந்துவிட்டது. அப்படியே இருந்தாலும் அது பணம் தொடர்பான கொள்கை. இன்று உள்ள பிரச்சனைக்கு அது தீர்வு இல்லை. இன்று உள்ள பிரச்சனை, தேவை குறைந்துபோனது தொடர்பானது. பெரிய அளவில் வேலை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. வருமானம் போய்விட்டது. ஆகவே சுத்தமாக தேவை என்பதே இல்லாமல் போய்விட்டது. சாதாரண மக்களிடம் வேலையும் இல்லை பணமும் இல்லையெனும்போது, அரசுதான் செலவுசெய்ய வேண்டும். அரசு பொதுச் செலவை அதிகப்படுத்தி, பொருளாதாரத்திற்கு புத்துயிர் கொடுக்க வேண்டும்.
வெளிமாநிலத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு இன்றைக்குப் பணம் தேவை. அவர்களுக்குக் கடன் கொடுக்கிறேன், தொழில்செய் என்று சொன்னால் எப்படி? சாலையோரம் வசிப்பவர்களுக்குக் கடன் கொடுக்கப்போவதாகச் சொல்கிறார்கள். யாராவது ஒருவர் அப்படி கடன் வாங்கிவிட முடியுமா? இன்றைக்கு உணவு தேவை. இன்றைக்கு பணம் தேவை.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடனேயே, வெளிமாநிலத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் ஒன்றுமே இல்லாமல் ஆகிவிட்டது. அடுத்த வேளை உணவுக்கே வழியில்லாமல் போய்விட்டது. எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்கவில்லை. ஆகவே, அவர்கள் சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
தற்போது நிதியமைச்சர் அறிவித்த திட்டங்களில், மார்ச் 26ஆம் தேதி வெளியிட்ட ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடியையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார். அப்படிச் சேர்க்கும்போது ஒரு லட்சத்து 70ஆயிரம் கோடிக்குப் பதிலாக, ஒரு லட்சத்து 92 ஆயிரம் கோடியைச் சேர்த்துச் சொல்கிறார். 22 ஆயிரம் கோடி கூடுதலாக வந்தது எப்படி எனப் புரியவில்லை.
இப்போது புதிதாக வெளியிட்ட அறிவிப்பில், முதல் பகுதியில் ஐந்து லட்சத்து 94 ஆயிரம் கோடி, இரண்டாவது பகுதியில் 3 லட்சத்து பத்தாயிரம் கோடி, மூன்றாவது பகுதியில், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி என மொத்தமாக 11 லட்சம் கோடி ரூபாய் சொல்லியிருக்கிறார்கள். தவிர, ரிசர்வ் வங்கி அறிவித்த ஒரு எட்டு லட்சம் கோடி ரூபாய் என மொத்தமாக 20.97 கோடி ரூபாய் stimulus என்கிறார்கள்.
ஆனால், இது மொத்தமுமே கடன் உருவாக்கம் அல்லது கடன் வழங்குவதற்கான திட்டம், அவ்வளவுதான். அதாவது அரசு கடன் வாங்க உதவிசெய்யும். உதாரணமாக, 45 லட்சம் சிறு தொழில் நிறுவனங்கள் 3 லட்ச ரூபாய் கடன் வாங்கிக் கொள்ளலாம்; அதற்கு அரசு உத்தரவாதம் அளிக்கும் என்கிறார்கள்.
6.3 கோடி சிறு தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. அதில் 12 கோடிப் பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள். ஆனால் இவர்கள் 45 லட்சம் நிறுவனங்களுக்கு மட்டும் மூன்று லட்ச ரூபாய் கடன் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். இந்தக் கடனை வாங்குவதற்கும் பல நடைமுறைகள் உண்டு. இதெல்லாம் ஒரே நாளில் நடக்கக்கூடிய காரியமில்லை.

சிறுதொழில் நிறுவனங்களால் இப்போது சம்பளம் கொடுக்க முடியவில்லை. அமெரிக்காவில் இதுபோல ஊரடங்கு அறிவித்தவுடன், யாரையும் வேலையைவிட்டு எடுக்கக்கூடாது என அந்நாட்டு அரசு அறிவித்தது. நிறுவனங்கள் சம்பளம் அளித்தால், அதில் 80 சதவீதத்தை தாங்கள் அளிப்பதாக அமெரிக்க அரசு கூறியது. ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் அதைச் சொன்னார்கள். ஆனால், அதுபோல இந்தியாவில் ஏதும் இல்லை என்பதால்தான் வெளிமாநில தொழிலாளர்கள் வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
மற்ற திட்டங்களிலும் சிக்கல் உண்டு. உதாரணமாக, மத்திய அரசு வருமான வரி பிடித்தம் செய்ததை மக்களுக்குத் தர வேண்டும். அதைத் திருப்பித் தருவதையே ஒரு சலுகை போலச் சொல்கிறார்கள். நிதிக் குழு வரியை பிரித்து அளிப்பதுபோக, பல நல்கைகளை வழங்குகிறது. வருவாய்ப் பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய நல்கையும் அதில் ஒன்று. அந்த நல்கைகளை மத்திய அரசு இப்போது நிதிச் சலுகையைப் போல அறிவிக்கிறது.
பேரிடர் நிதியை இதில் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய பணத்தை இதில் சேர்த்துச் சொல்கிறார்கள். அரசுக்குப் பணி செய்வர்களுக்கு பணம் கொடுக்க வேண்டியிருந்தால், அதை 45 நாட்களில் கொடுத்துவிடுவதாகச் சொல்கிறார்கள். அதாவது அரசு தர வேண்டிய பணத்தை, சலுகையாகக் காட்டுகிறார்கள்.
கே. பல சீர்திருத்தங்களை கடந்த ஐந்து நாட்களில் அறிவித்திருக்கிறார். இவற்றில் எவையெல்லாம் செயல்படுத்தக்கூடியவை?
ப. செயல்படுத்த முடியுமா என்பது அடுத்த கேள்வி. இவற்றில் பல பட்ஜெட்டிலேயே அறிவிக்கப்பட்டவை. தேனி வளர்ப்பது, கால்நடைகள் குறித்த அறிவிப்பெல்லாம் பட்ஜெட்டில் அறிவித்ததுதான். கங்கை ஓரத்தில் மூலிகைச் செடி வளர்ப்பதாகச் சொல்கிறார்கள். இதெல்லாம் என்றைக்கு வளர்ந்து, என்றைக்கு பலன் தரும்?
இந்த சீர்திருத்தங்கள் எல்லாமே, தொடர்ந்து நடந்துகொண்டிருப்பவை. பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தமெல்லாம் ஏற்கனவே நடந்துகொண்டிருப்பதுதான். 49 சதவீதம் இருப்பதை 74 சதவீதமாக்கியிருக்கிறார்கள். விண்வெளித் துறை, அணுசக்தித் துறையிலெல்லாம் சீர்திருத்தங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவை. நிலக்கரி துறையில் சீர்திருத்தம் செய்வதாகச் சொல்கிறார்கள். நிலக்கரிக்கு இப்போது பெரிய தேவையே கிடையாது.

பட மூலாதாரம், ROSLAN RAHMAN
இதையெல்லாம் எப்போது செய்வீர்கள் என்றுகேட்டால், சீர்திருத்தம் செய்வதற்கான எங்களது நோக்கத்தைச் சொல்லியிருக்கிறோம் என்கிறார்கள்.
தற்போது நிலவும் வெளிமாநிலத் தொழிலாளர் பிரச்சனைக்கும் இந்த சீர்திருத்தங்கள் எப்படிப் பலனளிக்கும்? இதில் எந்த செலவும் அரசுக்கு இல்லை. வெறும் கொள்கை அறிவிப்புதான்.
'சுயசார்பு இந்தியா' என்கிறார்கள். கொரோனா வந்த பிறகு, உலகமெங்கும் இந்தப் போக்கு வந்துவிட்டது. எல்லா நாடுகளுமே தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்ததிலிருந்தே இந்தப் போக்கு துவங்கிவிட்டது. அரசு தற்போது சொல்லியிருப்பதெல்லாம் அமைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள். அவை செய்யப்பட வேண்டியவைதான். ஆனால், இன்றைய தேவை என்பது இது அல்ல.
தற்போது மக்களிடம் பணம் இல்லாத நிலையில் அரசுதான் செலவை அதிகரிக்க வேண்டும். இருபது லட்சம் கோடி ரூபாய் நிதி சலுகையாக அறிவித்திருப்பதாக பிரதமர் சொன்னார். பட்ஜெட்டிற்கு வெளியில் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்று கேட்டால் அதைச் சொல்ல மறுக்கிறார்கள். 20.97 லட்சம் கோடி ரூபாய் நிதிச் சலுகை என்று மட்டும் சொல்கிறார்கள்.
(தொடரும்)
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












