கோழிக்கோடு விமான விபத்து: மீட்பு அதிகாரிகள் பலருக்கு கொரோனா - கேரள முதல்வரின் பரிசோதனை முடிவு என்ன?

கோழிக்கோடு

பட மூலாதாரம், Getty Images

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட மத்திய துணை ராணுவப்படையினர் மற்றும் களப்பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

துபையில் இருந்து கோழிக்கோடு காரிப்பூர் விமான நிலையத்துக்கு 190 பேருடன் வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளான சம்பவத்தில், இரு விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையம் அமைந்துள்ள மலப்புரம் மாவட்ட ஆட்சியர், உதவி ஆட்சியர் மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோருக்கும் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோழிக்கோடு

பட மூலாதாரம், Getty Images

விமானம் விபத்துக்குள்ளான போது, விமான நிலையத்தின் அருகே உள்ள கொண்டட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கொரோனா பரவல் கரணமாக அப்பகுதியினர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். மேலும், விமானத்தில் பயணம் செய்து உயிரிழந்த ஒருவருக்கும், உயிர்தப்பிய இருவருக்கும் கொரோனா நோய்த்தொற்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மீட்புப்பணியில் ஈடுபட்ட மாவட்ட அதிகாரிகள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மீட்புப் பணியில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

விமான விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்படுத்திக் கொண்டார். மீட்புப் பணியில் இருந்த ஒரு அதிகாரியுடன் தொடர்பு பட்டியலில் முதல்வரும் இருந்ததால் அவர் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், முதல்வர் பினராயி விஜயனுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு வைரஸ் இல்லை என தெரிய வந்துள்ளது. இந்த தகவலை கேரள முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், நாளை சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சியை 10 நிமிடங்களுக்கு நடத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. நாளை காலை திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் அரங்குக்கு வரும் அவர் கொடியேற்றிய பிறகு 3 நிமிடங்களுக்குள் உரையை நிறைவு செய்யவிருக்கிறார். வழக்கமாக நடைபெறும் சுதந்திர தின அணிவகுப்பு இந்த ஆண்டு நடக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, டெல்லியில் இந்திய சுகாதாரத்துறை அமைச்சக செயலாளர் லவ் அகர்வாலுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்திய அளவில் கோவிட்-19 வைரஸ் தொடர்புடைய நடவடிக்கைகளை அவரே மேற்பார்வையிட்டு வந்தார்.

இந்திய அளவில் கோவிட்-19 வைரஸ் தொடர்புடைய நடவடிக்கைகளை அவரே மேற்பார்வையிட்டு வந்தார்.

பட மூலாதாரம், TWITTER

இந்த நிலையில், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: