இஸ்லாம் மதத்தை `பாதுகாப்பதற்கான' மசோதா: பாகிஸ்தானில் தொடரும் சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானின் கடுமையான மத துவேஷ சட்டங்களை மத அடிப்படைவாத கட்சிகள் தீவிரமாக ஆதரவு அளிக்கின்றன
பாகிஸ்தானில் மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம், பாகிஸ்தானில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மத சகிப்புத்தன்மை மற்றும் பேச்சு சுதந்திரத்துக்கான வாய்ப்பு நாட்டில் குறைந்து கொண்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இஸ்லாத்தின் அடிப்படையை பாதுகாத்தல் மசோதா 2020-வை ஜூலை 22 ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநில சட்டமன்றம் நிறைவேற்றியது.

பட மூலாதாரம், Getty Images
இந்த மசோதா இன்னும் முழுமையாக சட்டமாக்கப்படவில்லை. சர்ச்சைக்குரிய இந்த மசோதாவை அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று அப்போதிருந்தே பாகிஸ்தானில் உள்ள மதவாதக் குழுக்கள் திட்டங்களைத் தீட்டி வருகின்றன.
சுன்னி பிரிவினர் பெரும்பான்மையாக இருக்கும் பாகிஸ்தானில் ஷியா சமுதாயத்தவர்களும், அஹ்மதி பிரிவினரும் குறிவைக்கப்படுவார்கள் என்று விமர்சகர்கள் கூறுவதால், இந்த மசோதா சர்ச்சைக்குரியதாக இருக்கிறது.
மசோதா என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images
இறைதூதர் முகமது நபி குறித்த ``புனித'' நூல்களை, அவருடைய குடும்பத்தை மற்றும் அவருடன் இருந்தவர்களை அவமதிப்பு செய்தல் மற்றும் தீவிரவாதிகளைப் பற்றி பெருமையாகப் பேசுதல், பிரிவினைவாதம் மற்றும் மத வெறுப்பை ஊக்குவித்தால் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் சுமார் 3,000 அமெரிக்க டாலர்கள் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
``தேசத்தின் நலனுக்கு, கலாச்சாரம், மதத்துக்கு, மதப் பிரிவுகளின் நல்லிணக்கத்துக்கு எதிரான'' புத்தகங்களை வெளியிடுதல் அல்லது இறக்குமதி செய்வதை, பஞ்சாப் அரசின் பொது மக்கள் தொடர்பு தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.ஆர்.) அலுவலகம் தடை செய்வதற்கு இந்தச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது.
பல்வேறு வெளியீடுகளின் நகல்களை டி.ஜி.பி.ஆர். துறைக்கு அனைத்து வெளியீட்டாளர்களும் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் தண்டனை உண்டு என்றும் அந்தச் சட்டம் கூறுகிறது.
இறைதூதர் முகமதுவின் பெயருக்கு முன்னால் ``கத்தம்-அன்-நபியின்'' [``இறைதூதர்களில் கடைசியாக வந்தவர்''] என கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும் என்றும் இந்தச் சட்டம் கூறுகிறது. அஹ்மதிய பிரிவின் துறவிகள் பெரும்பாலும் இவ்வாறு குறிப்பிடப்படுவது வழக்கத்தில் உள்ளது.
அது ஏன் முக்கியமானதாக உள்ளது?
அரசின் அரசியல் மற்றும் மதம் பற்றிய விவரிப்புகளுக்கு எதிராக இருப்பவையாகக் கருதப்படும் புத்தகங்களை, அலுவல்பூர்வமாக தடை செய்வதற்கான வசதிகளை இந்தச் சட்டம் அளிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
அரசியல் மற்றும் மதம் குறித்த விஷயங்களில் எவை ஏற்புடையவை என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் பஞ்சாப் அரசுக்கு இதன் மூலம் கிடைக்கும்.
பிரிவுகள் குறித்த விஷயங்களை விவரித்தல் மற்றும் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டிய வார்த்தைகள் ஆகியவை, பாகிஸ்தான் அரசியல் மற்றும் சமூகத்தில் மத ரீதியில் உள்ள பிளவுகளை தீவிரப்படுத்துவதாக உள்ளது.
சிறுபான்மை சமுதாயத்தினரின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தீவிர சன்னி குழுவினர் நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் நிலையில், அவர்களுடைய செயல் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசு தயாராக உள்ளது என்பதைக் காட்டுவதாக இது உள்ளது.
முன்னதாக, பல்கலைக்கழகங்களில் மொழிபெயர்ப்பு வசதியுடன் குர்ஆன் கற்பிக்க வேண்டும் என்று தேசிய நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. தீவிர மதவாதிகளின் கொள்கைகளை அமல் செய்வதில் அரசு முனைப்பு காட்டுவதன் அடையாளமாக அதுவும் பார்க்கப் படுகிறது.
பஞ்சாப் பாடத் திட்டம் மற்றும் பாடநூல் வாரியம் சமீபத்தில் 100 பாட நூல்களுக்கு தடை விதித்தது. ``தேசவிரோதம்'' மற்றும் ``மத துவேஷமாக'' இருப்பதாகக் கூறி அவை தடை செய்யப்பட்டன.
பன்றியின் படம் இருந்ததால் ஒரு கணித பாடப் புத்தகத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.
இஸ்லாத்துக்கு எதிராக பேச்சுகள், பிரிவினைவாத பேச்சுகள், அரசுக்கு எதிராக மற்றும் ராணுவத்துக்கு எதிரான பேச்சுகளை கிரிமினல் குற்றமாகக் கருதும் சட்ட விதிகள் மற்றும் மத துவேஷ எதிர்ப்புச் சட்டங்கள் ஏற்கெனவே அமலில் உள்ளன. இப்போதைய மசோதாவில் பல அம்சங்கள் அந்தச் சட்டங்களிலேயே இருக்கின்றன.
ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் இருப்பவர் யார்?
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு, பஞ்சாபில் சில பிரபல அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து கொண்டாடினர்.

பட மூலாதாரம், Getty Images
சட்டமன்ற சபாநாயகராக இருக்கும் சௌத்ரி பர்வேஸ் இலாஹியின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-க்யூ கட்சி இந்த மசோதாவை முன்மொழிந்தது. இதை நிறைவேற்றிக் கொடுத்தமைக்காக அரசுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் சட்ட அமைச்சர் ராஜா பஷரத், பிரதமர் இம்ரான் கானின் முயற்சி, வரலாற்று முக்கியத்துவமானது என்று கூறியுள்ளார்.
தீவிர வலதுசாரி சட்டமன்ற உறுப்பினர் முவாவியா ஆசாம் மேற்கொண்ட தீவிர முயற்சியால் இந்த மசோதா நிறைவேற்றப் பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதும், அதன் நகல் ஒன்றை சிபாஹ்-இ-சஹாபா என்ற ஷியா பிரிவினருக்கு எதிரான தீவிரவாதக் குழுவை உருவாக்கிய தனது தந்தை மௌலானா ஆசாம் தாரிக் நினைவிடத்துக்கு அவர் எடுத்துச் சென்றார்.
மத துவேஷ சட்டம் குறித்து பஞ்சாப் எடுத்த முடிவுக்கு தீவிரவாத குழுக்கள் பாராட்டு தெரிவித்துள்ளன. மறுபுறம், அரசு அதிகாரிகள் பாட நூல்களைத் தடை செய்வதற்கு அதிகாரம் அளிப்பதால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து சட்ட நிபுணர்களும், இயக்கவாதிகளும் கவலை தெரிவிக்கின்றனர். மதப் பிரிவினை செயல்திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள இதைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
பேச்சு சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் அரசியல்சாசன அம்சங்களுக்கு எதிரானதாக இந்த மசோதா உள்ளது என்று, பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் மறறும் மகளிர் ஜனநாயக முன்னணி போன்ற குழுக்கள் கூறியுள்ளன.
ஆச்சர்யமற்ற வகையில், இந்த மசோதாவை கடுமையாக எதிர்ப்பவர்களில் ஷியா பிரிவினரும் உள்ளனர். மத சுதந்திரத்துக்கு எதிரானதாக இது இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
பல உறுப்பினர்கள் சபையில் இல்லாத நேரத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக ஷியா அரசியல் கட்சியான மஜ்லிஸ்-இ-வாஹ்டட் முஸ்லிமீன் கட்சி கூறியுள்ளது.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, புதிய இஸ்லாமிய மசோதாவுக்கு ஷியா மத குழு ஆட்சேபம் தெரிவித்ததால், ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகு இந்த மசோதாவில் தாம் கையெழுத்திடப் போவதாக, மதவாதக் குழுக்களுடன் கூட்டங்கள் நடத்திய பிறகு பஞ்சாப் ஆளுநர் சௌத்ரி முகமது சர்வார் கூறியுள்ளார்.
ஊடகங்கள் செயல்பாடு
பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகும் கருத்துகள் சித்தாந்த அடிப்படையில் இருந்து மாறுபட்டவையாக உள்ளன.
``இந்த மசோதா அளவுக்கு மீறிய அதிகாரங்களைத் தருவதாகவும், மத சகிப்பின்மையை மேலும் தீவிரப்படுத்தக் கூடியதாகவும் இருப்பதால் இதற்கு நியாயமான எதிர்ப்புகள் இருக்கும்'' என்று Dawn என்ற ஆங்கில பத்திரிகை தலையங்கம் தீட்டியுள்ளது.
இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு விரைவாக நிறைவேற்றப்பட்டது, ``பெரும்பாலும் மதம் தொடர்பான விஷயங்களில்'' நடப்பதைப் போல, ``இந்த ஆவணத்தைப் படித்துப் பார்க்கக் கூட அவகாசம் கிடைக்கவில்லை'' என்று அரசியல் பார்வையாளர் நஜம் சேத்தி கூறியுள்ளார்.
சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றும், காலவரையின்றி இது கிடப்பில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
அதேசமயத்தில், ராணுவத்துக்கு ஆதரவான நியோ டி.வி.யில் ``ரகசிய வார்த்தை'' என்ற தன்னுடைய நிகழ்ச்சியில், இது இனவாத அடிப்படையிலானது அல்ல என்று வலதுசாரி தொலைக்காட்சி கருத்தாளர் ஓர்யா மக்பூல் ஜன் கூறியுள்ளார்.
இஸ்லாமிய கல்வியைக் குறைத்து மதிப்பிட்டு, பாகிஸ்தானில் நாத்திகவாதத்தை ஊக்குவிக்கும் ``மதச்சார்பின்மை மற்றும் தாராளமயம் என்ற கெடுதல்களுக்கு'' எதிரானதாக இந்த மசோதா அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












