நரேந்திர மோதி: நீண்ட காலம் பதவி வகித்த நான்காவது இந்தியப் பிரதமரானார்

பட மூலாதாரம், DD
இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி: நீண்ட காலம் பதவி வகித்த நான்காவது இந்தியப் பிரதமரானார் மோதி
இந்தியாவில் நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர்களின் பட்டியலில் தற்போதைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாகத் தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக பணியாற்றியவர்கள் பட்டியலில் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோருக்கு அடுத்த நிலையை நரேந்திர மோதி அடைந்துள்ளார்.
அதே சமயத்தில், இதற்கு முன்னர் நான்காவது இடத்திலிருந்த அடல் பிகாரி வாஜ்பேயியை விஞ்சியதன் மூலம், நீண்ட காலம் பதவி வகித்த காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் என்ற நிலையையும் பெறுகிறார் மோதி.
2014ஆம் ஆண்டு மே 26ஆம் நாள் நாட்டின் 14-வது பிரதமராகப் பதவியேற்றார் நரேந்திர மோதி. தொடர்ந்து இரண்டாவது முறையாக 2019ஆம் ஆண்டு மே 30ஆம் மீண்டும் பிரதமர் பொறுப்பேற்றார்.
நாட்டில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்தவர் ஜவஹர்லால் நேரு. ஏறத்தாழ 17 ஆண்டுகள். அவருக்கு அடுத்தபடியாக அவருடைய மகள் இந்திரா காந்தி, 11 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். மன்மோகன் சிங் தொடர்ந்தாற்போல 10 ஆண்டுகள்.
நாளை நாட்டின் 74-வது சுதந்திர நாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் நீண்ட காலம் பதவியிலிருந்த நான்காவது பிரதமர் என்ற தகுதியைப் பெறுகிறார் மோதி" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து தமிழ் திசை: "சித்தா, யுனானி, ஆயுர்வேதா மருத்துவ ஆராய்ச்சிக்காக எவ்வளவு நிதி செலவிடப்பட்டது?"

பட மூலாதாரம், Getty Images
சித்தா, யுனானி, ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றை தடுக்க மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அவை தமிழக அரசால் புறக்கணிக்கப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் முதல்வருக்கு எதிராக திருத்தணிகாச்சலம் காணொளி பதிவு வெளியிட்டிருந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். அதுதொடர்பான வழக்கு நேற்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது "கடந்த 10 ஆண்டுகளில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட துறைகளுக்கு 239 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது" என மத்திய அரசும், "இந்திய மருத்துவ முறை சார்ந்த மருந்துகளை கொள்முதல் செய்ய ஆண்டு தோறும் 23 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது, தமிழக பட்ஜெட்டில் ஆண்டுதோறும் இந்திய மருத்துவ முறைகளுக்காக 184 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது" என தமிழக அரசும் தெரிவித்திருந்தன.
அப்போது மனுதாரர் தரப்பில், "சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கான போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை" எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சித்த, யுனானி ஆயுர்வேத உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறித்து மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20-க்கு ஒத்தி வைத்தனர்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி: "தமிழகத்தில் நடைமுறைக்கு வருகிறது நடமாடும் ரேசன் கடைகள்"

பட மூலாதாரம், Getty Images
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, தமிழகத்தில் ரூ.9.66 கோடியில் நடமாடும் ரேசன் கடைகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுளள்து.
இதுதொடர்பாக பேசிய அவர், "தமிழகத்தில் ரூ.9.66 கோடியில் 3,501 நடமாடும் ரேசன் கடைகளை திறக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு கட்டடம், உள்ளாட்சி நிறுவன கட்டடம், மக்கள் கூடும் இடங்களில் நடமாடும் ரேஷன் கடையை திறக்கலாம் என்று கூறியுள்ளது. நடமாடும் ரேஷன் கடைகள் திறக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் அறிக்கை தர வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 3,501 நடமாடும் ரேஷன் கடைகள் சுமார் 5.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்" என்று தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












