கு.க. செல்வம்: ”தி.மு.கவிலிருந்து என்னை நீக்கியது சந்தோஷமே”

"தி.மு.கவிலிருந்து என்னை நீக்கியது சந்தோஷமே": கு.க. செல்வம்

பட மூலாதாரம், FACEBOOK

தி.மு.கவிலிருந்து தன்னை நீக்கியிருப்பது ஜனநாயகப் படுகொலை என்றும் தன்னைக் கட்சியிலிருந்து நீக்கியது தனக்கு சந்தோஷத்தைத் தருவதாகவும் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் தெரிவித்திருக்கிறார்.

தி.மு.கவின் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரான கு.க. செல்வம் கடந்த வாரம் பா.ஜ.கவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை தில்லியில் நேரில் சந்தித்து பேசினார். இதற்குப் பிறகு பா.ஜகவின் மாநிலத் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்றார்.

மேலும், தி.மு.கவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காதது குறித்தும் ஊடகங்களிடம் அதிருப்தி தெரிவித்தார். இதையடுத்து அவரது கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இது தொடர்பாக அவர் அளித்த விளக்கம் ஏற்கப்படாத நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக தி.மு.க. தலைமை வியாழக்கிழமையன்று அறிவித்தது.

இந்நிலையில் இன்று காலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கு.க. செல்வம், "என்னை நேரில் சந்திக்கத் துணிவின்றி, என்னைத் தி.மு.கவிலிருந்தும் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கியது ஜனநாயகப் படுகொலை என குற்றம்சாட்டுகிறேன். நான் தற்போது எந்தக் கட்சியிலும் சேரவில்லை. கட்சியிலிருந்து என்னை நீக்கியது எனக்கு சந்தோஷத்தைத் தருகிறது" என்று தெரிவித்தார்.

தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் நிலையில், சட்டமன்றத்தில் பா.ஜ.கவின் உறுப்பினராக கு.க. செல்வம் செயல்படுவார் என சமீபத்தில் பா.ஜ.கவில் இணைந்த வி.பி. துரைசாமி கூறியிருப்பது குறித்து செய்தியாளர் கேட்டபோது, தான் அம்மாதிரி முயற்சிகளைச் செய்யப்போவதில்லையென அவர் தெரிவித்தார். சட்டப்பேரவையில் யாருடைய ஆதரவாளராக செயல்படுவீர்கள் எனக் கேட்டபோது அது குறித்து தான் முடிவெடுக்கவில்லை என்றும் கூறினார்.

வரும் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுவீர்களா எனக் கேட்டபோது, இப்போதே அதைப் பற்றி எப்படிச் சொல்ல முடியும். யாராவது வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன் என்று பதிலளித்தார்.

"ஆயிரம் விளக்கு தொகுதியில் இரண்டு முறை தி.மு.க. தோற்றிருக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், ஜின்னா ஆகியோர் தோற்றிருக்கிறார்கள். நான் வெற்றிபெற்றிருக்கிறேன். எனக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. திரும்பவும் போட்டியிட்டால் வெற்றிபெறுவேன்," என்றார் கு.க. செல்வம்.

தன்னோடு தி.மு.கவின் மூத்த தலைவர்கள் பலர் தொடர்பில் இருப்பதாகவும் அவர்களும் விரைவில் வெளியில் வருவார்கள் என்றும் தெரிவித்தார். தி.மு.க. உதயநிதி கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தன்னுடைய பிரச்சனைக்கு அவருடைய தலையீடுதான் முக்கியக் காரணம் என்றும் கு.க. செல்வம் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: