கொரோனா ஊரடங்கு: “ஆபாச படம் பார்ப்பவர்கள் பட்டியல் தயார், விரைவில் நடவடிக்கை” -கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ரவி

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: "ஆபாச படம் பார்ப்பது அதிகரிப்பு"
ஆபாச படம் பார்ப்பது அதிகரித்துள்ளதாகவும் அவ்வாறான படங்கள் பார்ப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள தினத்தந்தி நாளிதழ் பின்வருமாறு விவரிக்கிறது:
ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இந்த காலகட்டத்தில் வீட்டில் அடைபட்டு கிடப்பவர்கள் தங்களது செல்போனில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது நூறு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது
குறிப்பாக சென்னை நகரில் இது அதிகமாக உள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் கண்காணிக்கப்படுவதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி: "ரயில், விமானம் சேவை மீண்டும் எப்போது?"

பட மூலாதாரம், Getty Images
ரயில், விமான சேவையை மீண்டும் தொடங்குவது தொடா்பாக மத்திய அரசு இதுவரை இறுதி முடிவெடுக்கவில்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்தார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
உள்நாட்டில் மே 4-ஆம் தேதி முதலும், வெளிநாடுகளுக்கு ஜூன் 1-ஆம் தேதி முதலும் குறிப்பிட்ட வழித்தடங்களில் பயணம் மேற்கொள்வதற்கான பயணச்சீட்டு முன்பதிவுகளை தொடங்கிவிட்டதாக ஏா் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் அமைச்சா் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாா்ச் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட தேசிய ஊரடங்கு, மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் விமான, ரயில் போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அமைச்சா் ஜாவடேகா் இது தொடா்பாக கூறியதாவது:
ரயில், விமான சேவை மீண்டும் ஒருநாள் தொடங்கப்படும். ஆனால், இப்போதைய சூழ்நிலையில், இது தொடா்பாக மத்திய அரசு முடிவெடுக்கவில்லை. ஏனெனில், இப்போது ஒவ்வொரு நாளும் புதுப்புது பாடங்களைக் கற்று வருகிறோம். அதன் அடிப்படையில்தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
விமான சேவை தொடா்பாக மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரியும் விளக்கமளித்துள்ளாா். இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றுதான் அவரும் கூறியுள்ளாா். அரசு முடிவெடுத்த பிறகுதான் விமான நிறுவனங்கள் டிக்கெட் முன்பதிவைத் தொடங்க வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தியுள்ளாா் என்றாா் ஜாவடேகா்.
- இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது.


- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

இந்து தமிழ் திசை: "நள்ளிரவு முதல் புதிய கட்டணம் அமல்"

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் புதிய கட்டண உயர்வு அமலானது. சுங்கச்சாவடிகளுக்கு ஏற்றவாறு 5 முதல் 12 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 48-க்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன. இதில் ஆண்டுதோறும் சுழற்சி முறையில் செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தனித்தனியாகக் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில் தொழில்கள் முடங்கியுள்ளன. இதனால், சுங்கச்சாவடி கட்டணத்துக்கு விலக்கு அளிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் சேலம் - உளுந்தூர்பேட்டை- மேட்டுப்பட்டி, திண்டிவனம் - உளுந்தூர்பேட்டை, நல்லூர் - சென்னை, திருச்சி - திண்டுக்கல் உட்பட 26 இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலானது. இது பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ''ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதிகளில் தமிழகத்தில் சுழற்சி அடிப்படையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்படும். ஊரடங்கு உத்தரவால் ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய கட்டண உயர்வை அமல்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் நாடுமுழுவதும் ஏப்ரல் 20-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகள் மீண்டும் இயங்குகின்றன. அந்த வகையில், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகத்தில் புதிய கட்டண உயர்வை 19-ம் தேதி (நேற்று) நள்ளிரவு முதல் அமல்படுத்தியுள்ளோம். இந்த கட்டண உயர்வு, சுங்கச்சாவடிகள் மற்றும் வாகனங்களுக்கு ஏற்றவாறு 5 முதல் 12 சதவீதம் வரையில் இருக்கும். ஊரடங்கு நீடிப்பதால், சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலும் குறைவாக இருக்கும். எனவே ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் குறைந்த பாதைகளே செயல்படும்'' என்றனர்.
பிற செய்திகள்:
- “அடிமைகளாக இருங்கள் அல்லது வெளியே செல்லுங்கள்” - கொரோனாவுக்கு மத்தியில் மற்றொரு சோகம்
- "ஏற்கனவே எட்டு... இப்போது மேலும் நான்கு மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ்"
- "இலங்கையில் இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் திட்டம்” - போலீஸ் அதிர்ச்சித் தகவல்
- இந்தியாவில் நாளை முதல் ஓரளவு தளர்த்தப்படும் ஊரடங்கு - எங்கு, எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












