கொரோனா வைரஸ்: ”தமிழகத்தில் புதிதாக 105 பேருக்கு கொரோனா வைரஸ்” - தமிழக நிலவரம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் புதிதாக 105 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477ஆக உயர்ந்துள்ளது.
தமிழக சுகாதரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, அதிகபட்சமாக சென்னையில் இன்று(ஏப்ரல் 19) 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், தமிழகம் முழுவதும் 46 நபர்கள் குணமடைந்துள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் எட்டு மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், சென்னையில் மேலும் நான்கு மருத்துவர்களுக்கு நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னையில் பத்திரிகையாளர் ஒருவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதால் சுமார் 100 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தினமும் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெறவில்லை.

யார் யாரெல்லாம் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கலாம்?
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு சமைத்த உணவு, மளிகை மற்றும் மருந்துப் பொருட்களை வழங்கும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் 48 மணி நேரத்திற்கு முன்னதாக மாநகராட்சி அலுவலர்களிடம் தகவல் தெரிவித்த பின் வழங்க வேண்டும் என ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஊரடங்கால் வேலை வாய்ப்பின்றி உள்ள தொழிலார்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றன. அவ்வாறு உதவிகள் வழங்கும் போது, 48 மணிநேரத்திற்கு முன்னதாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தகவல் கொடுக்கவேண்டும். கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் முகமூடி, கையுறை மற்றும் சமூக இடைவெளியுடன் வழங்குவது அவசியமாகிறது. எனவே உணவுப் பொருட்களை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றவேண்டும்,'' என தெரிவித்துள்ளார்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

''கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அத்தியாவசிய தேவைகளுக்கான நிறுவனங்கள் மற்றும் கடைகள் தவிர்த்து பிற நிறுவனங்கள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வெளிமாநிலம் மற்றும் வெளியூரை சேர்ந்த சுமார் 6000 நபர்கள் மாநகராட்சியின் காப்பகங்கள், சமுதாயக் கூடங்கள், பள்ளிகள்,கல்லூரி மற்றும் தனியார் திருமண மண்டபங்கள் என 96 மையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தனியார் அமைப்பு, அரசு சாரா அமைப்புகள் அல்லது குழுவினர் ஏழை எளியவர்களுக்கு உணவு மற்றும் பொருட்கள் வினியோகம் செய்ய உயர்நீதிமன்ற நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்,'' என தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
''உணவு வழங்கும் இடம் மற்றும் இதர விவரங்களை மண்டல அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். உணவு வழங்கும் இடத்தினை ஆய்வு செய்து அவ்விடம் உணவு வழங்க உகந்த இடம் என கண்டறியப்பட்ட பின் உணவு வழங்க வேண்டும். எந்த மண்டலத்திற்குட்பட்ட இடத்தில் உணவு வழங்க இருக்கிறார்களோ அந்த மண்டல எல்லைக்குட்பட்ட இடத்திலேயே உணவு தயாரிக்கப்பட வேண்டும்.அரசால் தடை செய்யப்பட்ட பகுதி (Containment Zone) என அறிவிக்கப்பட்ட எல்லைக்குட்பட்ட இடத்தில் உணவு வழங்கக்கூடாது,'' என தெரிவித்துள்ளார்.
''உணவு வழங்குமிடத்தில் ஓட்டுநர் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி/ தன்னார்வ அமைப்பு/அரசு சாரா அமைப்புகள்/குழுவினர் உட்பட மூன்று நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும். உணவுப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனத்தில், மூன்று நபர்களுக்கு மேல் பயணிக்கக் கூடாது.உணவு வழங்கும் போது, சமூக இடைவெளியினை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்,'' என்றும் தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் காப் செயலி
நெல்லை மாநகரத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க புதிய முயற்சியாகப் பொதுமக்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஸ்மார்ட் காப் (SMART COP) என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேவையில்லாமல் வெளியில் சுற்றுவோர்மீது மட்டும் நடவடிக்கை எடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த செயலியை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் அறிமுகப்படுத்தினார்.
இது குறித்து நெல்லை காவல் துணை ஆணையர் சரவணன் கூறுகையில் 'தேவையில்லாமல் வெளியில் சுற்றுவோர்மீது மட்டும் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.'
"ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் இந்த செயலிமூலம், தேவையின்றி வெளியில் நடந்தோ அல்லது இருசக்கர வாகனத்திலோ சுற்றுவோரின் விவரங்களைச் சேகரிக்க முடியும்," என்றார்.
பிரசவமான பெண்ணுக்கு கொரோனா
வால்பாறையில் பிரசவமான பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து வால்பாறை நகர் பகுதி முழுவதிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சரவன்காடு எஸ்டேட்டை பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதியானதையடுத்து இன்று அதிகாலை அவர் கோவையில் உள்ள கொரோனா சிகிச்சைக்கான அரசின் சிறப்பு மருத்துவமனையான ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார்.
நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணுக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரசவமாகியுள்ளது. இதனால், மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், கடந்த 15 ஆம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரசவமான காளியாபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உறவினர்கள் என 88 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, நோய்த்தொற்று இல்லை என்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












