கொரோனா வைரஸ்: இந்த துறைகள்தான் நாளை முதல் செயல்பட இருக்கின்றன - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி: "நாளை முதல் செயல்பாடுகளை தொடங்க இருக்கும் துறைகள்"
தமிழகத்தில் திங்கள்கிழமை (ஏப். 20) முதல் அனைத்து அரசு அலுவலகங்களையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் சுழற்சி முறையில் முகக் கவசத்துடன் ஊழியா்கள் பணிக்கு வர வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
அதேசமயம், பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பணிக்கு வருவது எப்படி என்று அரசு ஊழியா்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா தொற்று காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் அத்தியாவசியத் துறைகளான சுகாதாரம், காவல், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, குடிநீா் வழங்கல், உணவுப் பொருள் வழங்கல் ஆகிய முக்கிய துறைகளைச் சோ்ந்த ஊழியா்கள் மட்டுமே கடந்த மாா்ச் 24 முதல் பணிக்கு வருகின்றனா். ஊரடங்கு காலத்திலும் அவா்கள் தொடா்ந்து பணியாற்றுகின்றனா்.
பிற துறை ஊழியா்கள்: அத்தியாவசியத் துறைகள் அல்லாத பிற துறைகளைச் சோ்ந்த அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், ஊழியா்களும் பணிக்கு வரவில்லை. இந்த நிலையில், ஊரடங்குக் காலம் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வரும் திங்கள்கிழமை (ஏப். 20) முதல் ஊரடங்கில் தளா்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தளா்வுகள் அனைத்தும் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், அரசுத் துறைகளைச் சோ்ந்த ஊழியா்களைப் பணிக்கு வர தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

பட மூலாதாரம், தினமணி
இதுகுறித்து, அரசுத் துறைகள் சாா்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதம்:-
அரசுத் துறைகளின் இன்றியமையாத பணிகளுக்கான அலுவலா்கள், பணியாளா்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்திட அறிவுறுத்தப்படுகிறது. கண்காணிப்பாளா், உதவியாளா், இளநிலை உதவியாளா், தட்டச்சா் ஆகியோா் சுழற்சி முறையில் பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
அலுவலகங்களுக்கு வரும் ஊழியா்கள் அனைவரும் சமூக இடைவெளியை கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்க வேண்டும். அனைத்து அலுவலா்களும், பணியாளா்களும் முகக்கவசம் அணிந்துதான் அலுவலகத்துக்கு வர வேண்டும். அடிக்கடி அலுவலகத்தில் கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும். கோவிட்-19 பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவறாது பின்பற்றி பணிபுரிய வேண்டும் என்று அரசுத் துறைகளின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணங்கள் பதிவுப் பணி: ஆவணங்கள் பதிவு செய்யும் பணிகளும் திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட உள்ளதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது. அதேசமயம், ஆவணப் பதிவுக்காக வரும் பொது மக்கள் முகக் கவசத்துடன் வர வேண்டுமென பதிவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. அரசு அலுவலகங்களுக்கு வரும் பொது மக்களை வெப்பமானி கொண்டு உடல் வெப்பத்தை பரிசோதிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணிக்கு வருவது எப்படி?: பொதுப் போக்குவரத்து இல்லாத நிலையில், எப்படி பணிக்கு வர முடியும் என ஊழியா்கள் கேள்வி எழுப்புகின்றனா். எனவே, சுழற்சி முறையில் பணிக்குச் செல்லும் ஊழியா்களுக்கு பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.
செயல்பாடுகளை தொடங்க இருக்கும் துறைகள்
- ஆயுஷ் உள்பட அனைத்து மருத்துவ சேவைகளும் செயல்படும்.
- வேளாண் மற்றும் தோட்டத் தொழில்களுக்கு அனுமதி.
- மீன்பிடித் தொழில் தொடர்ந்து இயங்கும்.
- தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழில்கள், அதிகபட்சம் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்.
- நிதித்துறை மற்றும் சமூக நலத்துறை செயல்படும்.
- சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி
- தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடரும். இதில் ஊழியர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
- பொது விநியோகத்துறை செயல்படும்.
- மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி.
- ஆன்லைன் மூலம் கற்பித்தல் மற்றும் தொலைதூர கல்விக்கு அனுமதி.
- அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யலாம்.
- வர்த்தகம், தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.
- கட்டிட தொழில்களை தொடர அனுமதி.
- தனியார் வாகனங்களை மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்காக இயக்கலாம்.
- அனைத்து மத்திய, மாநில, யூனியன் பிரதேச அலுவலகங்கள் செயல்படும்.
- என்று கூறுகிறது தினத்தந்தி நாளிதழ்.


- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

இந்து தமிழ் திசை: உலக நாடுகள் பணப்புழக்கத்தை அதிகரிக்க எடுத்துள்ள நடவடிக்கைகள்

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸால் உலக நாடுகள் முடங்கியுள்ள நிலையில், பொருளாதார நெருக்கடி தவிர்க்க முடியாதது. இதை சமாளிக்க உலக நாடுகள் அனைத்தும் 14 லட்சம் கோடி டாலர் அளவுக்கு மானிய உதவி மற்றும் பிற சலுகைகளுக்காக விடுவித்துள்ளது என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை முற்றிலும் தடுத்துவிட்டதாக சர்வதேச சமூகம் அறிவிப்பு வெளியிடுவதற்கான வாய்ப்புகள் மிக அருகில் இல்லை என்பது மட்டும் தெரிகிறது என்று ஐஎம்எப் நிதிக் குழு தலைவர் லெஸட்ஜா கயன்யாகோ தெரிவித்துள்ளார்.
அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகள் இதுவரை நிதிப்புழக்கத்தை அதிகரிக்கவும், பல்வேறு சலுகைகளுக்காகவும் விடுவித்த தொகை 8 லட்சம் கோடி டாலர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழல் மக்களை வெகுவாக பாதித்துள்ளது. பெரும்பாலான நாடுகள் இப்போது சுகாதார பணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகள், வேலையிழந்த ஊழியர்கள், முடங்கியுள்ள தொழில்களை காக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் அதிக பாதிப்புக்குள்ளாகும் ஏழை நாடுகளுக்கு உதவ ஐஎம்எப் உறுதியுடன் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மாத இறுதிக்குள் 50 ஏழை நாடுகளுக்கு தேவையான உதவிகளை ஐஎம்எப் வழங்கும் என்று அதன் மேலாண் இயக்குநர் கிறிஸ்டிலினா ஜியாோர்ஜிவா தெரிவித்தார்.
பேரழிவு தடுப்பு மற்றும் நிவாரண நிதிக்கு இங்கிலாந்து, ஜப்பான், சீனா, நெதர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உதவி செய்துள்ளன. மேலும் வறுமை ஒழிப்புக்கு 1,700 கோடி டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வர்த்தக சர்ச்சை, நாடுகளிடையே கொள்கை வேறுபாடு, அரசியல் பதற்ற சூழல் ஆகியவை காரணமாக சர்வதேச பொருளாதார வளர்ச்சி விகிதம் மிகவும் சிக்கலானதாக இருந்த சூழலில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் தொற்று இதை மேலும் மோசமாக பாதித்துள்ளது என்று ஜியோர்ஜிவா குறிப்பிட்டார். இதன் காரணமாக 2020-ம் ஆண்டில் மிக மோசமான பொருளாதார தேக்க நிலை உருவாவது தவிர்க்க முடியாத ஒன்று என்று அவர் குறிப்பிட்டார்.
சில உறுதியான நடவடிக்கைகளையும், கட்டுப்பாடுகளையும் சர்வதேச சமூகம் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய சூழலை கொரோனா வைரஸ் பரவல் ஏற்படுத்திவிட்டது. இதிலிருந்து மீள்வதோடு பொருளாதார நெருக்குதலில் இருந்தும் நாடுகள் மீண்டு வர வேண்டியது கட்டாயமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

தினத்தந்தி: "அந்நிய நேரடி முதலீடு விதிமுறையில் திருத்தம்"

பட மூலாதாரம், Getty Images
அந்நிய நேரடி முதலீடு விதிமுறையில் மத்திய அரசு அதிரடியாக திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்திய நிறுவனங்களை சீன நிறுவனங்கள் வாங்குவதை தடுக்கிற மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவி வருவதால் உலக நாடுகள் பலவற்றிலும் பொருளாதாரம் பெரும்பாதிப்புக்கு ஆளாகி உள்ளது.
பல நாடுகளிலும் நிறுவனங்கள் நலிவுற்று, வீழ்ச்சியை சந்தித்து உள்ளன.
இதுகுறித்து தகவல்கள் வெளிவந்த வண்ணமாக இருக்கின்றன.
இதை பயன்படுத்தி, ஐரோப்பிய நாடுகளில் நலிவடைந்து உள்ள நிறுவனங்களின் பங்குகள் மீது சீன முதலீட்டாளர்கள் கவனம் செலுத்துவதாக தகவல்கள் வெளியாகின.
இதனால் இந்தியாவில் நலிவடைந்துள்ள நிறுவனங்கள் மீதும் சீன முதலீட்டாளர்களின் பார்வை திரும்பும் நிலை உருவானது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இதில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கிற வகையில் சில தினங்களுக்கு முன்பாக ட்விட்டரில் பதிவு வெளியிட்டார்.
அதில் அவர், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவி வருகிற நிலையில், அதை பயன்படுத்தி இந்திய நிறுவனங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் கையகப்படுத்தும் முயற்சி நேரிடாத வகையில், மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் அந்நிய நேரடி முதலீடு விதிமுறையில், மத்திய அரசு நேற்று ஒரு அதிரடி திருத்தத்தை செய்தது. அதன்படி, அந்நிய நேரடி முதலீடுகளில் சில குறிப்பிட்ட நிகழ்வுகளில் மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதை கட்டாயம் ஆக்கி உள்ளது.
இதையொட்டி மத்திய அரசின் உள்நாட்டு தொழில், வர்த்தக ஊக்குவிப்பு துறை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், "இந்தியாவுடன் நில எல்லையை பகிர்ந்து கொள்ளும் எந்த ஒரு நாட்டின் நிறுவனமும், இந்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுத்தான் இங்குள்ள நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியும்" என கூறப்பட்டுள்ளது.
இதுவரை "முதலீடு செய்யலாம்" என்று இருந்த விதியை "இந்திய அரசின் ஒப்புதலைப்பெற்றுத்தான் முதலீடு செய்ய முடியும்" என்று இப்போது மாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் தற்போது இருக்கிற அல்லது எதிர்காலத்தில் செய்யக்கூடிய அந்நிய நேரடி முதலீடு மூலம் நிறுவனத்தின் உரிமையை மாற்றிக்கொள்வதற்கும் இந்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:
- கொரோனா: தமிழகம் வாங்கிய 'ரேபிட் டெஸ்ட் கிட்'டின் விலை அதிகமாக இருப்பது ஏன்?
- "1.2 லட்சம் கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகள்" - ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன?
- டாஸ்மாக் மூடல்- இணையத்தை பார்த்து மது தயாரிக்க முயன்றவர்கள் கைது
- ”ஊரடங்கு தேவையில்லை” - அமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்; ஆதரிக்கும் டிரம்ப்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












