ரிசர்வ் வங்கி நடவடிக்கை: 1.2 லட்சம் கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் முதல் 50 ஆயிரம் கோடி கடன் வரை - விரிவான தகவல்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: "1.2 லட்சம் கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகள்" - ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன?
நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் நபார்டு, தேசிய வீட்டு வசதி வங்கி போன்ற மத்திய அரசின் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி ரூ.50 ஆயிரம் கோடி கடன் வழங்குகிறது.
கொரோனாவால் உலகில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பல்வேறு நாடுகளின் மைய வங்கிகள் வட்டி விகிதங்களை குறைத்த நிலையில் ரிசர்வ் வங்கியும் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதங்களை குறைத்தது.
அதன்படி ரெப்போ விகிதம் 4.40 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 4 சதவீதமாகவும் குறைந்தது. இந்த வட்டி குறைப்பின் பலனை வங்கிகள் பொதுமக்களுக்கு வழங்க வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் வீடு மற்றும் வாகன கடன் வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது என்றும் நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், வங்கிகள் ரிசர்வ் வங்கியில் செலுத்தும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த வட்டி விகிதம் 3.75 சதவீதமாக குறைந்து இருக்கிறது.
அதே சமயம் வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. எனவே அது 4.40 சதவீதமாக நீடிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
டெபாசிட் வட்டி விகிதம் குறைக்கப்பட்டு இருப்பதால் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செலுத்தும் ஆர்வம் குறைந்து, அதன் பலன் பொதுமக்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதுதவிர வேறு சில முக்கிய நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி எடுத்து உள்ளது. குறிப்பாக நபார்டு (தேசிய வேளாண்மை மற்றும் ஊரக அபிவிருத்தி வங்கி), சிட்பி (இந்திய சிறு தொழில்கள் அபிவிருத்தி வங்கி), தேசிய வீட்டு வசதி வங்கி போன்ற மத்திய அரசு நிதி நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வழங்குகிறது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், இந்த கடன் உதவி நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க உதவும். மேலும் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு 2019-20-ம் ஆண்டுக்கு லாப ஈவுத் தொகை (டிவிடெண்டு) வழங்குவதில் இருந்து வங்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று மாநிலங்கள் 60 சதவீதம் அதிகமாக கடன்களை வாங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. செப்டம்பர் 30-ந் தேதி வரை இந்த சலுகை வழங்கப்படுகிறது.
வங்கிகளின் வாராக்கடன் விதிமுறைகளிலும் தளர்வு செய்யப்பட்டு உள்ளது.
தற்போதைய சவாலான சூழ்நிலையில் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டீ.பி) 3.2 சதவீத அளவுக்கான நிதி ஆதாரங்களை ஏற்படுத்தி உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை ரூ.1.2 லட்சம் கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை சப்ளை செய்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி கூறி இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளை பணவீக்கம்தான் நிர்ணயிக்கிறது. எனவே அது தொடர்பான மதிப்பீடும் இப்போது வெளியிடப்பட்டு உள்ளது. இரண்டாவது அரையாண்டில் பணவீக்கம் 4 சதவீதத்துக்கும் கீழ் வர வாய்ப்பு உள்ளது என இந்த வங்கி கூறி உள்ளது.
இந்த ஆண்டில் இயல்பான பருவமழை எதிர்பார்க்கப்படுவதால் ஊரக பகுதிகளில் விரைவில் தேவை அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, அடுத்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்றும், அது கொரோனா பாதிப்புகளுக்கு முந்தைய வளர்ச்சியை விட வேகமாக இருக்கும் என்றும் மதிப்பீடு செய்து இருக்கிறது.

இந்து தமிழ் திசை: ரத்த மாதிரிகளை எடுத்துச் சென்ற ஹெலிகாப்டர் சாலையில் தரையிறக்கம்
கொரோனா ரத்தம் மற்றும் சளி மாதிரிகளை எடுத்துச் சென்ற ஹெலிகாப்டர் அவசரமக சாலையில் தரையிறக்கப்பட்டுள்ளது என்கிறது இந்து தமிழ் திசை நாளிதழ்.
இந்திய விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது, "விமானப்படைக்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர், லடாக்கில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரியுடன் வியாழக்கிழமை புறப்பட்டது. காஸியாபாத்தின் ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் இருந்து சண்டிகருக்கு புறப்பட்ட இந்த ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, விமானி அந்த ஹெலிகாப்டரை உ.பி.யின் பாக்பத் பகுதியில் உள்ள விரைவு சாலையில் அவசரமாக தரையிறக்கினார். இதில் பயணித்த 2 விமானிகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற மற்றொரு ஹெலிகாப்டர் அவர்களை அழைத்துச் சென்றது." - இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மலைகள் நிறைந்த லடாக் யூனியன் பிரதேசத்தில் கொரோனா பரிசோதனை வசதி இல்லை. இதனால், அங்கு கொரோனா அறிகுறி உள்ளவர்களின் ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஹிண்டன் விமானப்படை தளத்திலிருந்து டெல்லி, சண்டிகருக்கு ஹெலிகாப்டர் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்

தினமணி: கொரோனா தொற்று - இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு
கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு இடையில், நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்ந்து அதிகரித்து வருவதாக தேசிய மகளிர் ஆணையம் (என்சிடபிள்யு) தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பிப்ரவரி 27 முதல் மாா்ச் 22 வரை பெண்கள் தொடா்புடைய 396 குற்றங்கள் குறித்து தேசிய மகளிா் ஆணையத்திற்கு புகாா் செய்யப்பட்டுள்ளன. மாா்ச் 23 முதல் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை இதுபோன்று 587 புகாா்கள் வரப்பெற்றன.
குடும்ப வன்முறை தொடா்பாக கடந்த 25 நாள்களில் 239 புகாா்கள் ஆணையத்திற்கு வந்துள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தேசிய மகளிா் ஆணையத் தலைவா் ரேகா சா்மா கூறுகையில், 'கொரோனா நோய்த் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் நபரும், பாதிப்புக்கு உள்ளாகும் நபரும் சோ்ந்து இருப்பதால் குடும்ப வன்முறை தொடா்பான புகாா்கள் அதிகரிக்கும்' எனத் தெரிவித்திருந்தாா். ஊரடங்கு காலத்தின் போது குடும்ப வன்முறை தொடா்பான புகாா்களை அளிப்பதற்காக ஏப்ரல் 10-ஆம் தேதி 'கட்செவி அஞ்சல்' எண் சேவையை தொடங்கியிருந்தது. மேலும், இது தொடா்பான புகாா்களை துரிதமாக விசாரிப்பதற்காக தேசிய மகளிா் ஆணையம் ஒரு சிறப்புக் குழுவையும் அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- அமெரிக்காவை தாக்க இருக்கும் மற்றுமொரு பெருந்துயர் - 520 ஆண்டுகளுக்குப் பின் நடக்க இருக்கும் அவலம்
- கொரோனா இந்தியா: "தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் விகிதம் குறைகிறது"
- தமிழகத்தில் மேலும் புதிதாக 56 பேருக்கு கொரோனா தொற்று; 103 பேர் குணமடைந்தனர்
- உலக சுகாதார நிறுவனத்துக்கு உதவியை நிறுத்திய அமெரிக்கா: உங்களுக்கு என்ன பாதிப்பு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












