தமிழகத்தில் மேலும் புதிதாக 56 பேருக்கு கொரோனா தொற்று; 103 பேர் குணமடைந்தனர்

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் மேலும் 56 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1323ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக மாநில பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளில் 34 பேர் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 23,934 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 1891 பேர் நோய்க் குறிகளுடன் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை 29,673 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், 1323 பேர் அந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 2,023 சோதனைகளின் முடிவுகள் இன்னும் வெளிவர வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்றுவரை 1267 பேருக்கு அந்நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 56 பேருக்கு அந்நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்கள் 103 பேர் இன்று மருத்துவமனையிலிருந்து வெளியேறினர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 283ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது மாநிலத்திலேயே அதிக அளவாக சென்னையில்தான் 228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் வந்த ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள்
தமிழ்நாடு வாங்க உத்தேசித்திருந்த 4,00,000 ரேபிட் டெஸ்ட் கிட்களில் 24 ஆயிரம் டெஸ்ட் கிட்கள் தமிழகத்திற்கு வந்து சேர்ந்திருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்
ஊரடங்கிலிருந்து தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளிப்பது குறித்து திங்கட்கிழமையன்று முடிவுசெய்யப்படுமென்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வுசெய்வதற்காக அங்கு சென்றிருந்த தமிழக முதலமைச்சர், ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

பட மூலாதாரம், FACEBOOK
"சேலத்தை பொறுத்தவரை 9 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த 9 இடங்களில் இருந்துதான் நோய் பரவல் ஏற்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் குணமடைந்துள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், ஏப்ரல் 20ஆம் தேதி முதல் சில தொழிற்சாலைகள் இயங்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. அவை எந்தெந்த தொழிற்சாலைகள் என்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க நிதித் துறைச் செயலர் கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அந்தக் குழுவின் முடிவுகள் வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படுமென்றும் முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சீனாவில் ஆர்டர் செய்திருந்த ரேபிட் டெஸ்ட் கிட்களில் 24,000 டெஸ்ட் கிட்கள் தமிழகத்திற்கு வந்து சேர்ந்திருப்பதாகவும் மத்திய அரசு 12 ஆயிரம் டெஸ்ட் கிட்களை வழங்குவதாக சொல்லியிருப்பதாகவும் ஆனால், தமிழ்நாட்டிற்கு 50,000 கிட்கள் தேவை என வலியுறுத்தியிருப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
மத்திய அரசு போதுமான உபகரணங்களையோ நிதியையோ தரவில்லையே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, மத்திய அரசு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் மாநில அரசு தனியாக வாங்கி வருவதாகவும் மாநில அரசு ஆர்டர் செய்திருந்த 4 லட்சம் கிட்களில் இருந்துதான் தற்போது 24 ஆயிரம் கிட்கள் தமிழகத்திற்கு வந்திருப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
மத்திய அரசு பாரபட்சமாக நடத்துகிறதா என்று கேட்டபோது, இது அதைப் பற்றிப் பேசுவதற்கான நேரமல்ல என்று தெரிவித்த முதல்வர், மாநில மக்களைக் காப்பாற்றுவது அரசின் கடமை என்று கூறினார்.

- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
- வைரஸுக்கு ஏற்ற சூழ்நிலையும், அதை எளிதில் கட்டுப்படுத்தும் வழிகளும்
- கோடைக் காலம் வந்தால் கொரோனா வைரஸ் சாகுமா?

தி.மு.க. மீது கடும் விமர்சனம்
கொரோனாவை அரசு எதிர்கொள்வது குறித்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் விமர்சனம் குறித்துக்கேட்டபோது அவரை, தான் பொருட்படுத்துவதே கிடையாது என்றும் அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது என்றும் தெரிவித்தார். தினமும் அறிக்கைவிட்டு அரசை குறை சொல்வதாகவும் நோயை எதிர்த்து அரசு இயந்திரம் முழுமையாக போராடிவருவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லையெனக் கேட்டபோது, "அவர்களால் என்ன ஆலோசனை சொல்ல முடியும்? ஆலோசனை சொல்ல அவர்கள் மருத்துவர்களா?" என்று முதல்வர் கேள்வியெழுப்பினார். இதற்காக மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம், உலக சுகாதார நிறுவனம் சொல்வதைக் கேட்டு அரசு செயல்படுவதாகவும் இதனை அரசியலாக்க தி.மு.க. முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இனி எதிர்க்கட்சிகளைப் பொருட்படுத்தப் போவதில்லையென்றும் தமிழ்நாட்டில்தான் இப்படிப்பட்ட அரசியல் நடப்பதாகவும் முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












