கொரோனா வைரஸ்: பிரசவ வலியால் துடித்த பெண்; ஊரடங்கு நேரத்தில் காப்பற்றிய போலீஸ் - நெகிழ்ச்சி பதிவு

ஊரடங்கு காவல் பணியில், பிரசவத்துக்காக துடித்த போலீஸ் உள்ளம்
    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொரோனா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, பிரசவ வலியால் துடித்த பெண்ணை நள்ளிரவு நேரத்தில் ஆட்டோவில் அழைத்துச் சென்று காப்பாற்றினார் புதுச்சேரி காவலர் ஒருவர்.

புதுச்சேரியை ஒட்டியுள்ள விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் -புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் மக்கள் தொடர்பு அதிகம் இருந்த காரணத்தினால், அதை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து முற்றிலுமாக சீல் வைத்தனர். இதனால் புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைகளில் யாரும் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தடை செய்யப்பட்டு, மக்கள் நடமாட்டம் முற்றிலுமாக முடக்கப்பட்டது. மேலும், காவலர்கள் அப்பகுதிகளில் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை முடக்கப்பட்ட புதுச்சேரி முத்தியால்பேட்டை எல்லைப் பகுதியில் காவலர் கருணாகரன் (வயது 30) என்பவர் கொரோனா முடக்க நிலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த இருவர், இரவு 11.45 மணியளவில், தனது நிறைமாத கர்ப்பிணியான தங்கள் மகள் குழந்தை பிறக்கும் தருவாயில் பிரசவ வலியால் துடிப்பதால் அவளை மருத்துவமனை கொண்டு செல்ல உதவுமாறு காவலர் கருணாகரனிடம் கேட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஆள் நடமாட்டம் இல்லாத அந்நேரத்தில் யாராவது அருகில் உள்ளனரா, வாகனம் ஏதாவது இருக்கிறதா என்று தேடியுள்ளார் காவலர். பின்னர், அப்பகுதியில் சிறிது தொலைவில் வரிசையாக நான்கு ஆட்டோக்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்ட காவலர் ஆட்டோ உரிமையாளர் உதவியை நாடியுள்ளார். அந்த ஆட்டோ உரிமையாளர் தனக்கு வயதாகி விட்டதால் தன்னால் சரிவர ஆட்டோ ஓட்ட இயலாது என்றும் தாம் இந்த ஆட்டோக்களை வாடகை விட்டுத்தான் பணம் ஈட்டி வருவதாகவும் கூறியுள்ளார்.

அவரிடம் ஒரு ஆட்டோ சாவியைப் பெற்றுக்கொண்ட காவலர் கருணாகரன் தானே அந்த ஆட்டோவை ஓட்டிச் சென்று, வீட்டில் இருந்த கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிக்கொண்டு அவரை மகப்பேறு மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளார் கருணாகரன். மருத்துவமனை நெருங்கியதும் வாசலிலேயே குழந்தை தாயின் கருப்பையிலிருந்து வெளியே வரத் தொடங்கியது. பின்னர் அந்த பெண்ணை மருத்துவர்கள் உள்ளே அழைத்துச் சென்று உடனடியாக பிரசவம் பார்த்தனர். அந்த பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

Banner image reading 'more about coronavirus'
Banner

இது குறித்து காவலர் கருணாகரன் கூறுகையில், "தன் மகள் பிரசவ வலியால் துடிக்கிறாள் என்று அவரின் தாய் கூறும்போது என்னால் என்ன உதவி செய்ய முடியும் என மனதிற்குள் தோன்றியது. சிறிய வயதில் ஒருமுறை ஆட்டோ ஓட்டியிருக்கிறேன். அந்த நம்பிக்கை தான் அவரை பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.

பின்னர், ஆட்டோ ஏற்பாடு செய்து அந்த நேரத்தில் வழிகள் முற்றிலுமாக தடுப்பு போடப்பட்டதால், அவரை அப்பகுதியிலிருந்து வெளியே கொண்டுவருவதில் சிரமமப்பட்டேன். பிறகு பிரதான சாலையை அடைந்தது ஆட்டோவை ஓரளவு நன்றாக ஓட்டினேன். ஆனால், நேரம் செல்ல செல்ல அந்த பெண் வலி தாங்க முடியாமல், அண்ணா வலிக்கிறது சீக்கிரமா போங்க என்று கூறினார்.

பத்திரமாக மருத்துவமனை கொண்டு செல்ல வேண்டும். அவசரத்தில் கட்டுப்பாட்டை இழக்கக் கூடாது என்பதால் நான் நிதானமாகவும், ஓரளவு வேகமாகவும் ஆட்டோவை ஓட்டினேன். மருத்துவமனை வாசலிலேயே அவருக்கு குழந்தை வெளியே வரத் தொடங்கியது. பிறகு அவரை உள்ளே அனுமதித்தவுடன் நான் எனது பணிக்குத் திரும்பி விட்டேன்," என்றார்.

கொரோன வைரஸ்

தொடர்ந்து பேசிய அவர், "அதிகாலை 4 மணியளவில் நான் பணி செய்து கொண்டிருந்த போது, அந்த பெண்ணின் தாயார் என்னைத் தேடி வந்து ஆண் குழந்தை பிறந்தது. தாயும் நலமாக இருக்கிறார் என்று கூறி என்னிடம் நன்றியைத் தெரிவித்தார். அன்று முழுவதும் பணிபுரிந்து வந்த நான் தூங்கவில்லை. வாழ்க்கையில் எதையோ சாதித்த உள்ளுணர்வு என் மனதில் இருந்தது. இன்னும் அந்த நெகிழ்ச்சியான தருணத்திலிருந்து என்னால் வெளியே வர முடியவில்லை" என்றார் கருணாகரன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: