53 நாடுகளில் 3,300 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினத்தந்தி: “53 நாடுகளில் 3,300 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு”
53 உலக நாடுகளில் 3,336 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருப்பதாக, அவர்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
“கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பெரிய அளவில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க முடியாத சூழல் உள்ளது; எனவே அவர்கள் பொறுமை காக்க வேண்டும் என்று அந்த வட்டாரங்கள் கேட்டுக்கொண்டன. வணிக அடிப்படையிலும், மானியமாகவும், 55 உலக நாடுகளுக்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.”
“மேலும், கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகளை தென்கொரியா மற்றும் சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்வதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், மலேசியா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து மருத்துவ சாதனங்களை வாங்கவும் இந்தியா எண்ணி இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து தமிழ்: “கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமான 16 பேருக்கு சிறை”

பட மூலாதாரம், Getty Images
சேலத்தில் கொரோனா தொற்று பரவலுக்கு காரணமாக இருந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேர் உட்பட 16 பேரை காவல்துறையினர் கைது செய்து, சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைத்துள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“சேலத்தில் கடந்த மார்ச் மாதம் மதபிரசங்கம் செய்ய வந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேருடன் சென்னையைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவர் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் 16 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
கொரோனா தொற்று ஏற்பட காரணமாக இருந்ததாக இவர்கள் 16 பேர் மீதும் சேலம் கிச்சிப்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இவர்கள் 16 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கைது செய்து காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேர் உள்ளிட்ட 16 பேரும் குணமடைந்தனர். இதையடுத்து, 16 பேரையும் காவல்துறையினர் நேற்று சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: “இணையதள வர்த்தகம் மீண்டெழுமா?”

பட மூலாதாரம், Getty Images
இதுவரை இந்தியாவில் அத்தியாவசியான பொருட்களை விற்பனை செய்வதற்கு மட்டுமே இணையதள வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், வரும் 20ஆம் தேதி அனைத்துவிதமான பொருட்களையும் தடையின்றி இணையதளத்தில் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“அத்தியாவசியமற்ற பொருட்களையும் விற்பனை செய்யலாம் என்ற அறிவிப்பு ஒருபுறம் இணையதள வர்த்தக நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், தற்போதுள்ள குறைந்தபட்ச பணியாட்களை கொண்டு எப்படி முழுவீச்சியில் செயல்பட முடியும் என்ற கவலையில் அந்த நிறுவனங்கள் உள்ளன.”
“இந்நிலையில், இந்தியாவில் இரண்டாவது கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையின்போது, வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு தங்களிடம் போதிய இருப்பு உள்ளதாக முன்னணி மின்னணு பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது” என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.













