கொரோனா இந்தியா: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13000-ஐ கடந்தது; புதிதாக 1000 பேருக்கு வைரஸ் தொற்று

; புதிதாக 1000 பேருக்கு வைரஸ் தொற்று

பட மூலாதாரம், TAUSEEF MUSTAFA / Getty

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 13000-ஐ கடந்துள்ளது.

இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று மாலை வெளியிட்ட தகவலின்படி இதுவரை 13,387 பேர் இதுவரை கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1007 பேருக்கு தொற்று இருப்பது புதிதாக உறுதியாகியுள்ளது மற்றும் 23 பேர் இறந்துள்ளனர் என்று சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்

இதனால் இந்தியாவில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 437ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 1749 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 11,201 ஆக உள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 13.06% பேர் குணமடைந்துள்ளதாகவும் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் விகிதம் 40% அளவுக்கு குறைகிறது என்றும் லாவ் அகர்வால் தெரிவித்தார்.இந்தியா முழுவதும் 1,990 கோவிட்-19 சிகிச்சை மருத்துவமனைகள் மற்றும் 1,73,000க்கும் மேலான தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் உள்ளன என்றும், அவர் அப்போது கூறினார்.

அவர் தெரிவித்தபடி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் இரட்டிப்பாக தற்போது 6.2 நாட்கள் ஆகின்றன.உதாரணமாக நாடு முழுவதும் 1000 பேர் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த எண்ணிக்கை 2000 ஆக 6.2 நாட்களாகும்.

மேலும், ஊரடங்கு அமலாகும் முன்னர் பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் வெறும் மூன்று நாட்கள் மட்டுமே இருந்தது என்றும் லாவ் அகர்வால் கூறினார்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்

17656

மொத்தம்

2842

குணமடைந்தவர்கள்

559

இறந்தவர்கள்

தகவல்: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட நேரம்: 11: 30 IST

அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள்

மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.அதிகபட்சமாக கேரளாவில் பாதிக்கப்பட்ட 395 பேரில் இதுவரை 245 பேர் இதுவரை குணமாகியுள்ளனர்.

கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. அங்கு எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த லாவ் அகர்வால், "நாட்டின் ஒரு பகுதியை மட்டும் குறிப்பிட்டுக் கூற முடியாது, அனைத்து மாநிலங்களும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் ஒன்றாக கேரளா உள்ளது, " என்றார்

எத்தனை பேருக்கு பரிசோதனை?

இதுவரை இந்தியா முழுவதும் 3,19,400 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்ற பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் மருத்துவர் கங்காகேத்கர் தெரிவித்தார்.

கொரோனா இந்தியா

பட மூலாதாரம், ARUN SANKAR / Getty

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 28,340 பேருக்கு இந்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அனைத்து மாநிலங்களுக்கும் ஐந்து லட்சம் பரிசோதனை கருவிகள் அனுப்பட்டுள்ளன என்றும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. பரிசோதனை செய்யப்படும் 24 பேரில் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதியாவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கொரோனா வைரஸ் திடீர் மரபணு மாற்றம் அடைவது (mutation) வேகமாக நிகழ்வதாகவும், தடுப்பூசி மூலமே இதைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இந்தியா தீவிரமாக உள்ளதாகவும் சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: