கொரோனா வைரஸ்: டெல்லி நிசாமுதீன் மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை தேடும் அதிகாரிகள் - நடந்தது என்ன?

நிசாமுதீன் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு சோதனை

பட மூலாதாரம், Getty Images

டெல்லி நிசாமுதீனில் நடைபெற்ற மத நிகழ்ச்சி ஒன்றில் கலந்த கொண்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சி அதிகாரிகள் அவர்களைத் தேடி வருகின்றனர்.

டெல்லி நிசாமுதீனை தலைமையகமாகக் கொண்ட தப்லிக் ஜமாத் அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு உட்பட ஆறு மாநிலங்களிலிருந்து மக்கள் கலந்து கொண்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்தோனீசியா மதகுருவால் பிறருக்கு கொரோனா தொற்று பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மசூதி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது ஆனால் தங்கள் மீது எந்த தவறும் இல்லை என அவர்கள் கூறுகின்றனர்.

20ஆம் நூற்றாண்டின் இஸ்லாமிய அமைப்பான தப்லிக் ஜமாத்தால் நடத்தப்பட்ட இந்த மத வழிபாடு நிகழ்ச்சிகள் பிப்ரவரி மாத கடைசியிலும் மார்ச் மாத தொடக்கத்திலும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் மூலம் கூட்டம் வந்ததா அல்லது ஒருங்கிணைப்பாளர்கள் அட்டவணைப்படி விருந்தினர்களை அழைத்தனரா என்பது தெரியவில்லை. இந்த நிகழ்ச்சி வந்த சிலர் நிசாமுதீன் பகுதியிலேயே தங்கியிருக்க வேறு சிலர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களும், அதில் சில மதகுருக்களும், நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மசூதிகளுக்குச் சென்று அங்குள்ளவர்களைப் பார்த்துள்ளனர்.

Banner image reading 'more about coronavirus'

Banner

எனவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் எத்தனை பேர் என்பதும், அவர்கள் எங்கெல்லாம் சென்றார்கள் என்பதையும் கண்டறிவது அதிகாரிகளுக்குச் சவாலான காரியமாக உள்ளது.

இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யவும் டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

இருப்பினும், 22 மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு அனைவரையும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திரும்பிப் போக சொல்லிவிட்டதாகத் தாம் தெரிவித்துவிட்டதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"சட்டத்தை மீறி நடக்கவில்லை. எல்லா சமயங்களிலும் பொறுமையுடனே நடந்து கொண்டோம். நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மருத்துவ விதியை மீறி பேருந்து நிலையத்திலோ அல்லது தெருக்களில் நடமாடவோ அனுமதிக்கவில்லை." என மசூதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆறு பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தெலங்கானாவில் கொரோனா தொற்று உள்ள 71 பேரில் 40க்கும் மேற்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையவர்களாக உள்ளனர்.

கடந்த வாரம் இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீர் கொரோனா தொற்றால் உயிரிழந்த 65 முதியவர் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தென் மாநிலங்களான தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் 3000க்கும் மேற்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் கொரோனா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்ட 16 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தாமாக முன்வந்து சோதனை செய்து கொள்ள வேண்டும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

நிசாமுதீன்

பட மூலாதாரம், Getty Images

இதில் கலந்து கொண்ட 700 பேர் டெல்லி நிசாமுதீனின் மேற்கு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் 335 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பிடிஐயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின், தப்லிக் ஜமாத்தின் தலைமையகத்தில் இருக்கும் 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி முதலமைச்சர் கேஜ்ரிவால் சந்திப்பு ஒன்றை நடத்தியதாகவும், துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா, சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் பிற அதிகாரிகள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Banner image reading 'more about coronavirus'

அந்த சமயத்தில் பலர் அங்கிருந்து சென்று விட்டாலும் மாநிலங்களுக்கு இடையே பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் சிலரால் அங்கிருந்து செல்ல முடியவில்லை மேலும் இரண்டு நாட்களில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுவிட்டது.

அந்த மசூதி வளாகத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் தங்கும் வசதி உள்ளது.

இதுகுறித்து உள்ளூர் போலீஸிடம் தாங்கள் தெரியப்படுத்தியதாகவும், தொடர்ந்து மருத்துவ அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா தொற்று பரவல் மத கூட்டங்களால் பரவுவது இது முதல் முறையல்ல.

இந்தோனீசியா மற்றும் மலேசியாவில் தப்லிக் ஜமாத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சியால் கொரோனா தொற்று பரவியதாகக் கூறப்பட்டது.

தென் கொரியாவில் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் மூலம் கொரோனா தொற்று பரவியதாகக் கூறப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: