கொரோனா வைரஸ்: "எப்படியாவது சொந்த ஊருக்கு அனுப்பி விடுங்கள்" - சென்னையில் தவிக்கும் தொழிலாளர்கள்

நடந்து செல்லும் தொழிலாளர்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் சொந்த ஊர் செல்வதற்காகப் புறப்பட்ட வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், ரயில்கள் ரத்துசெய்யப்பட்டதால் தவித்துப் போயிருக்கிறார்கள். மாநகராட்சி தங்குவதற்கு இடம் கொடுத்திருந்தாலும் ஊரைச் சென்றடையும் பரிதவிப்பில் இருக்கிறார்கள் இவர்கள்.

"கேரளாவிலிருந்து மார்ச் 21ஆம் தேதி புறப்பட்டு, மார்ச் 22ஆம் தேதி இங்கே வந்தோம். திடீரென்று ரயில், பஸ் எதுவும் ஓடாது என்று சொல்லிவிட்டார்கள். இதனால் இங்கேயே மாட்டிக்கொண்டோம். ஏதாவது ஒன்றுசெய்து எங்களை வீட்டிற்கு அனுப்புங்கள். ரயில் சேவை தொடங்கினாலும் சரி, அல்லது தனியாக போக்குவரத்து சேவை தொடங்கியாவது சரி எங்களை வீட்டிற்கு அனுப்புங்கள்" என்கிறார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மொஹமத் ஜம்ஷத் அன்வர்.

கொரோனாத் தொற்றைத் தடுக்க இந்தியா முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நேரத்தில், சென்னையில் வந்து சிக்கிக்கொண்டவர் இவர்.

ஊரைச் சென்று சேராத கால்கள்

"நாங்களும் இங்கே பதற்றத்தில் இருக்கிறோம். எங்கள் வீட்டில் இருப்பவர்களும் பதற்றத்தில் இருக்கிறார்கள். முதலில் 22ஆம் தேதி மட்டும் ஒரு நாள் எந்த போக்குவரத்தும் இருக்காது என்றார்கள். பிறகு ஏப்ரல் 1ஆம் தேதிவரை எந்த சேவையும் இருக்காது என்றார்கள். இப்போது ஏப்ரல் 14ஆம் தேதிவரை எந்த சேவையும் இருக்காது என இது நீடித்துக்கொண்டே போகிறது. நாங்கள் வீட்டுக்கு போக வேண்டும் என்று புறப்பட்டோம். இங்கே மாட்டிகொண்டிருக்கிறோம்" என்கிறார் ஜம்ஷத்.

இது ஜம்ஷத்தின் கதை மட்டுமல்ல; இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இப்படி ஒரு நெருக்கடியில்தான் இருக்கிறார்கள். ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் தலைநகர் தில்லியிலிருந்து லட்சக்கணக்கான மக்கள், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், பிகாரை நோக்கி கூட்டம்கூட்டமாக புறப்பட்டது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது.

தொழிலாளர்கள்

இதேபோல, தென்மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானாவில் பணியாற்றிவந்த பிற மாநிலத் தொழிலாளர்களும் ஊரடங்கு அமல்படுத்தப்படவிருந்த நிலையில் தத்தம் மாநிலங்களை நோக்கிப் புறப்பட்டனர். ஆனால், இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் ஊரைச் சென்றடையவில்லை. பலர் நடுவழியில் மாட்டிக்கொண்டனர்.

கொரோனோ தொற்றைத் தடுக்க மார்ச் 22ஆம் தேதி ஒரு நாள் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தவுடனேயே கேரளாவில் வேலைபார்த்துவந்த ஜம்ஷத், சொந்த ஊரான கொல்கத்தாவுக்குச் செல்வதற்காக ரயிலைப் பிடிக்க சென்னைக்கு வந்தார். 23ஆம் தேதிக்கு அவர் ஹவுரா எக்ஸ்பிரசில் டிக்கெட்டைப் பதிவுசெய்திருந்தார். ஆனால், அன்று முதல் ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுவிட, சென்னையில் சிக்கிக்கொண்டார் அவர். கேரளாவுக்கும் திரும்பிச் செல்லமுடியாமல், கொல்கத்தாவுக்கும் போகமுடியாமல் மாட்டிக்கொண்டார் ஜம்ஷத்.

Banner image reading 'more about coronavirus'
Banner

ஒதிஷாவைச் சேர்ந்த உதய் மல்லிக் பெங்களூரில் இருக்கும் பிடபிள்யுஎஸ்எஸ்பியில் வேலை பார்க்கிறார். கொரோனா பிரச்சனை துவங்கியதும் ஒதிஷாவுக்குச் செல்வதற்காக சென்னை வந்தவர், ரயில்கள் இல்லாமல் இங்கே சிக்கிக்கொண்டிருக்கிறார். தம் மாநில அரசு ஏதாவது செய்து, தங்களை இங்கிருந்து அழைத்துச்செல்ல வேண்டும் என்கிறார் அவர்.

கேரளா, கர்நாடகாவிலிருந்து மேற்கு வங்கம், ஒதிஷா, உத்தரப்பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களுக்குச் செல்வதற்காக சென்னை வந்தவர்கள் மார்ச் 23ஆம் தேதியன்று சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து இல்லை என்பதையறிந்ததும் அதிர்ச்சியடைந்தனர்.

உண்மையில், மார்ச் 22ஆம் தேதி இரவிலிருந்தே இந்தத் தொழிலாளர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தேங்க ஆரம்பித்தனர். இதற்குப் பிறகு திங்கட்கிழமை மாலைவரை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வடமாநிலத்தினர் வந்தபடி இருந்தனர். தாங்கள் வேலைபார்த்த மாநிலங்களுக்கோ, சொந்த ஊருக்கோ செல்லமுடியாமல் தவித்த இவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த வளாகத்திலேயே அமர்ந்து சிலர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதற்குப் பிறகு, இவர்கள் நடைபாதைகளிலோ ரயில் நிலையத்திலேயோ தங்குவதைத் தவிர்க்க மாநகராட்சியும் தொழிலாளர் நலத்துறையும் அவர்கள் அனைவரையும் திரட்டி சென்னையில் உள்ள சமூக நலக்கூடங்களில் தங்க வைக்கத் துவங்கியது. கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இதுபோல சென்னை முழுவதும் உள்ள சமூகநலக்கூடங்களிலும் நகர்ப்புற வீடற்றவர்களுக்கான தங்குமிடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

இவர்களில் பலர் மனைவி குழந்தைகளுடனும் தங்கியுள்ளனர். மூன்று வேளை உணவும் சுகாதார வசதிகளும் இவர்களுக்குச் செய்துகொடுக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலானவர்கள் எப்படியாவது தங்களது ஊர்களுக்குத் திரும்பும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

"வீட்டில் இருப்பவர்களுக்கு போனில் சொல்லிவிட்டேன். இருந்தாலும் அவர்களும் இந்நேரம் கவலையில்தான் இருப்பார்கள். அதனால், ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிறகு ஒதிஷாவுக்கு சென்றுவிடுவேன்" என்கிறார் உதய் மல்லிக்.

சமூக நலக்கூடம்

இப்படி சமூகநலக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலானவர்கள், கேரளா, கர்நாடகா போன்ற வேறு மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு வழியாக தம் மாநிலங்களுக்குச் செல்ல முயன்றவர்கள்தான். தமிழ்நாட்டில் கட்டடப் பணி உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்த வடமாநிலத்தினர், பணிகள் நடக்கும் இடங்களிலேயே தங்கியுள்ளனர். இவர்களில் சிலர், சென்னையின் புறநகர்ப் பகுதியான கன்னனூர் போன்ற இடங்களில் தங்களுக்குத் தெரிந்தவர்கள் தங்கியுள்ள வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆகவே, இம்மாதிரி சமூகக் கூடங்களில் தமிழ்நாட்டிலேயே வேலைபார்க்கும் வட மாநிலத்தினரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது.

ஆனால், இம்மாதிரி சமூக நலக்கூடங்களில் தங்கியிருப்பவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் உண்டு. கேரளாவின் கோழிக்கோட்டில் எலக்ட்ரீசியனாக வேலைபார்க்கும் கார்த்திகேயனுக்குச் சொந்த ஊர் வேலூர். கொரோனா பரவ ஆரம்பித்த பிறகு, கோழிக்கோட்டில் வேலை இல்லாமல் போய்விட்டது. சொந்த ஊரில் உறவினர்கள் என யாரும் இல்லாத நிலையில் சென்னைக்கு வந்தவர், மாநகராட்சியின் சமூக நலக்கூடத்தில் தஞ்சமடைந்திருக்கிறார்.

Banner image reading 'more about coronavirus'

பணி நிமித்தமாக வேறு மாவட்டங்களில் இருந்துவந்தவர்கள்கூட, திடீரென பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுவிட சென்னையில் சிக்கி, இந்த முகாம்களை வந்தடைந்திருக்கின்றனர்.

இம்மாதிரி கூடங்களில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்கள் பலருக்கு, ஏதோ சிறையில் இருப்பதைப்போல இருக்கிறது. எப்போது ஊரங்கு முடியுமென துடித்துக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள், மனைவி ஆகியோருடன் தங்கியிருப்பவர்கள் நிலை இன்னும் சிக்கலானது. இப்படி அடைபட்டிருப்பதைக் குழந்தைகளால் புரிந்துகொள்ள முடியவில்லை.

குடும்பத்தினருடன் தொடர்புகொள்ள மொபைல்போன்கள் மட்டும்தான் இவர்களுக்கு இருக்கும் ஒரே வழி. ஆனால், பலரது மொபைல் போன்களில் அவர்கள் ரீ சார்ஜ் செய்துவைத்திருந்த பணம் கரைந்து வருகிறது.

தொழிலாளர்கள்

துவக்கத்தில் ஒரு சில சமூகநலக் கூடங்களிலேயே பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் அடைக்கப்பட்டிருந்தனர். பிறகு, இவர்களைப் பிரித்து வெவ்வேறு சமூகநலக்கூடங்களுக்கு அனுப்பியிருக்கிறது மாநகராட்சி.

"எல்லோரையுமே இங்கு வருவதற்கு முன்பாக காய்ச்சல், இருமல் இருக்கிறதா என்பதைப் பரிசோதித்திருக்கிறோம். தொடர்ந்தும் பரிசோதிக்கிறோம். ஒரே இடத்தில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் தள்ளியிருக்கும்படிதான் கூறுகிறோம். ஆனால், யாரும் கேட்பதில்லை" என்கிறார் அங்கிருக்கும் மாநகராட்சி அதிகாரி ஒருவர்.

இங்கிருக்கும் தொழிலாளர்கள் எல்லோரும் ஏப்ரல் 14ஆம் தேதியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். அதற்குப் பிறகும் ஊரடங்கு நீடிக்கப்படலாம் என உலா வந்த செய்திகள் அவர்களை அதிர வைத்திருக்கிறது. பிறகு அது வதந்தி என்பது தெரிந்து சற்று ஆறுதலடைந்திருக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: