கொரோனா வைரஸ்: தடுப்பு மருந்து எப்போது நடைமுறைக்கு வரும்? - விவரிக்கிறார் பவித்ரா வேங்கடகோபாலன்

Covid-19

பட மூலாதாரம், AFP

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

சர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட சமூக பரவல் (Limited Community transmission) என்ற நிலையை அடைந்துவிட்டது என்கிறார் கொரோனா வைரஸ் குறித்த முனைவர் பட்டம் பெற்றுள்ள பவித்ரா வேங்கடகோபாலன்.

கொரோனா வைரஸ் குடும்பம் குறித்து ஆய்வு செய்து, அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் பவித்ரா. சென்னையைச் சேர்ந்த பவித்ரா, கொரோனா வைரஸ் குறித்து உலகளவில் நடைபெறும் ஆராய்ச்சி தகவலைகளை கவனித்து வருபவர். பேட்டியிலிருந்து:

இந்தியாவில் 21 நாட்களில் கொரோனாவின் தாக்கம் குறைந்துவிடுமா?

வைரசின் தாக்கம் முழுமையாக குறைந்துவிடும் என கூறமுடியாது. ஆனால் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு இந்த 21 நாட்கள் நிச்சயம் உதவும் என்பது உண்மை. கொரோனா வைரஸை பொறுத்தவரை ஒரு நபரிடம் இருந்து குறைந்தது 2.2 நபர்களுக்கு பரவும். தடுப்பு மருந்துகள் தற்போதுவரை இல்லை. நோய் பரவலை கட்டுப்படுத்துவது மட்டும்தான் தற்போது சாத்தியம் என்பதால், பரவலை குறைக்க இந்த 21 நாட்கள் அவசியம்.

இதுவரை நமக்கு தெரிந்த பாதிக்கப்பட்டவர்களிடம் தென்படும் அறிகுறிகளைப் பார்த்தால், கொரோனா தொற்று வைரஸ் 14 நாட்கள் வரை ஒரு நபரின் உடலிலிருந்து மற்ற நபருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது.

பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு, அவர்கள் தொடர்பில் இருந்த 14 நாட்களுக்குப் பின்னர் தொற்று ஏற்படுவதற்கான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை.

அதனால்,முதல் 14 நாட்கள் தனித்திருப்பது முக்கியம். பாதுகாப்பு கருதி மேலும் ஒரு வாரம் தேவை என முடிவு செய்து, 21 நாட்கள் தனிமைப்படுத்தல் தேவை என அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் இதுபோன்ற தனிமைப்படுத்தல் என்பது பரவலை பெருமளவு குறைக்கும்.

பவித்ரா வேங்கடகோபாலன்

பட மூலாதாரம், PAvithra

படக்குறிப்பு, பவித்ரா வேங்கடகோபாலன்

கொரோனா வைரஸ் முதலில் மூச்சுக்குழாயை தாக்கும் என்பதால் சூப் குடிக்கவேண்டும், வெதுவெதுப்பான தண்ணீர், கசாயங்கள் குடிக்கவேண்டும் உள்ளிட்ட பல விதமான தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவுகின்றன. இது உண்மையா?

இதுவரை கோவிட்-19 தொற்றுக்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. புதிதாக இதுபோல நோய்கள் வரும்போது, கூடவே பலர் இந்த நேரத்தில் பணம் ஈட்டப் பார்ப்பார்கள். லாபம் பார்க்க இதுபோல பரிந்துரைகளைச் செய்வார்கள்.

சூடான சூப், குடிநீர், இஞ்சி டீ குடிப்பதால் நீங்கள் ஓய்வாக உணரலாம். உங்கள் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாக இருந்தால், நோய் தொற்றால் உங்களுக்கு பாதிப்பு இருக்காது.

இதுபோன்ற மருத்துவ முறைகள் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. கைகளைக் கழுவுங்கள், தனித்து இருங்கள், கூட்டமாகக் கூடாதீர்கள் என்பாதைத்தான் நாம் ஆதாரபூர்வமாக சொல்லமுடியும்.

இந்த வைரஸ் விலங்குகளிலிருந்து வந்தாலும், ஏன் விலங்குகளுக்கு அதிகம் பரவவில்லை?

வௌவால் மூலமாக கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த விலங்கு மூலமாக மனிதனுக்கு பரவியது என்று தற்போதுவரை உறுதியாகவில்லை. மனிதர்களுக்கு நோய்த் தொற்று உள்ளது என்பதை அவர்கள் உடல்நலக்குறைவால் கண்டறிகிறோம்.

கொரோனா வைரஸ்

வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு தொற்று வந்தால் தெரியவரும். ஆனால் பிற விலங்குகளுக்கு வந்தால், அவற்றை யாரும் கண்காணிப்பதில்லை என்பதால் நமக்கு தெரியவில்லை. ஒருவேளை விலங்குகளுக்கு தாக்கம் இருக்கலாம், இல்லாமலும் போகலாம்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிநாடு செல்லாதவர்கள், நோய்த் தொற்று ஏற்பட்டவர்களோடு தொடர்பில் இல்லாதவர்கள் பத்து நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்துள்ளது. இது எப்படி சாத்தியம்?

சீனா அல்லது நோய் தொற்று ஏற்பட்ட பிற நாடுகளில் இருந்து வந்தவர்கள், ஏற்கனவே நோய் தொற்று இருந்தவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரிடம் நோய் அறிகுறிகள் இருந்தன.

தற்போது இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்ட சமூக பரவல் (limited community transmission)தொடங்கிவிட்டது என்பதால், அதன் காரணமாக கூட கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம். வைரஸ் தொற்று இல்லாதவர்களிடம் தொடர்பில் இல்லை என்றாலும், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மூலமாகக் கூட பரவியிருக்கலாம்.

இந்த வைரஸ் தாக்கத்தின் இறப்பு விகிதம் என்ன?

கொரோனா பாதிக்கப்பட்ட 100 நபர்களில் 3.3 நபர்கள் மரணம் அடைவார்கள். அதாவது 97 சதவீதம் நபர்கள் குணமடைவார்கள். குறிப்பாக, சர்க்கரை நோய், ஆஸ்துமா உள்ளவர்களுக்கு கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

Banner image reading 'more about coronavirus'
Banner

70 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு இதுபோன்ற வியாதிகள் இருந்தால், ஏற்கனவே நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பதால், அவர்களுக்கு கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருக்கும்.

கொரோனாவின் வைரஸ் எளிதாக பரவும் என்பதால், இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும்,பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருப்பார்கள், தொடர் சிகிச்சை எல்லோருக்கும் அளிக்கப்படவேண்டும் என்பது ஒரு நாட்டுக்கு பெரும் சுமையாக அமைந்துவிடும்.

அதிக பாதிப்புக்கு ஆளானவர்களை வென்ட்டிலேட்டரில் (செயற்கை சுவாச கருவி) வைக்கவேண்டும். அதிக எண்ணிக்கையில் பாதிப்பு இருக்கும்போது, அனைவருக்கும் வென்டிலேட்டர்கள் கிடைப்பது கடினம் என்பதால், பரவலை குறைப்பதே சிறந்தது.

இந்தியா போன்ற நாட்டில் மூன்று சதவீதம் என்பது பெரிய எண்ணிக்கையாக இருக்கும். அதாவது 133 கோடி மக்களில் சுமார் மூன்று சதவீதம் பேர் என்பது பெரிய இழப்பாகிவிடும்.

கைகளை கழுவுவது முக்கியம் என்கிறார்கள். உடலில் மற்ற பாகங்களில் இந்த வைரஸ் தங்காதா?

கைகளால் நாம் நம் உடலை தொடுகிறோம். வீட்டில் உள்ள கதவு கைப்பிடி, வெளியிடங்களில் பிற நபர்களுக்கு கைகுலுக்குவது என கைகளால் பல செய்கைகளை செய்கிறோம் என்பதால் கைகளை தூய்மையாக வைத்திருக்கவேண்டும். நாம் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான விஷயம்- ஈரமான, ஈரப்பதமான இடத்தில் வைரஸ் தங்கியிருக்கும் என்பதால்,தூய்மையாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்கள்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

கொரோனா வைரஸ் சீனாவில் ஓர் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்ற தகவல் உண்மையா?

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடங்கியது என்பதுதான் உண்மை. ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா என்பதை சொல்ல எந்த ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை.

கொரோனா வைரஸ் பெயர் காரணம் என்ன?

கொரோனா வைரஸ் ஒன்றை மைக்கிரோஸ்கோப்பில் வைத்துபார்த்தால், ஒரு பந்துபோன்ற வடிவத்திற்கு கிரீடம் வைத்தது போல தெரியும். லத்தீன் மொழியில் கொரோனா என்றால் 'கிரீடம்' என்று பொருள். இந்த பெயர்தான் கொரோனா வைரசுக்கு வைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இந்த வைரஸ் தாக்கம் குறைந்துவிட்டது என்பதால் அங்கு மீண்டும் வராது என கூறமுடியுமா? உலகளவில் இந்த தாக்கம் எப்போது குறையும்?

சீனாவில் நோய் பரவல் குறைந்துவிட்டது. தற்போது அங்கு புதிதாக பாதிக்கப்பட்ட நபர்கள் அரிதாக இருக்கிறார்கள் என்பதால், அங்கு பரவல் கட்டுக்குள் வந்துவிட்டது. தற்போதும்கூட, சீனா முழுவதும் முக்கியமான நகரங்களின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. நோய் தாக்கம் இனி வராது என்று உறுதியாக கூறமுடியாது. உலகம் முழுவதும் பரவிவிட்டதால், இது எப்போது கட்டுக்குள் வரும் என்று சொல்லமுடியாது.

Banner image reading 'more about coronavirus'

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துள்ளதும், கொரோனா வைரஸ் தாகத்திற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டறிவதில் ஏன் இந்த தாமதம்?

அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி இருப்பதால்தான் நாம் தற்போது நோயை கண்டறிந்து, நோய் பரவலை கட்டுப்படுத்த முயற்சிகளை எடுக்கிறோம். இதுவரை ஏற்பட்ட நோய்த் தொற்றுகளைவிட கொரோனா தொற்றை கண்டறிவதில் ஓரளவு உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் அறிவியல் வளர்ச்சிதான்.

ஒரு நோய் தொற்றுக்குத் தடுப்பு மருந்து கண்டறிவது சுலபம் இல்லை. ஒரு வைரஸ் ஒரே மாதிரியான தாக்கத்தை பல நாடுகளில் ஏற்படுத்துகிறதா என்பதை உறுதிசெய்யவேண்டும். தடுப்பு மருந்தை உடனே தயாரித்து அளிக்கமுடியாது.

சோதனை செய்ய கால அவகாசம் தேவை. கொரோனாவுக்கு முன்னர் ஏற்பட்ட சார்ஸ் தொற்றுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நேரத்தில் அந்த கிருமி முழுமையாக குறைந்துவிட்டது. தடுப்பு மருந்து தயாரிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்கள். அதனால், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது என்பது செலவு பிடிக்கும் செயல் மட்டுமல்ல, எல்லா நேரத்திலும் இதனை பயன்படுத்த முடியுமா என சோதனை செய்யவேண்டும்.

கொரோனா விஷயத்தில் நாம் முன்கூட்டியே செயல்பட்டுள்ளோம் என்றுதான் சொல்லவேண்டும். நோய் பரவலை கட்டுப்படுத்திவிட்டால், பாதிப்பை குறைத்து நாம் வெற்றிபெறலாம்.

Coronavirus

பட மூலாதாரம், Getty Images

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: