கொரோனா வைரஸ் மற்றும் உடலுறவு: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 தகவல்கள்

Coronavirus and sex

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிக்கும் படம்
    • எழுதியவர், செலஸ்டினா ஒலுலோத்
    • பதவி, பிபிசி

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், பலரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான சமூக வாழ்க்கையில் தொடங்கி அந்தரங்க வாழ்க்கை வரை அனைத்திலும் கொரோனா அச்சம் பல்வேறு குழப்பங்களை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக கொரோனா தீவிரமாக உள்ள இந்த காலகட்டத்தில் உடலுறவு கொள்வது கூட கொரோனா பரவ காரணமாக மாறிவிடலாம் என்ற அச்சம் உள்ளது.

ஆனால் இது உண்மையா, பொய்யா என்பது குறித்து மருத்துவர் அலெக்ஸ் ஜார்ஜ் மற்றும் பாலுறவு செய்திகள் தொடர்பான பத்திரிக்கையாளரும் பிபிசி ரேடியோ 1 தொகுப்பாளருமான அலிக்ஸ் ஃபாக்ஸ் ஆகியோர் இணைந்து வழங்கிய விளக்கங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

1. கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் உடலுறவு கொள்வது பாதுகாப்பானதா?

டாக்டர் அலெக்ஸ் ஜார்ஜ்: உடலுறவு கொள்ளக் கூடிய இணையுடன், ஒரே வீட்டில் நீங்கள் வாழ்ந்து வந்தால், அது எந்த வகையிலும் உங்கள் அந்தரங்க வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

ஆனால் உங்கள் இருவரில் ஒருவருக்கு கொரோனா தொடர்பான அறிகுறிகள் தோன்றினால், நீங்கள் இருவரும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். வீட்டிற்குள்ளேயே உங்களை நீங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தற்போதைய சூழலில் உலகில் இருக்கும் அனைவரும், சொந்த வீடாக இருந்தால் கூட இரண்டு மீட்டர் இடைவெளி விட்டுத்தான் இருக்க வேண்டும். ஆனால் நிஜ வாழ்க்கையில் அது சாத்தியமா என்பது உறுதியாகக் கூற முடியாது.

அலின் ஃபாக்ஸ் மற்றும் அலெக்ஸ் ஜார்ஜ்

பட மூலாதாரம், PAUL COCHRANE/JESSIE WHEALEY

படக்குறிப்பு, அலிக்ஸ் ஃபாக்ஸ் (இடது) மற்றும் அலெக்ஸ் ஜார்ஜ்

2. புதிய நபர்களுடன் உடலுறவு கொள்வது பிரச்சனையை ஏற்படுத்துமா?

டாக்டர் அலெக்ஸ் ஜார்ஜ்: தற்போதைய சூழலில் புதிய இணையுடன் உடலுறவு கொள்வது பிரச்சனையை ஏற்படுத்தாது எனக் கூற முடியாது. ஏனெனில் அந்த புதிய துணைக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால், அவருடன் நெருக்கமாக இருக்கும்போது நீங்களும் அந்த வைரஸால் பாதிக்கப்படலாம்.

அலிக்ஸ் ஃபாக்ஸ்: எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாமல், இந்த வைரஸ் மனிதர்களின் உடலிற்குள் வாழும் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே சாதாரண முத்தம் கூட ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கொரோனா பரவ காரணமாக இருந்துவிடக்கூடும்.

3.நான் சமீபத்தில் முத்தமிட்ட ஒரு நபர், சில நாட்களுக்குப் பிறகு கொரோனா அறிகுறியுடன் காணப்படுகிறார்கள். இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

மருத்துவர் அலெக்ஸ்: நீங்கள் முத்தமிட்ட நபருக்கு, கொரோனா தொடர்பான அறிகுறிகள் தென்படத் தொடங்குகிறது என்றால், உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்கள் உடல் அறிகுறிகளைக் கவனித்துக் கொண்டே இருங்கள். ஒருவேளை கொரோனா தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால், மேலும் கவனமாக இருப்பது அவசியம். இந்த அறிகுறிகளின் தீவிரம் அதிகரிக்கும் பட்சத்தில் உடனடியாக சுகாதார அதிகாரிகளுக்கு உங்கள் நிலையை எடுத்துக் கூறுங்கள்.

அலிக்ஸ் ஃபாக்ஸ்: நாம் ஒவ்வொருவரும் நம்முடைய உறவு குறித்த பொறுப்புடையவர்கள். ஒருவேளை உங்களுக்கு கொரோனா குறித்த அறிகுறிகள் தெரியவரும் போது, சமீபத்தில் உங்களுடன் நெருக்கமான இருப்பவர்களுக்கு அது குறித்துத் தெரியப்படுத்த வேண்டியது உங்களது கடமை.

நீங்கள் நெருக்கமாக இருந்த நபருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்து, உங்களுக்கு அந்த அறிகுறிகள் இல்லாவிட்டாலும், உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம்.

Banner image reading 'more about coronavirus'
Banner

4.கொரோனா வைரஸ் தீவிரமாவதற்கு முன்பு வரை நான் ஆணுறைகள் பயன்படுத்தியதில்லை. அதையே நான் தொடரலாமா?

அலிக்ஸ் ஃபாக்ஸ்: நீங்கள் ஏன் ஆணுறைகளை பயன்படுத்துவதில்லை என்பதை பொறுத்தே இதற்கு பதிலளிக்க முடியும். உங்களுக்கு உடலுறவு மூலம் பரவக்கூடிய நோய் ஏதும் இல்லை, அல்லது திட்டமிடப்படாத கர்ப்பத்தை தடுக்க வேறு வழியை பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால் நீங்கள் ஆணுறை உபயோகிக்காமல் இருப்பது பிரச்சனை இல்லை.

ஆனால் மேலே சொன்னவை அதற்கான காரணம் இல்லை என்றால், நீங்கள் உடலுறவு மூலம் பரவும் தொற்று நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். எனவே ஆணுறை பயன்படுத்துவது எப்போதுமே சிறந்தது.

5. நான் மற்றொருவரின் அந்தரங்க உறுப்புகளை தொடுவதால் எனக்கு கொரோனா வைரஸ் பரவுமா?

மருத்துவர் அலெக்ஸ்: கொரோனா வைரஸ் ஒருவரின் எச்சிலில் இருந்து கூட பரவலாம். எனவே உங்கள் வாயிலிருந்து உங்கள் கைகளுக்கும், உங்கள் கைகளிலிருந்து உங்கள் துணையின் அந்தரங்க உறுப்பிற்கும் இந்த வைரஸ் பரவ அதிகம் வாய்ப்பிருக்கிறது.

முடிந்த அளவுக்கு இதை தவிர்க்கப் பாருங்கள். முக்கியமாக உங்கள் இணை, உங்களுடன் ஒரே வீட்டில் வாழ்பவர் இல்லை என்றால் இன்னும் கவனமாக இருப்பது அவசியம்.

6. இந்த காலகட்டத்தில் என்னுடைய அந்தரங்க வாழ்க்கையை எப்படி நான் கையாள வேண்டும்?

Banner image reading 'more about coronavirus'

அலிக்ஸ் ஃபாக்ஸ்: நல்ல அந்தரங்க வாழ்க்கை என்றால் என்ன, மகிழ்ச்சியான அந்தரங்க வாழ்க்கைக்கு என்ன தேவை என்பது குறித்து தெளிவாக யோசிக்க இந்த உலகளாவிய தொற்றுக் காலம் பலருக்கும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.

தங்கள் துணைகளுக்கு காமம் கலந்த கதைகளை சிலர் எழுதி அனுப்பவதாக நான் கேள்விப்பட்டேன். நீங்கள் உங்கள் கற்பனையை பயன்படுத்தினால், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் கூட உங்கள் அந்தரங்கமான நேரத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்.

7. எனக்கு ஹெச்.ஐ.வி இருந்தால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறதா?

அலிக்ஸ் பாக்ஸ்: ஹெச்.ஐ.வி தொற்றுக்காக நீங்கள் மருந்து உட்கொள்பவர் என்றால், உங்களின் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை தேவையான அளவு இருந்தால், உங்கள் ரத்தத்தில் உள்ள ஹெச்.ஐ.வி வைரஸின் அளவை கண்டறிய முடியாத நிலை இருந்தால், உங்களுடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனமானதாக கருத முடியாது என மருத்துவர் மைக்கேல் ப்ராடி கூறுகிறார்.

எனவே உங்களுக்கு வழக்கத்திற்கு மாறாக கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்புகள் இல்லை. உங்களுக்கு ஹெச்.ஐ.வி இருந்தால், எப்போதும் போல மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களைப் போல சமூக இடைவெளி மற்றும் சுய தனிமைப்படுத்துதலை பின்பற்றுகிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: