ஊபர் ஈட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது சொமேட்டோ

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் முக்கிய உணவு விநியோக நிறுவனமான ஊபர் ஈட்ஸை சக போட்டி நிறுவனமான சொமேட்டோ வாங்கியுள்ளது.
இதனால் ஊபர் ஈட்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு, இனி சொமெட்டோ சேவை அளிக்கும். ஆனால் இந்த முடிவு காரணமாக ஊபர் ஈட்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வேலையிழப்பு ஏற்படுமா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
இந்த ஒப்பந்தம், வேகமாக வளர்ந்து வரும் ஸ்விகி நிறுவனத்துடன் வீரியத்துடன் போட்டியிட சொமேட்டோ நிறுவனத்துக்கு வாய்ப்பாக அமையும்.
இந்தியாவில் 500-க்கும் மேற்பட்ட நகரங்களில் சொமேட்டோ சேவையை வழங்கி வருகிறது. ஊபர் ஈட்ஸ் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் மேலும் தனது சேவையை இந்தியாவில் விரிவுபடுத்த முடியும் என சொமேட்டோ நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
``இந்தியா முழுவதும் உணவு விநியோக வணிகத்தில் முன்னணியில் இருப்பதை பெருமையாக உணர்கிறோம். இந்த கையகப்படுத்தல் நடவடிக்கை இந்த துறையில் எங்கள் இருப்பை மேலும் வலிமையாக்கும்'' என சொமேட்டோ நிறுவனத்தின் நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.
சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஊபர் ஈட்ஸ் நிறுவனம் இந்தியாவில் 2017 -ஆம் ஆண்டு அறிமுகமானது. ஆனால் சொமேட்டோ மற்றும் ஸ்விகி ஆகிய நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல் அந்நிறுவனம் திணறி வந்தது.
இந்திய சந்தையில் முதலீடு செய்ய எப்போதும்போல தொடர்ந்து முன்னுரிமை கொடுப்போம் என ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
``ஊபர் நிறுவனத்துக்கு இந்தியா தொடர்ந்து முக்கிய சந்தையாக திகழ்ந்து வருகிறது. ஏற்கனவே உள்ளூர் டாக்சி சேவையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் நாங்கள் தொடர்ந்து எங்களுடைய முதலீடுகளை தொடருவோம்,`` என ஊபர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தாரா கோஸ்ரோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த புதிய நகர்வு ஸ்விகி மற்றும் சொமோட்டோ நிறுவனத்துக்கு இடையிலான போட்டியை மேலும் தீவிரப்படுத்தும் என கூறப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













