சீனாவின் புது வைரஸ் பெய்ஜிங், ஷாங்காய் நகரங்களுக்கு பரவியது: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 மடங்கானது

பட மூலாதாரம், Getty Images
சீனாவில் பரவிவரும் புது வகை வைரஸ் நோய் வுஹான் மாகாணத்தில் இருந்து, தற்போது தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய், ஷென்சென் ஆகிய மாநகரங்களிலும் மக்களுக்குத் தொற்றியுள்ளது. இதனால் நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை கடந்த வார இறுதியில் மும்மடங்காக அதிகரித்துள்ளது.
தற்போது சுமார் 200 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் வுஹான் மாநிலத்தில் இருப்பவர்கள் என்றபோதும், நோயின் முக்கிய அறிகுறியான சுவாசப் பிரச்சனையுடன் பெய்ஜிங் போன்ற நகரங்களிலும் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
மூன்று பேர் இறந்துள்ளனர். ஜப்பான், தாய்லாந்து, தென்கொரியா ஆகிய நாடுகளிலும் இந்த நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நிலவின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக பயணங்கள் மேற்கொள்ள சீனர்கள் தயாராகி வரும் நிலையில் இந்த நோய்த் தொற்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரசின் புதிய வகை என்று அடையாளம் காணப்பட்டுள்ள இந்த வைரஸ் தொற்றிய நோயாளிகளை டிசம்பர் மாதம் சுகாதாரத் துறை அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.
இந்த நோய்த் தொற்று வைரல் நிமோனியா கொள்ளை நோயாகப் பரவ வகை செய்துள்ளதாகவும், ஆனால், இந்த நோய் பற்றி அதிகம் விவரங்கள் தெரியவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஏதோ ஒரு சந்தையில் இருந்து இந்த வைரஸ் பரவியதாக நம்பப்படுகிறது என்றாலும், அது எப்படிப் பரவுகிறது என்பதை விஞ்ஞானிகளாலும், அதிகாரிகளாலும் தீர்மானிக்க முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த சார்ஸ் வைரஸ் 2000வது ஆண்டுகளில் டஜன் கணக்கான நாடுகளில், குறிப்பாக ஆசிய நாடுகளில் பரவி 774 உயிர்களை பறித்த நிகழ்வை இந்த வைரஸ் பரவல் நினைவூட்டுகிறது.
இந்த புதிய வைரசின் மரபியல் குறியீடுகளை ஆராய்ந்து பார்த்ததில், வேறெந்த மனித கொரோனா வைரசை விடவும் இது சார்ஸ் வைரசுடன்தான் நெருக்கமாக பொருந்திப் போவதாகத் தெரியவருகிறது.
அதிகாரபூர்வமாக குறிப்பிடுவதை விட இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று பிரிட்டனில் உள்ள வல்லுநர்கள் கூறுகின்றனர். அத்தகைய மதிப்பீடுகளின்படி 1,700 பேர் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













