பாலியல் ஆசைக்காக பெண்களுக்கு மின்சாரம் பாய்ச்சிய போலி மருத்துவர் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
ஜெர்மனியில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மின்சாரம் செலுத்த மருத்துவராக நடித்த நபருக்கு 11 வருட சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டேவிட் ஜி என்று பெயர் வெளியிடப்பட்டுள்ள அந்த 30 வயது நபர், அவர் தனது பாலியல் ஆசைக்காக போலியான வலி நிவாரண சோதனைகளில் பெண்கள் ஈடுபட பணம் வழங்கியதாகவும் விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கொலை செய்ய முயன்றதாக 13 வழக்குகள் டேவிட் ஜி மீது தொடுக்கப்பட்டுள்ளது.
ஐ.டி துறையில் பணிபுரியும், ஜெர்மனியின் விர்ச்புக் நகரை சேர்ந்த அந்த நபர், இணையத்தில் தனது போலியான மருத்துவ ஆய்வுக்கு பெண்களை தேடும்போது, மருத்துவர் போல் நடித்துள்ளார்.
இவரால் பாதிக்கப்பட்டவர்களில் 13 வயது சிறுமியும் ஒருவர்.

சீனாவின் புது வைரஸ் பெய்ஜிங், ஷாங்காய் நகரங்களுக்கு பரவியது

பட மூலாதாரம், Getty Images
சீனாவில் பரவிவரும் புது வகை வைரஸ் நோய் வுஹான் மாகாணத்தில் இருந்து, தற்போது தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய், ஷென்சென் ஆகிய மாநகரங்களிலும் மக்களுக்குத் தொற்றியுள்ளது. இதனால் நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை கடந்த வார இறுதியில் மும்மடங்காக அதிகரித்துள்ளது.
தற்போது சுமார் 200 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் வுஹான் மாநிலத்தில் இருப்பவர்கள் என்றபோதும், நோயின் முக்கிய அறிகுறியான சுவாசப் பிரச்சனையுடன் பெய்ஜிங் போன்ற நகரங்களிலும் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
மூன்று பேர் இறந்துள்ளனர். ஜப்பான், தாய்லாந்து, தென்கொரியா ஆகிய நாடுகளிலும் இந்த நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

காணாமல் போன சிறுமிக்காக தீபாவளி, பொங்கலை புறக்கணித்து காத்திருக்கும் கிராமம்

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள குமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி தொலைந்துபோய் மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் மீட்கப்படாததால் கிராமவாசிகள் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை கொண்டாடாமல் சிறுமிக்காக காத்திருக்கின்றனர்.
குமாரபாளையம் பகுதியில் சுமார் 350க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் தறி ஓட்டியும், தினக்கூலிகளாகவும் பணிபுரிந்து, ஓட்டு வீடுகள் மற்றும் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் வசித்துவரும் ஜெயக்குமார் மற்றும் கவிதா தம்பதியின் மகள் சாமினி, சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருக்கையில் காணாமல் போய்விட்டார்.
விரிவாக படிக்க:காணாமல் போன சிறுமிக்காக காத்திருக்கும் கிராமம்

ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள்: அமைச்சரவை ஒப்புதல்

பட மூலாதாரம், FB / ANDHRAPRADESHCM
ஆந்திரப்பிரதேசத்தில் மூன்று தலைநகரங்களை உருவாக்க வகை செய்யும் மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்நிலையில், விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகராகவும், அமராவதியை சட்டப்பேரவை இடம் பெறும் தலைநகராகவும், கர்னூலை நீதித்துறையின் தலைநகராகவும் மாற்ற வழிவகை செய்யும் மசோதாவை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
'அனைத்து பிராந்தியங்களின் பரவலாக்கம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி மசோதா 2020' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா, ஆந்திரப்பிரதேச மாநிலத்தை பல்வேறு கோட்டங்களாகப் பிரிப்பதற்கும், கோட்ட அளவிலான திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு வாரியங்களை நிறுவுவதற்கும் வழிவகை செய்கிறது.
இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ள ஆந்திரப்பிரதேச சட்டப்பேரவையின் நீட்டிக்கப்பட்ட கூட்டத்தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.

"ஹைட்ரோகார்பன் ஆய்வு விதி மாற்றம் பற்றி மாநில அரசிடம் ஆலோசிக்கவில்லை"

பட மூலாதாரம், Getty Images
ஹைட்ரோகார்பன் ஆய்வுகளுக்கான விதிகளை மாற்றம் செய்யும்போது மாநில அரசைக் கலந்தாலோசிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, ஆய்வு விதிகளை முன்பிருந்தபடியே நீடிக்கச் செய்ய வேண்டுமென பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹைட்ரோகார்பன்கள் தொடர்பான ஆய்வுகளுக்கு எவ்வித சூழல் சார்ந்த அனுமதியும் பெற வேண்டிய அவசியத்தை நீக்கும் வகையில், அவற்றை 'ஏ' பிரிவிலிருந்து 'பி2' பிரிவுக்கு மாற்றி மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால், ஆய்வுக் கிணறுகளுக்கு சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையோ, மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டமோ நடத்த வேண்டிய அவசியம் இல்லை. மாநில அரசின் அனுமதியே போதுமானது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













