"ஹைட்ரோ கார்பன் ஆய்வு விதி மாற்றம் பற்றி மாநில அரசிடம் ஆலோசிக்கவில்லை" - முதல்வர் பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எடப்பாடி பழனிசாமி

ஹைட்ரோ கார்பன் ஆய்வுகளுக்கான விதிகளை மாற்றம் செய்யும்போது மாநில அரசைக் கலந்தாலோசிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, ஆய்வு விதிகளை முன்பிருந்தபடியே நீடிக்கச் செய்ய வேண்டுமென பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன்கள் தொடர்பான ஆய்வுகளுக்கு எவ்வித சூழல் சார்ந்த அனுமதியும் பெற வேண்டிய அவசியத்தை நீக்கும் வகையில், அவற்றை 'ஏ' பிரிவிலிருந்து 'பி2' பிரிவுக்கு மாற்றி மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால், ஆய்வுக் கிணறுகளுக்கு சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையோ, மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டமோ நடத்த வேண்டிய அவசியம் இல்லை. மாநில அரசின் அனுமதியே போதுமானது.

தமிழ்நாட்டின் காவிரி வடிநிலப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அதிகம் செயல்படுத்தப்பட்டுவரும் நிலையில், அங்கு இந்த அறிவிப்பு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இதற்குக் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

News image

அந்தக் கடிதத்தில், இந்த விதிமுறை மாற்றத்தைச் சுட்டிக்காட்டியிருக்கும் முதலமைச்சர், "இது போன்ற ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு டெல்டா பகுதியில் கடுமையான எதிர்ப்பு இருப்பது குறித்து 2017 பிப்ரவரி 27ஆம் தேதி எழுதிய கடிதத்திலேயே கூறியிருந்தேன். ஹைட்ரோ கார்பன் ஆய்வு செய்வதற்கோ, எடுப்பதற்கோ தமிழ்நாட்டில் விவசாயிகளிடமிருந்தும் செயல்பாட்டாளர்களிடமிருந்தும் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இம்மாதிரியான திட்டங்கள் பெரும்பாலும் காவிரி டெல்டா மாவட்டங்களிலேயே அமைகின்றன. இவை, சூழல் ரீதியாக எளிதில் பாதிப்படையக்கூடிய பகுதிகள். மாநிலத்தின் நெற்களஞ்சியமாகவும் விளங்கும் வளமான பகுதிகளும்கூட. அதனால், இந்தத் திட்டங்களுக்கு உணர்வு ரீதியாக, தீவிர எதிர்ப்பு எழுகிறது" எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், "ஆகவே இம்மாதிரியான திட்டங்களைச் செயல்படுத்தும்போது மக்களையும் சம்பந்தப்பட்டவர்களையும் கலந்தாலோசித்து, அவர்களது ஒத்துழைப்பைப் பெற வேண்டியது அவசியமாகிறது. ஆனால், சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவிக்கை இதற்கு எதிராக இருக்கிறது. மேலும் ஜனவரி 16ஆம் தேதியிட்ட இந்த அறிவிக்கையை வெளியிடும் முன்பாக, வரைவு அறிக்கை ஏதும் சுற்றுக்கு விடவில்லை. சம்பந்தப்பட்டவர்களும் மாநில அரசும் இது தொடர்பாக தங்கள் கருத்தை அளிக்க வாய்ப்பளிக்கப்படவில்லை" என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார் முதலமைச்சர் பழனிச்சாமி.

காவிரி டெல்டா பகுதி, சூழலியல் ரீதியாக எளிதில் பாதிப்படையக்கூடிய பகுதி என்பதால் இந்தப் பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ளும்போது முந்தைய நிலையே நீடிக்கும் வகையில், அதாவது எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான சோதனைகளுக்கும் அவற்றைத் துரப்பணம் செய்வதற்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையையும் மக்களின் கருத்துக் கேட்பையும் கட்டாயமாக்கும் வகையில் விதிகளைத் திருத்த வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: