மலேசிய பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா தடை: பிற நாடுகளுக்கு விற்பது சாத்தியமா?

பட மூலாதாரம், Getty Images
இந்திய அரசால் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது பற்றியும், குடியுரிமை திருத்த சட்டத்தில் அண்டை நாடுகளின் இஸ்லாமியர்கள் சேர்த்துக்கொள்ளப்படாதது பற்றியும் மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் வெளியிட்ட கருத்துகளைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையில், மலேசியாவின் பாமாயில் உற்பத்தித் துறை எதிர்பாராத விதமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
காஷ்மீரில் இந்தியா "அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளது'' என்று மகாதீர் கூறியதை அடுத்து கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவு பாதிக்கப்பட்டுள்ளது.
அப்போது அவருடைய கருத்து இந்திய அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. காஷ்மீர் விஷயத்தில் ''ஒற்றுமையைக் காட்டும் வகையில்'' மலேசிய பாமாயில் வாங்குவதை தவிர்க்குமாறு, இந்தியாவில் எண்ணெய் வணிகர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அது ''வர்த்தகப் போரை உருவாக்கும் செயல்'' என்று மகாதீர் கூறினார்.
முஸ்லிம்களுக்கு எதிரானதாக உள்ளது என கூறப்படும் இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, முஸ்லிம் பெரும்பான்மையாக உள்ள மலேசியாவின் பிரதமர் கூறிய கருத்து இந்தியாவுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.
மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதியை ஜனவரி மாதத்தின் ஆரம்பத்தில் குறைத்துக் கொண்டதன் மூலம் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. அதிகாரப்பூர்வமாக தடை ஏதும் இல்லை என்றாலும், இறக்குமதி குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு தவறு நடக்கும்போது, அது குறித்து பேசியாக வேண்டிய அவசியம் உள்ளது என்று மகாதீர் கூறியுள்ளார். ஆனால், இந்தியாவின் நடவடிக்கையை பார்த்து அச்சம் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
மலேசியாவின் வேளாண் ஏற்றுமதியில் பாமாயில் முக்கிய இடம் வகிக்கிறது. சமையல் எண்ணெய் முதல், உயிரி எரிபொருள், உடனடி நூடுல்ஸ், பிசா தயாரிப்பு மற்றும் லிப்ஸ்டிக் தயாரிப்பு என பல வகைகளில் பாமாயில் பயன்படுத்தப் படுகிறது.
பாமாயிலின் முக்கியத்துவம்
உலகில் அதிக அளவில் உணவு எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா ஆண்டுக்கு 90 லட்சம் டன் அளவுக்கு பாமாயில் இறக்குமதி செய்கிறது. அதில் பெரும்பகுதி இந்தோனீசியா மற்றும் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
2019ஆம் ஆண்டில் மலேசியாவிடம் இருந்து பாமாயில் அதிகமாக வாங்கிய நாடு இந்தியாதான். அந்த ஆண்டில் 44 லட்சம் டன் பாமாயிலை மலேசியாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது என்று மலேசியாவின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருந்தபோதிலும், காஷ்மீர் பற்றி மகாதீர் தெரிவித்த கருத்தை அடுத்து, எஸ்.ஈ.ஏ.ஐ. அமைப்பின் உறுப்பினர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலேசியாவிடம் இருந்து இந்தோனீசியாவுக்கு வர்த்தகத்தை மாற்றிக் கொண்டார்கள் என அதன் நிர்வாக இயக்குநர் பி.வி. மேத்தா தெரிவித்துள்ளார்.
"இந்தியா - மலேசியா இடையில் உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில் கட்டணம் மற்றும் கட்டணமில்லா பட்டியல் என்ற வகையில் இந்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்கலாம் என்று நாங்கள் உணர்ந்தோம். இந்த மோதலில் நாங்கள் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை'' என்று அவர் பிபிசி மானிட்டரிங் பிரிவிடம் தெரிவித்தார்.
இறக்குமதி வரி உயர்வு போன்ற வேறு காரணங்கள் இருந்தாலும், சமீபத்திய வர்த்தக விவரங்கள் இதைத்தான் காட்டுகின்றன.
மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கான பாமாயில் ஏற்றுமதி 2019 செப்டம்பரில் 310,648 டன்கள் அளவில் இருந்து, டிசம்பர் மாதத்தில் 138,647 டன்கள் என்ற அளவுக்குக் குறைந்துவிட்டது.
ஏற்றுமதி ஏன் குறைந்தது?
"ஜம்மு காஷ்மீர் பற்றி ஐ.நா. தீர்மானம் உள்ள நிலையிலும், அது ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது'' என்று ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் கடந்த செப்டம்பரில் மகாதீர் பேசினார்.
இரு நாடுகளுக்கும் இடையில் "உறவுகள் மோசமாகியுள்ளதால்'' மலேசியாவிடம் இருந்து பாமாயில் வாங்குவதைத் தவிர்க்குமாறு தனது 875 உறுப்பினர்களுக்கும் எஸ்.இ.ஏ.ஐ. வர்த்தக அமைப்பு அறிவுறுத்தியது.
அதைத் தொடர்ந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி டிசம்பர் மாதம் மகாதீர் வருத்தம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
"மதச்சார்பற்ற நாடு என கூறிக்கொள்ளும் இந்தியா, இப்போது சில முஸ்லிம்களுக்கு குடியுரிமையை மறுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்திருப்பது பற்றி நான் வருத்தம் கொள்கிறேன். இந்தச் சட்டத்தால் ஏற்கெனவே மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த சுமார் 70 ஆண்டுகளாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இப்போது இந்தச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன,'' என்று அவர் கூறியதாக தி ஸ்டார் பத்திரிகை டிசம்பர் 20 ஆம் தேதி செய்தி வெளியிட்டது.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மகாதீர் கூறிய கருத்துகள் "உண்மையான விஷயங்களின் அடிப்படையிலானது அல்ல'' என்று இந்தியா கூறியது. தங்கள் "உள்நாட்டு விவகாரங்களில்'' தலையிட வேண்டாம் என்று இந்தியா கேட்டுக் கொண்டது.
பாமாயில் மற்றும் பாமோலின் இறக்குமதியை கட்டுப்பாடற்ற இறக்குமதி செய்யும் பொருட்களின் பட்டியலில் இருந்து வரி விதிப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் இறக்குமதி செய்யும் பொருட்களின் பட்டியலுக்கு ஜனவரி ஆரம்பத்தில் இந்தியா மாற்றியது.
இது எந்தவொரு நாட்டையும் குறிவைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளார். ஆனால், "எந்த இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு வர்த்தக உறவின் அடிப்படையில் அமையும்'' என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த மாற்றம் காரணமாக, மலேசியா பாமாயிலை வாங்க வேண்டாம் என்று வர்த்தகர்களுக்கு "அதிகாரப்பூர்வமற்ற முறையில்'' இந்திய அரசு கூறியுள்ளது என்று, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் அடுத்தகட்டமாக மலேசியாவில் இருந்து மைக்ரோ புராசசர்ஸ்கள் இறக்குமதிக்கும் இந்தியா கட்டுப்பாடு விதிக்கலாம் என்று, பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஜனவரி 15ஆம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் பதிலடியா?
இது ஒரு வகையில் பொருளாதார ரீதியாக இந்தியா தரும் பதிலடி நடவடிக்கையாக உள்ளது என்றும், வழக்கமாக சீனா இதுபோல நடந்து கொள்ளும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
"உணர்வைத் தூண்டும் வகையிலான மகாதீரின் கருத்துகள் குறித்து இந்தியா பொறுமை இழந்து வருகிறது'' என்று ஜனவரி 9ஆம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் செய்தி வெளியானது.

பட மூலாதாரம், Getty Images
கோலாலம்பூரில் முஸ்லிம் நாடுகளின் உச்சி மாநாட்டை மலேசியா நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியா தனது "பொறுத்திருக்கும் தன்மையை கைவிட்டு விட்டது போல தெரிகிறது'' என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
"இந்தியாவின் பொருளாதார ஆதிக்கம் வளர்ந்து வரும் நிலையில், தனது நலன்களுக்கு உகந்த வகையில் செயல்படாத நாடுகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை தனக்கான பாணியில் புதுடெல்லி உருவாக்கி வருகிறது,'' என்று மின்ட் நிதி பத்திரிகையின் வெளிநாட்டு விவகாரப் பிரிவு ஆசிரியர் எலிசபெத் ரோச்சே ஜனவரி 15 ஆம் தேதி எழுதியுள்ளார்.
இந்துஸ்தான் என்ற இந்தி பத்திரிகையில் ஜனவரி 16ஆம் தேதி கட்டுரை எழுதியுள்ள முன்னாள் தூதர் விவேக் கட்ஜு, இந்தியாவின் ``உள்நாட்டு விவகாரங்களில்'' மகாதீர் தலையிட்டதன் மூலம், சர்வதேச உறவுகளின் முதலாவது அடிப்படையை மறந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கை ``மகாதீரின் செயல்பாடுகள் பற்றி அதிருப்தியை வெளிப்படுத்தும்'' இந்தியாவின் பாணியாக உள்ளது என்று ஜனவரி 15 ஆம் தேதி மின்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் முன்னாள் வெளியுறவு அமைச்சக அதிகாரி கன்வல் சிபல் கூறியுள்ளார். இந்தியாவின் ``முக்கியமான தேச நலன்களுக்கு'' எதிராக மகாதீரின் கருத்துகள் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
மலேசியாவின் எதிர்வினை என்ன?
மலேசியாவில் பல லட்சம் விவசாயிகள் பாமாயில் ஏற்றுமதியை நம்பித்தான் உள்ளனர். தனது கருத்துகளில் உறுதியாக இருக்கும் மகாதீர், இதற்கு "தீர்வு காண்பதற்கான'' அவசியம் உள்ளதாக பேசியுள்ளார்.
"நாங்கள் இது குறித்து கவலை கொண்டிருக்கிறோம். ஏனெனில் இந்தியாவுக்கு நாங்கள் நிறைய பாமாயில் விற்கிறோம். ஆனால், ஒரு விஷயம் தவறாகப் போகும் போது நாம் வெளிப்படையாக அதை சுட்டிக்காட்ட வேண்டும். பணத்தைப் பற்றி மட்டும் கருத்தில் கொண்டு, அவை தவறாகப் போக அனுமதித்தால், நிறைய விஷயங்கள் தவறாகப் போய்விடும்'' என்று மகாதீர் கூறியதாக ஜனவரி 14ஆம் தேதி கோலாலம்பூரை சேர்ந்த மலாய் மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விஷயத்துக்கு ராஜீய அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்று மலேசிய வர்த்தக சபை வலியுறுத்தியுள்ளது.
இதில் தொடர்புடைய துறையினருடன், தூதரக வழிமுறைகளில் இந்தியாவுடன் மேற்கொண்டு தொடர்பு கொள்வது முக்கியமானதாக உள்ளது என்று முதன்மை தொழில் துறை அமைச்சர் தெரசா கோக் ஜனவரி 16ஆம் தேதி கூறியுள்ளார்.
மற்ற நாடுகளுக்கு அதிக அளவில் பாமாயில் விற்க மலேசியா முயற்சி செய்து வருகிறது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இந்தியாவுக்கு மாற்றாக அப்படி செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













