TNPSC குரூப் 4 தேர்வு: முறைகேடு புகாரால் சோர்வடையும் தேர்வர்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் மற்றும் தட்டச்சு பணியாளர் வேலைகளுக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, அதுபற்றி ஆணையம் விசாரணை செய்துவரும் நிலையில், இந்த தேர்வை எழுதியவர்கள் பலரும் நம்பிக்கை இழந்துள்ளதாக கூறுகின்றனர்.
9,398 பணியிடங்களுக்கு செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர். இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் வெளியானபோது, ராமநாதபுரத்தில் இரண்டு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் பெருமளவில் தேர்வாகியுள்ளனர் என்பது தெரியவந்தது.
ஒரு மாவட்டத்தில், அதிலும் குறிப்பாக இரண்டு மையங்களில் உள்ளவர்கள் முதல் 100 இடங்களைப் பிடித்தது குறித்து புகார்கள் குவிந்தன. இதனை அடுத்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்த தேர்வை ரத்து செய்வதா அல்லது தேர்வானவர்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதா என ஆலோசனை செய்துவருகின்றது.
குரூப் 4 தேர்வை நம்பிக்கையுடன் எழுதிய பல தேர்வர்களும் இப்போது வேதனையுடன் இருப்பதாக கூறுகின்றனர். பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அன்பரசி இந்த தேர்வில் வெற்றி பெற்றுவிடுவோம் என நம்பிக்கையுடன் இருந்ததாக கூறுகிறார். ''எனக்கு 37 வயதாகிறது. ஐந்து ஆண்டுகளாக பல்வேறு தேர்வுகளை எழுதிவருகிறேன். ஒப்பந்த ஊழியராக ஒரு கல்லூரியில் வேலைசெய்கிறேன். இந்த குரூப் 4 தேர்வு நல்ல வாய்ப்பை எனக்கு தரும் என காத்திருந்தேன். தேர்வு கடினமானதாக இல்லை என்பதால் நிச்சயம் வேலை கிடைத்துவிடும் என நினைத்தேன்,''என வருத்தத்துடன் பேசுகிறார் அன்பரசி.

பட மூலாதாரம், Getty Images
இன்னும் மூன்று ஆண்டுகளுக்கும் அரசு வேலைக்காக தேர்வாகவிட்டால், தனியார் வேலையை நம்பிதான் இருக்கவேண்டும் என்ற நிலை இருப்பதால், அரசு தேர்வுகள் ஒவ்வொன்றுக்கும் அக்கறையுடன் தயாராகிறார் அன்பரசி. ''நான் எம்.காம். முடித்துள்ளேன். தனியார் நிறுவனங்களில் உள்ள வேளைகளில் சம்பள உயர்வு மிகவும் குறைவு. படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பது சிரமமாக இருப்பதால், கணினி உதவியாளராக வேலை பார்க்கிறேன். அரசு நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பது எங்களைப் போன்றவர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது,''என்கிறார் அன்பரசி.
திருப்பூர் மாவட்டத்தில் ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பி.ஈ. பட்டதாரி கௌதமன். குரூப் 4 தேர்வில் காலி பணியிடங்கள் அதிக அளவில் இருந்ததால், வேலை கிடைப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் என நம்பியதாக கூறுகிறார்.
''அரசு தேர்வுகளில் இதுபோன்ற முறைகேடுகள் நடந்தால், தேர்வு எழுதுபவர்களுக்கு சோர்வு ஏற்படும். வேலை கிடைக்கவில்லை என்பதால், ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு, அரசு தேர்வுக்கு படிப்பதில் முழுகவனம் செலுத்துகிறேன். திறமைக்கு பதிலாக இதுபோன்ற முறைகேடுகளில் போட்டியாளர்கள் தேர்வானால், முயற்சி செய்து படித்தால் அரசு வேலை கிடைக்கும் என்ற எண்ணம் அற்றுப்போகும்,''என்கிறார் கௌதமன்.

மற்றொரு தேர்வரான லாவண்யாவுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே அரசு தேர்வுகளை எழுத வாய்ப்புள்ளதால் குரூப் 4 தேர்வில் முறைகேடு இருப்பதாக வெளியான தகவல் அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
''குரூப் 4 தேர்வில் தமிழ் இலக்கணம், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஆப்டிடியூட் கேள்விகள் என பலவிதமான படங்களை படித்து தேர்வு எழுதுகிறோம். முறைகேடு நடந்துவிட்டது என எளிமையாக தேர்வை ரத்து செய்வது அல்லது வேறு தேர்வு நடத்துகிறோம் என சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது. என்னைப் போல வேலைக்கு செல்லும் பெண்ணாக இருப்பவர்கள், வீட்டு வேலைகள், எங்களுக்கான கடமைகளுக்கு மத்தியில் கடினமாக முயற்சி செய்து தேர்வு எழுதுகிறோம். இதுபோன்ற முறைகேடுகள் நடந்தால், அது எங்களை போன்றவர்களைதான் அதிகம் பாதிக்கும்,'' என்கிறார் லாவண்யா. முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் அடுத்துவரும் தேர்வுகள் நடத்தப்படவேண்டும் என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
- அரச குடும்ப பொறுப்பிலிருந்து விலகியது ஏன்? - முதன்முறையாக விளக்கமளித்த இளவரசர் ஹாரி
- சிறையிலிருந்து தப்பி சென்ற கைதிகள்: அதிகாரிகளை திசை திருப்ப மணல் மூட்டைகள்
- தாவூத்துக்கு முன்பே மும்பையை அச்சுறுத்திய கரீம் லாலா பற்றி தெரியுமா?
- அமெரிக்க தேர்தல் 2020: அதிபர் பதவிக்கான போட்டி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













