டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 தேர்வில் தமிழ் நீக்கப்பட்டது உண்மையா?

tnpsc group 2

பட மூலாதாரம், மு.நியாஸ் அகமது

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் இரண்டு பணிகளுக்கான முதனிலைத் தேர்வில் தமிழ்ப் பாடம் நீக்கப்பட்டது குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

ஆனால், தமிழ் அறிந்தவர்களே தேர்வாகவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மாற்றம் செய்யப்பட்டதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவிக்கிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு இரண்டு வகையில் நடத்தப்படுகிறது. சில பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு இன்றியும் சில தேர்வுகளுக்கு நேர்முகத் தேர்வுகளுடனும் குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது. இந்த இரண்டு தேர்வுகளுக்கும் தனித் தனியே தேர்வுகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் தேர்வு முறையில் சில மாற்றங்களையும் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் சில மாற்றங்களையும் செய்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, நேர்முகத் தேர்வு தேவைப்படும் பணிகளுக்கான தேர்வும் நேர்முகத் தேர்வு தேவைப்படாத பணிகளுக்கான தேர்வும் ஒன்றாக்கப்பட்டுள்ளன.

அதேபோல, கேள்வித் தாளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பாக பொது அறிவுக்கென 100 மதிப்பெண்களும் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்திற்கென 100 மதிப்பெண்களும் வழங்கப்பட்டன. இந்தக் கேள்விகள், கொடுக்கப்பட்ட பதில்களில் சரியான ஒன்றை தேர்வு செய்யும் முறையில் முறையில் அமைந்திருக்கும்.

தமிழ்

பட மூலாதாரம், iSidhe via getty

தற்போது செய்யப்பட்டிருக்கும் மாற்றத்தின்படி, முதனிலைத் தேர்வில் (prelims) இருந்து பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் என்ற பகுதி நீக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக, பிரதானத் தேர்வில் பொதுத் தமிழும் ஆங்கிலமும் சேர்க்கப்பட்டுள்ளன.

அதன்படி, பிரதானத் தேர்வில் (mains) தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிமாற்றம் செய்யப்படும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இவைதவிர, பாடத்திட்டத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதனிலைத் தேர்வில் பொது அறிவுப் பகுதியில் சங்ககாலம் முதல் இக்காலம்வரை என்ற பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் திருக்குறள், தமிழகத்தின் சமூக நீதி வரலாறு, தமிழகத்தின் தனித்தன்மை ஆகியவற்றிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படவிருக்கின்றன.

மேலும் பிரதானத் தேர்வில் 300 மதிப்பெண்களில் 100 மதிப்பெண்கள் மொழிபெயர்ப்புக்கும் மீதியுள்ள 200 மதிப்பெண்கள் சுருக்கியெழுதுதல் முதல் கடிதம் எழுதும் வரையிலான வேறு பயிற்சிகளுக்கும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமையன்று இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சியின் அறிவிப்பு வெளியானதும் பெரும் சர்ச்சை எழுந்தது. முதனிலைத் தேர்வில் இருந்து தமிழ் நீக்கப்பட்டது தொடர்பாக பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். தமிழே தெரியாதவர்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சியடைய முடியுமென்றும் கிராமப்புற மாணவர்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சியடைய முடியாது என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பு செய்வதற்கு 100 மதிப்பெண்கள் என நிர்ணயித்துள்ள பார்ட்- ஏ தேர்வில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண் எடுக்காவிட்டால் அந்த இளைஞர் 200 மதிப்பெண்களுக்கு எழுதிய பார்ட்-பி விடைத்தாள் திருத்தப்பட மாட்டாது.

மு.க. ஸ்டாலின்

பட மூலாதாரம், MK STALIN/FACEBOOK

தமிழ்மொழிக் கேள்விகள் மூலம் அதிக மதிப்பெண்கள் பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால் பொது அறிவுத் தேர்வில் மட்டுமே தமிழ்மொழி படித்த மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பொது அறிவுத் தேர்வில் தோற்று விட்டால், அந்த இளைஞருக்கு வேலைவாய்ப்பு எட்டாக்கனியாகி விடும். தமிழ்மொழிக்கும், கிராமப்புற இளைஞர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்," என கூறப்பட்டுள்ளது.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்களும் இதற்குக் கண்டனம் தெரிவித்தனர்.

ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது. தமிழுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்தும் தமிழ் தெரியாதவர்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சியடையாத வகையிலும்தான் இந்த தேர்வுத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரித்தனர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய டிஎன்பிஎஸ்சியின் செயலர் நந்தகுமார், "இதுவரை முதல்நிலைத் தேர்வில் தமிழ்த் தேர்வையே எழுதாதவர்கள், தேர்ச்சியடைந்து வேலை பெறும் நிலை இருந்தது. இனி தமிழ் தெரியாமல் தேர்ச்சியடைய முடியாது," என்கிறார்.

"இதற்கு முன்பு முதனிலைத் தேர்வில் பொது அறிவுக்கு 150 மதிப்பெண்களும் பொது ஆங்கிலம் அல்லது தமிழுக்கு 150 மதிப்பெண்களும் அளிக்கப்பட்டன. இதில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்யலாம். பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தையே தேர்வுசெய்வார்கள். அதாவது எழுதுபவர்களில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் ஆங்கிலத்தையே தேர்வுசெய்வார்கள். 30 சதவீதம் பேர் மட்டுமே தமிழைத் தேர்வுசெய்வார்கள். இதனால், தமிழே தெரியாதவர்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்துவந்தனர். இப்போது இந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. இதனைப் பலர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர்" என்கிறார் நந்தகுமார்.

தற்போது பிரதான தேர்வில், தமிழில் விரிவாக எழுதும் திறன் சோதிக்கப்படுகிறது. குறிப்பாக தமிழில் விரிவாக எழுதத் தெரியாதவர்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சியடைய முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்கிறது டிஎன்பிஎஸ்சி.

தமிழ்

பட மூலாதாரம், Marquardt_Photography

இப்போது பிரதான தேர்வில் மொழிபெயர்ப்புத் திறன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டும். இது தவிர, கடிதம் எழுதுதல், சுருக்கிவரைதல் ஆகியவையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

"பிரதான தேர்வில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், முதனிலைத் தேர்வில் அந்தப் பகுதி நீக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வைப் பொறுத்தவரை பட்டப்படிப்பு படித்தவர்கள் பங்கேற்கும் தேர்வு. அதில் குறைந்த அளவாவது தமிழ் தெரிய வேண்டும் என எதிர்பார்ப்பதில் தவறில்லை" என்கிறார் நந்தகுமார்.

ஒரு தேர்வாளர் மொழிபெயர்ப்புத் தேர்வில் குறைந்தது 25 மதிப்பெண்களைப் பெற்றால் மட்டுமே அந்தத் தேர்வர் எழுதிய தேர்வுத் தாளின் அடுத்த பகுதி திருத்தப்படும். இதனால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

"அப்படி நேராது. மொழிபெயர்ப்பில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஒன்று தமிழில் இருந்து ஆங்கிலம். மற்றொன்று ஆங்கிலத்தில் இருந்து தமிழ். ஒவ்வொரு பகுதிக்கும் 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு தேர்வருக்கு தமிழில் இருந்து ஆங்கிலத்தில் எழுதுவது கடினமாக இருந்தால்கூட, ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பதை ஒழுங்காகச் செய்தாலே 50 மதிப்பெண்களைப் பெற முடியும். ஆகவே இதனால், தேர்வர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்" என்கிறார் நந்தகுமார்.

பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழக அரசின் அரசுப் பணியில் சேர்வார்கள் என்ற அச்சம் ஏற்பட்டிருப்பது குறித்துக் கேட்டபோது, "பொதுவாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அப்படி நடக்காது. கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்விலிருந்து 17500 பேர் தேர்ச்சியடைந்தார்கள். அதில் 13 பேர் பிற மாநிலத்தவர். 2 பேர் மூணாறையும் 2 பேர் நெல்லூரையும் ஒருவர் பெங்களூரையும் 3 பாலகாட்டையும் 4 பேர் பாண்டிச்சேரியையும் சேர்ந்தவர்கள். வெளிமாநிலத்தவர் எனக் குறிப்பிடப்படும் இந்த 13 பேருமே தமிழ் நன்றாக அறிந்தவர்கள். அதனால்தான் தேர்ச்சியடைய முடிந்தது. தற்போதுள்ள புதிய பாடத்திட்டத்தின்படி, தமிழ் தெரியாமல் ஒருவர் உள்ளே வரவே முடியாது," என்கிறார் நந்தகுமார்.

இந்தப் பாடத் திட்டத்தின் மூலம் பிரதான தேர்வை, இதற்கெனவுள்ள பயிற்சி மையங்களில் சேராமலேயே தேர்ச்சியடைய முடியும் என்கிறது டிஎன்பிஎஸ்சி தரப்பு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :