இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்திற்கும் காமராஜரின் தேர்தல் தோல்விக்கும் என்ன தொடர்பு?

அண்ணா

பட மூலாதாரம், ARUNKUMARSUBASUNDARAM

    • எழுதியவர், விக்னேஷ்.அ
    • பதவி, பிபிசி தமிழ்

(இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான பிபிசி தமிழின் கட்டுரைத் தொடரின் இரண்டாம் பாகம் இது.)

இந்திய விடுதலைக்கு முன்பு பள்ளிகளில் இந்தி மொழி படிப்பதை சி.ராஜகோபாலாச்சாரி தலைமையிலான மதராஸ் மாகாண அரசு கட்டாயமாக்கியதை எதிர்த்து நடந்த போராட்டங்கள் மற்றும் அந்த உத்தரவு பிரிட்டிஷ் அரசின் மதராஸ் ஆளுநரால் ரத்து செய்யப்பட்டதும் குறித்து இந்தத் தொடரின் முதல் பாகம் விளக்கியது.

விடுதலைக்குப் பின் மீண்டும் கட்டாய இந்தி

இந்திய விடுதலைக்குப் பிறகு, தமிழகத்தின் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் மீண்டும் 1948ஆம் ஆண்டு தொடங்கியது. அதற்கு காரணம் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையிலான மதராஸ் மாகாண காங்கிரஸ் அரசு பிறப்பித்த உத்தரவு.

மதராஸ் மாகாணத்தில் தமிழ் பேசாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகியன பேசப்படும் பகுதிகளில் இந்தி படிப்பது கட்டாயம் என்றும் தமிழ் பேசும் பகுதிகளில் இந்தி விருப்பப்பாடம் என்றும் தெரிவித்தது அந்த உத்தரவு.

பின்னர் அதே உத்தரவு திருத்தப்பட்டு மதராஸ் மாகாணம் முழுமைக்கும் பள்ளிகளில் இந்தி படிப்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது.

1948இல் பெரியார் மீண்டும் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கினார். அப்போது பெரியார், சி.என்.அண்ணாதுரை போன்றவர்கள் மீண்டும் கைதாகினர்.

ராஜகோபாலாச்சாரி

பட மூலாதாரம், Getty Images

பின்னர் அதே ஆண்டு டிசம்பர் மாதம் மதராஸ் மாகாண காங்கிரஸ் அரசு அளித்த உறுதிமொழியால் பெரியார் தலைமையிலான போராட்டம் கைவிடப்பட்டது.

கட்டாய மொழிப்பாடமாக இருந்த இந்தி, பள்ளிகளில் விருப்பப்பாடமாக அறிவிக்கப்பட்டது.

இந்தி திணிப்பு எதிர்ப்பின் இரண்டாம் அத்தியாயம்

தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் இரண்டாம் அத்தியாயம் 1964இல் தொடங்கியது.

இந்தப் போராட்டங்கள் நடந்தபோது இந்தியா விடுதலை பெற்றிருந்தது மட்டுமல்லாது, மதராஸ் மாகாணம் பிரிக்கப்பட்டு ஆந்திரப் பிரதேசம் உருவாக்கப்பட்டிருந்தது. மொழி வாரியாக மாநிலங்கள் உருவாக்கப்பட்டதால் முந்தைய மதராஸ் மாகாணத்தின் சில பகுதிகள் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் இணைக்கப்பட்டிருந்தன.

இலங்கை
இலங்கை

பெரியார் தலைமையில் நடந்த முந்தைய இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின்போது திராவிட இயக்கத்தின் வளரும் தலைவராக இருந்த சி.என். அண்ணாதுரை இந்த இராண்டாம் கட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தளபதியாகவே இருந்து செயல்பட்டார் என்று கூறலாம்.

இத்தகைய போராட்டங்கள் தமிழகம் மட்டுமல்லாது இந்தி பேசாத பிற மாநிலங்களான பஞ்சாப், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா ஆகியவற்றிலும் நடந்தன.

ஆட்சி மொழியாக இந்தி

இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டபின் முதல் 15 ஆண்டுகள் மட்டுமே இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க அரசியலமைப்புச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருந்தது.

இந்தி திணிப்பு

பட மூலாதாரம், Getty Images

அதன் பின்னர் இந்தி மட்டுமே ஒற்றை ஆட்சி மொழியாக இந்தியா முழுதும் இருக்கும் என்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதாவது ஜனவரி 26, 1965க்குப் பிறகு இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கும்.

கெடு நெருங்க நெருங்க இதற்கு இந்தி பேசாத மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

இந்தி பேசாத மாநிலங்களில் இதற்குக் கிளம்பிய எதிர்ப்பைத் தொடர்ந்து, ஜவஹர்லால் நேரு தலைமையிலான நடுவண் அரசால் 1963ஆம் ஆண்டு 'அலுவல் மொழிகள் சட்டம்' கொண்டுவரப்பட்டது.

அதில் பிரிவு மூன்றில், 15 ஆண்டுகள் கெடு முடிந்தபின்னும் இந்தியுடன் சேர்த்து ஆங்கிலமும் இந்தியாவின் அலுவல் மொழியாகத் 'தொடரலாம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதாவது, சட்ட வரைவில் "Notwithstanding the expiration of the period of fifteen years from the commencement of the Constitution, the English language may, as from the appointed day, continue to be used in addition to Hindi" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதை "the English language shall" என்று மாற்ற வேண்டும் என்று அப்போது திமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணா நாடாளுமன்றத்தில் வாதிட்டார். "may" மற்றும் "shall" ஆகிய இரு சொற்களுக்கும் ஒரே பொருள்தான் என்பதால் சட்ட வரைவில் திருத்தம் தேவையில்லை என்று வாதிட்டார் பிரதமர் நேரு.

15 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆங்கிலம் ஆட்சிமொழியாக நீடிக்கும் என்று வாக்குறுதி அளித்தார் நேரு.

நேரு

பட மூலாதாரம், HULTON ARCHIVES

திருத்தங்கள் எதுவும் இல்லாமலேயே சட்டம் நிறைவேறியது. 'தொடரலாம்' என்பது 'தொடரும்' என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாமல் போனது.

நெருங்கும் தேதி

1965ஆம் ஆண்டு குடியரசு நாள் நெருங்க நெருங்க போராட்டங்கள் தமிழகத்தில் தீவிரமாகின. ஜனவரி 26 துக்க நாளாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தார் அண்ணா.

அப்போதைய காங்கிரஸ் முதல்வர் பக்தவச்சலம் குடியரசு தினத்தன்று துக்க தினம் அனுசரிக்கும் போராட்டக்கார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

மாநிலம் முழுதும் உள்ள மாணவர்கள் ஒரு நாள் முன்கூட்டியே துக்க தினம் அனுசரிக்க முடிவு செய்தனர்.

ஜனவரி 25, 1965 அன்று துக்க தின அனுசரிப்பு நிகழ்வுகளில் ஒரு பகுதியாக மதுரை திலகர் திடலில் இந்தியை ஒற்றை ஆட்சி மொழியாக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 17ஐ எரிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

இளைஞர்களின் ஊர்வலம் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகம் அமைந்திருந்த வடக்கு மாசி வீதி வழியாகச் சென்றபோது போராட்டக்காரர்களுக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே கைகலப்பு மூண்டது.

காங்கிரஸ் அலுவலகத்தை அந்த இளைஞர்கள் கல் வீசி தாக்கியதாகவும், காங்கிரஸ் கட்சியினர் அவதூறாகப் பேசியதால் அந்த இளைஞர்கள் செருப்பை காங்கிரஸ் கட்சியினர் மீது எரிந்ததாகவும், காங்கிரஸ் உறுப்பினர்கள் அவர்களை ஆயுதங்களால் தாக்கியதாகவும் பல கூற்றுகள் நிலவுகின்றன.

இந்த மோதலில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் சிலர் காயமடைகின்றனர். குடியரசு நாள் கொண்டாட காங்கிரஸ்காரர்கள் செய்துவைத்திருந்த அலங்காரங்களுக்கு தீ வைக்கப்படுகிறது.

லால் பகதூர் சாஸ்திரி
படக்குறிப்பு, லால் பகதூர் சாஸ்திரி.

இந்தி எதிர்ப்புப் போராளிகள் மீதான தாக்குதல் பற்றிய செய்தி மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவுகிறது. மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டங்கள் தமிழகம் முழுதும் நடந்தன.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் வரவழைக்கப்படுகிறது. மாநிலம் முழுதும் நடந்த போராட்டங்களில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 100க்கும் மேல் என்று பல தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தப் போராட்டங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசு சொந்த மக்கள் மீது ஆயுதப் பிரயோகம் செய்வதை எதிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த நடுவண் அமைச்சர்கள் ஓ.வி.அழகேசன் மற்றும் சி. சுப்பிரமணியம் ஆகியோர் பிப்ரவரி 11, 1965 அன்று பதவி விலகுகின்றனர்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நாடாளுமன்றத்தில் நேரு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று, அன்று மாலையே அகில இந்திய வானொலியில் ஆற்றிய உரையில் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு போராட்டக்காரர்களை அமைதிப்படுத்த உதவியது.

பின்னர் 1967இல், இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் அலுவல் மொழியாக நீடிக்கும் வகையில் அலுவல் மொழிகள் சட்டப் பிரிவு - 3 திருத்தப்பட்டது.

இந்தப் போராட்டங்களால் அண்ணாதுரை தலைமையிலான திமுக பெரும் மக்கள் ஆதரவைப் பெற்றது.

காமராஜர்

பட மூலாதாரம், TWITTER

அதை அடுத்து 1967இல் நடந்த மதராஸ் மாகாண சட்டமன்றத்துக்கான தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பெரும் வெற்றி பெற்றன. இந்தத் தேர்தல் தோல்விக்கு பின் தமிழ்நாட்டில் மீண்டும் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை.

மக்கள் ஆதரவையும் மதிப்பையும் பெற்றிருந்த முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் காமராசர் தன் வாழ்நாளில் தோல்வியடைந்த ஒரே தேர்தலாக அந்தத் தேர்தல் இருந்தது.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் மூலம் அரசியலுக்கு வந்த திமுகவின் இளம் வேட்பாளர் சீனிவாசனிடம் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் தோல்வியடைந்தார் காமராசர்.

அதன்பின் ஆட்சிக்கு வந்த அண்ணா தலைமையிலான திமுக அரசு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபின் இருந்த மதராஸ் மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது.

Banner
காணொளிக் குறிப்பு, இந்தியா அக்னிபத் என்கிற குறுகிய கால ராணுவ சேவைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :