சுற்றுலா வாசிகளுக்காக காத்திருக்கும் கேரள படகு இல்லங்கள்
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
கேரளாவுக்கு சுற்றுலா வரும் பல வெளிநாட்டர்வர்களின் பட்டியலில் நீங்கா இடம் பெற்றிருந்த படகு இல்ல விடுதிகள்கடந்த ஒரு மாத காலமாக வெறுமையாக காணப்படுகின்றன.

ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளாவின் சமவெளிப்பகுதிகளில் தண்ணீர் வடிந்து, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டபோதும், சுற்றுலாவாசிகள் வராததால், அலப்பி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகு இல்லங்கள் ஆற்றுக்கரைகளில் இயங்காமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை நூற்றுக்கணக்கான படகு இல்லங்கள் சுற்றுலாவாசிகளை சுமந்தபடி ஆலப்புழா பகுதிகளில் காணக்கிடைக்கும். இந்த ஆண்டு வெள்ளம் ஏற்படுத்திய தாகத்தால், ஒரு மாத காலத்திற்கு பிறகும், சுற்றுலாவாசிகள் வருவதில் மந்தநிலை நீடிக்கிறது.
சுற்றுலா காலங்களில் ஒரு நாளில் அலப்பியில் உள்ள படகு இல்லங்கள் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை வருமானத்தை ஈட்டுபவையாக இருந்தன என்று கூறும் உரிமையாளர் சங்கங்கள், வெள்ளத்தால் குறைந்தபட்சம் ரூ.20 கோடி வரை இழப்பை கடந்த ஒரு மாதத்தில் சந்தித்துள்ளதாக கூறுகிறார்கள்.
வீடு போன்ற படகு
படகு இல்லம் என்பது ஒரு தங்கும் விடுதி போலவே, படகில் படுக்கை அறை, குளியல்,கழிவறை, சமையல் அறை, மாடிஅறை என எல்லா வசதிகளும் இருக்கும். வீடு போன்ற தோற்றத்தை தரும் படகுகளில் அலங்கார வேலைப்பாடுகள், ஒரு குழுவாக அமர்ந்து பேசுவதற்கு ஒன்று அல்லது இரண்டு மாடியில் கூடம் உள்ளது. பயணத்தில் இயற்கையை ரசிக்க சாய்வுநாற்காலி, கட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு நாளுக்கு, சுமார் எட்டாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வாடகைக்கு கிடைக்கும் படகு இல்லத்தில், உணவு தயாரிக்கவும், படகை செலுத்தவும், சுற்றுலாவாசிக்கு உதவவும் குறைந்தபட்சம் மூன்று உதவியாளர்கள் தங்கியிருப்பார்கள்.
ஆகஸ்ட் மாதம் வெள்ளம் ஏற்படுத்திய சேதத்தில் இருந்து சிரமத்துடன் மீண்டு வந்துள்ள பல படகு இல்ல உரிமையாளர்கள் அக்டோபர் மாதத்திலாவது சுற்றுலாவாசிகள் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
நீண்டவிடுப்பில் பணியாளர்கள்
மூன்று படகுகளுக்கு உரிமையாளரான சுபாஷ் ராகவன், கடந்த 12 ஆண்டுகளாக இந்த தொழிலை மட்டுமே நம்பியிருந்தவர். கடந்த ஜூன் மாதம் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்து தனது படகுகளை சீரமைத்துள்ளார்.

''எனது மூன்று படகுகளும் இரண்டு படுக்கை அறை வசதி கொண்ட விடுதிகள். எத்தனை நாட்கள் சுற்றுலாவாசிகள் தங்க திட்டமிடுகிறார்களோ, அதற்கு ஏற்றவாறு அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு படகு புறப்படும். ஆகஸ்ட் மாதம் தொடங்கி மார்ச் வரை, பலமுறை பயணங்கள் இருக்கும். படகில் உள்ள பணியாளர்களுக்கு விடுப்பு அளிக்கமுடியாதவாறு தொழில் நடக்கும். தற்போது வெள்ளத்தால் எனது பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்,'' என்று வருத்ததுடன் பேசினார் சுபாஷ்.
சுபாஷின் பணியாளர்களுக்கு முதல்முறையாக நாள்குறிப்படாமல் செப்டம்பர் மாதம் விடுப்பு அளித்திருந்தார். குறைந்தபட்சம் அக்டோபர் மாதத்தில் சுற்றுலாவாசிகள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறார் சுபாஷ்.
நோய்தோற்று பயம் இல்லை
படகு இல்ல விடுதி தொழிலில் நேரடியாக மூவாயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் பத்தாயிரம் தொழிலாளர்கள் மறைமுகமாக பயனடைந்து வந்தனர் என்கிறார் ஆலப்பியில் படகு இல்ல உரிமையாளர் சங்கத்தின் செயலாளராக உள்ள ஜுஹன்.

''வெள்ளத்தால் நாங்கள் துவண்டுபோனது உண்மைதான். ஆனால் இப்போது மீண்டுவந்துள்ளோம். எப்போதும் போல சுற்றுலாவாசிகள் வரலாம் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளோம். வெள்ளத்தால் நோய்தொற்று அபாயம் இருக்கும் என்ற பயம் மக்களிடம் உள்ளது. ஆனால் கேரளாவில் நோய்தொற்றை அரசாங்கம் கட்டுப்படுத்திவிட்டது. சுற்றுலாவாசிகள் எங்கள் மாநிலத்திற்கு வரும் விருந்தாளிகள். அதனால் அவர்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியமும் எங்களுக்கு முக்கியம்,''என்கிறார் ஜுஹன்.
மேலும் கேரளா படகு இல்லம் தொடர்பாக உலகநாடுகளில் பல இடங்களில் சாலையோர விளம்பர நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார் அவர்.
''சௌதி அரேபியா, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பெரிய அளவில் விளம்பர நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளோம். ஆஸ்திரேலியாவில் இருந்து 60 நபர்கள் கொண்ட ஒரு சுற்றுலா குழுவினர் வந்துள்ளனர். இவர்களின் மதிப்பீடு அவர்கள் நாட்டில் இருந்து கேரளாவுக்கு வரத்திட்டமிட்டுள்ளவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும்,'' என்று கூறுகிறார் ஜுஹன்.

சுற்றுலாவாசிகளுக்கு அழைப்பு விடுக்கும் கேரளா அரசு
ஆலப்புழா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், கேரளா மாநில நிதி அமைச்சருமான தாமஸ் ஐசக்கை அலப்பியில் உள்ள ஒரு படகு இல்லத்தில் சந்தித்தோம்.
''கேரள வெள்ள நிவராண பணிகளுக்கு மத்தியஅரசு ஒதுக்கிய ரூ.600 கோடி ஒரு துளிதான். நாங்கள் சுமார் 20,௦௦௦௦ கோடி அளவுக்கு பேரிழப்பை சந்தித்துள்ளோம். ஆனால் தற்போது சரக்குமற்றும் சேவை வரியில் பேரிடர் நிதிக்காக ஒரு தொகையை ஒதுக்குவது பற்றி பேசப்பட்டுவருகிறது. இது நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது,'' என்றார் தாமஸ் ஐசக்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உலகின் பல நாடுகளில் வேலை செய்துவருகிறார்கள். முறைசாரத்தொழிலளர்களாகவும், தொழில்முறை பணியாளர்களாகவும் வேலைசெய்கிறார்கள். இவர்களில் கணிசமானவர்கள் தங்களது ஊர்களுக்கு உதவ ஏதுவாய் இணையதளம் ஒன்றை கேரள அரசு தொடங்கவுள்ளது என்று அமைச்சர் ஐசக் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

''சுற்றுலாத் துறை கேரள மாநிலத்திற்கு வருவாயை அள்ளித்தரும் துறை. இந்த இழப்பை உடனடியாக சரிசெய்வதற்கு தேவையான முயற்சிகளை செய்துவருகிறோம். நிபா வைரஸ் காய்ச்சல் வந்த சமயத்தில் கேரளா எடுத்த நடவடிக்கையை பல மாநில அரசுகளும் புகழ்ந்தன. இந்த வெள்ளம் ஏற்படுத்தியுள்ள சுகாதார சீர்கேடுகளை தாண்டிவந்துள்ளோம் என்பதை சுற்றுலாவாசிகளுக்கு தெரிவிக்க விளம்பரங்கள் செய்துவருகிறோம். காணொளி விளம்பரம் மற்றும் நிகழ்ச்சிகளை அரசு நிகழ்த்திவருகிறது. வெகு சீக்கிரம் மீண்டு வருவோம்,'' என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் ஐசக்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












