''வருங்காலத்தில் கேரளா தொடர்ந்து பேரிடர்களை சந்திக்கும்'' - சூழலியலாளர் சுகதாகுமாரி

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
''பிரகிருதி திருச்சடிக்கும்''(இயற்கை திருப்பியடிக்கும்) இரண்டே வார்த்தைகளில் கேராளா வெள்ளம் பற்றி பட்டென பதில் தருகிறார் பிரபல கேரள கவிஞர் மற்றும் சூழலியலாளர் சுகதாகுமாரி(84).
1980-களில் கேரளாவின் முக்கிய காடான அமைதி பள்ளத்தாக்கில் (silent valley) புனல்மின் நிலையம் அமைப்பதற்கு எதிராக சுகதாகுமாரி எழுதிய 'மரத்தின் சுதுதி' என்ற கவிதை போரட்ட கீதமாக உருவெடுத்தது.
கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக கவிதைகள் வாயிலாகவும், அறப் போரட்டங்கள் வாயிலாகவும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை தீவிரமாக பேசிவரும் சுகதாகுமாரி, வரும் காலங்களிலும் கேரளா இது போன்று தொடர்ந்து பேரழிவுகளை சந்திக்கும் என்கிறார்.
இந்தியாவின் தென்பகுதியில் உள்ள இந்த சிறிய மாநிலம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பாது என நம்பிக்கை குறைந்தவராக பேசுகிறார்.
இயற்கையின் சமநிலையை குலைத்துவிட்டோம்
''கேரளாவில் உள்ள ஒவ்வொரு ஆறும், மலையும் நாசமாகிவிட்டபின் இந்த நாடு எப்படி கடவுளின் சொந்த நாடாக இருக்கும் என்று கேள்விஎழுப்புகிறார் அவர். இடுக்கி மலையில் பாருங்கள். மலைகள் மீது பெரிய வீடுகள், கேளிக்கை விடுதிகள் கட்டப்பட்டது. தற்போது மலையின் ஒரு பகுதியே நிலச்சரிவில் அழிந்துவிட்டது. இதை எப்படி சரி செய்வீர்கள்? இந்த சிறிய மாநிலத்தில் எத்தனை இயற்கை வளம் நசிந்துபோனது? 44 நதிகள் இங்குள்ளன. பல நதிகள் ஆலைக்கழிவு, வீட்டுக்கழிவுகளை சுமந்து, நோய்வாய்ப்பட்டுப்போனது. முடிந்தமட்டும் மணலை தோண்டி நதிகளின் ரத்தநாளங்களை துண்டித்தாகிவிட்டது. இதை சரிசெய்ய முடியுமா?,'' என்று அடுக்கடுக்காக கேள்விகளை வைக்கிறார்.

''பல ஆண்டுகளாக நாம் மிகவும் கொடுத்துவைத்தவர்களாக இருந்தோம். இதுவரை இதுபோல வெள்ளம், நிலநடுக்கம், மதச்சண்டைகள், போர் என எதுவுமற்ற அமைதியான மாநிலமாக கேராளா இருந்து வந்தது. அதனால்தான் அது கடவுளின் சொந்த தேசமாக இருந்தது. தற்போது எல்லாமே மாறிவருகிறது. இயற்கையின் சமநிலையை நாம் குலைத்துவிட்டதால் நாம் நிலைகுலைந்து நிற்கிறோம்,'' என்றார்.
வடநாட்டில் ஏற்பட்டது போல பட்டினிச்சாவுகள் கேரளாவில் நடக்கவில்லை. வறட்சி ஏற்படவில்லை. ஆனால் ஆடம்பரமாக வாழவிரும்புகிற காரணத்தால் கேரளா மக்கள் தங்களுக்கான சவக்குழிகளை அவர்களே வெட்டிக்கொள்கிறார்கள் என்கிறார் சுகதாகுமாரி.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
இயற்கை அன்னை காளியாக மாறிவிட்டாள்
''இயற்கை நமக்கு உயிர்கொடுத்தாள். அவள் அன்னை. ஆனால் தொடர்ந்து நாம் சுயநலம் மிக்கவர்களாக, அவளுக்கு ஆலைக்கழிவுகளைக் கொண்டு நஞ்சூட்டி, நதிகளை பாழ்படுத்தி, அவளது உடலை துண்டாடி நாசப்படுத்தும்போது அவள் மகாகாளியாக மாறி நம் உயிரை எடுத்துச்செல்கிறாள். வெள்ளம் வரும்போது சதுப்புநிலக்காடுகள் மற்றும் நெல்வயல்கள் மட்டுமே அந்த நீரை உள்வாங்கிக்கொள்ளும் திறன் கொண்டவை. தற்போது அந்த நிலங்களில் வீடுகளும்,வெளிநாட்டு நிறுவனங்களின் கட்டிடங்கள், ஷாப்பிங் மால்கள், எஸ்டேட்களும் அமைத்துவிட்டதால், இயற்கை பாழானது.''என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
கேரளாவுக்கு கிடைத்த தண்டனையாக மட்டும் இதைப்பார்க்காமல் ஒவ்வொருவரும் செய்த பிழையை நினைத்துபார்க்கவேண்டும் என்று கூறும் அவர், ''இந்த அழிவை நாம் சந்தித்திருக்கிறோம். தற்போது வந்த வெள்ளம் வெறும் மழை அல்ல. மலைப்பகுதி, இடை நாடு, கடல் நாடு என்ற மூன்று விதமான நிலப்பகுதிகளாக அமைந்துள்ள இந்த சிறிய நிலப்பகுதிகள் பெரும்பாலும் நகரங்களாக மாறிவிட்டதால், இதுவரை பாய்ந்துவந்த நதியின் தடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன. குறைந்தபட்சம் வெள்ள நீர் வடிவதற்காவது நாம் இடம் அளித்திருக்கவேண்டும்,'' என்கிறார்.
சுவடில்லாமல் காணமல் போன இடங்கள்
கேரளாவில் தான் பிறந்துவளர்ந்த பல இடங்கள் தற்போது அடையாளம் தெரியாமல் போய்விட்டன என்று கூறும் சுகதாகுமாரி, ''நெய்யார் நதியில் என் சகோதரிகளுடன் விளையாடிய கரையோரம் இன்று இல்லை. தற்போது ராணுவம் வந்து வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும்நிலை ஏற்பட்டுவிட்டது. எர்ணாகுளம் மாவட்டம் முழுவதுமே நசிந்துவிட்டது. தற்போது இது தொழில் நகரமாகிவிட்டது. நதிகளை மாசுபடுத்திவிட்டு குடிநீருக்கு தவிக்கிறோம். ராஜீவ் காந்தி பிரதமாராக இருந்த காலத்தில், ஆரன் முல்லாவில் விமான நிலையம் அமைவதாக இருந்தது. உச்சநீதிமன்றம் சென்று போராடி நிறுத்தினோம். கணக்கில்லாமல் பல இடங்களில் மலைகள், நீர் ஊற்றுகள், காடுகள், ஓடைகள் இருந்த சுவடே இல்லை.''

பட மூலாதாரம், Getty Images
தற்போது ஏற்பட்ட வெள்ளம் 1924ல் ஏற்பட்ட வெள்ளம் போன்றது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த வெள்ளம் 1924ல் ஏற்பட்ட வெள்ளத்தோடு ஒப்பீடு செய்யகூடாத ஒன்று என்கிறார் சுகதாகுமாரி. ''அப்போது இத்தனை கட்டிடங்கள் இல்லை.அணைகள் இல்லை. வெள்ளம் முடிந்தவரையில் அதன் போக்கில் சென்று கடலை அடைந்தது. தற்போது எல்லா ஆக்கிரமிப்புகளும் வெள்ளதில் அடித்துச்செல்லப்பட்டன. பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்று இருந்த நிலைமையை விட தற்போதைய நிலைமை மோசமடைந்துள்ளது,'' என்கிறார்.
கேரளா தற்போது சந்தித்துள்ள பேரிடரில் இருந்து மீண்டு வந்தாலும், இயற்கையை பாதுகாக்க மறந்தால் மீண்டும் இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ந்து சந்தித்துக்கொண்டே இருக்கும் என்று ஆதங்கத்தில் பேசினார். அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு இடப்பக்கம் மாட்டிவைத்திருக்கும் அமைதிப் பள்ளத்தாகின் பெரிய புகைப்படம் காற்றில் அசைந்தபடி இருந்தது.
பெருமூச்சோடு அவரது கவிதையை நமக்கு வாசித்துக்காட்டினார். ஆகஸ்ட் மாத வெள்ளத்தில் கேரளா மக்களுக்கு நேர்ந்த அவலத்தை அது எடுத்துரைத்தது. இக்கவிதையை தமிழில் மொழிபெயர்த்தவர் க. வானமாமலை.
மேற்கு மலைத்தொடர்
பசுமைமிகு மலையடிவாரங்களில் தீநாளங்கள்.
திவ்யமான பர்வதங்களின் தோள்களில் கருத்தப்புகை எழுகின்றது. வெடிமருந்து வைத்து வெடித்து சிதறிய நூறு மலைக்குன்றுகள் அலறி உடைந்து வீழ்கின்றது.
ஊற்றுகள் வற்றி நடுநடுங்கி உலருகின்றது. நூறாயிரம் கூக்குரல்கள் உயர்ந்தும் தாழ்ந்தும் ஓய்கின்றது. நெஞ்சில் காயங்கள் ரணங்களாய் நிறையும். கெளரவத்துடன் தலை நிமிர்ந்து நிற்கும் சஹ்யமலை.
மலையை உடைப்பதும், அதன் மேல் தீவைப்பதும் செய்யும் கைகளே காலம் மிகவும் நெருங்கி விட்டது. அறிவீரோ!
காயமுற்ற மாமலையோ நமக்கு விதித்திடும் பட்டினியும் மரணமும். எரிந்தும் பொரிந்தும் போகும்... சிறு துளி நீர்கூட தாகத்திற்காக கேட்க வேண்டி வருமே.
இல்லையெனில் கோபம் வந்த கிரிகளின் கல்லும் மரமும் பிரளயமாக இறுதி சாபமென விரைந்து வரும் போதுவேதனையுடன் கேட்கிறேன் - எங்கே நாம் போகிறோம்?
தெய்வீகமான சஹ்யமலைத் தொடரே - புண்ணிய கங்கையை அழைத்து வரும் உன் திருப்பாதங்களுக்கு நான் காணாத மழலைகளை நினைத்துக் கொண்டு எந்தன் நாட்டிலுள்ள பள்ளிவாளைப் போல் மின்னும் உந்தன் திருவடிகளில் குன்றளவு நிறைந்த பூக்களால் என் சங்கடங்களை வாரி வழங்கி அர்ச்சிப்பேன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












