அல் கொய்தாவுக்கு வெடிகுண்டு தயாரித்தவர் கொல்லப்பட்டாரா?
கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம்.
அல் கொய்தாவுக்காக வெடிகுண்டு தயாரித்தவர்

பட மூலாதாரம், Reuters
அரேபிய தீபகற்பத்தில் அல் கொய்தாவுக்காக குண்டு தயாரிப்பவர் என சந்தேகத்திற்குரிய இப்ராஹும் அல் அசிரி கொல்லப்பட்டார் என்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள். குண்டு தயாரிக்கும் குழுவுக்கு இப்ராஹிமே தலைவர் எனவும் சந்தேகிக்கின்றனர். மடிக்கணிணி மற்றும் டாப்லெட்டில் குண்டுகளை மறைத்து வைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர். கடந்த ஆண்டு ஏமனில் நடந்த வான் தாக்குதலில் இப்ராஹும் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறது அமெரிக்கா.

இரான் போர் விமானம்

பட மூலாதாரம், Getty Images
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் போர் விமானத்தை இரான் வெள்ளோட்டம் பார்த்தது. கொஸர் என அந்த விமானத்திற்கு பெயரிடபட்டுள்ளது. இந்த விமானமானது 13,700 மீட்டர் உயரம் வரை பறக்கும் என இரான் கூறுகிறது. விமான போக்குவரத்து துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் 1970 ஆம் ஆண்டு மாடல் விமானம் இது என்கிறார்கள்.
இரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளதால் ராணுவ உபகரணங்களை தாமே தயாரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது இரான்.


விமான நிலைய பெயரை மாற்றுங்கள்

பட மூலாதாரம், Getty Images
ராபர்ட் முகபே என பெயரிடப்பட்டிருக்கும் விமான நிலையத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இருக்கிறார்கள் ஜிம்பாப்வே ராணுவத்தினர். 37 ஆண்டுகள் ஜிம்பாப்வேயை ஆட்சி செய்தார் முகாபே. சில மாதங்களுக்கு முன்பு அரசை ராணுவம் கைப்பற்றியது. அதன்பின் நடந்த தேர்தலில் எமர்சன் வெற்றி பெற்றார். இந்த சூழலில் பெயர மாற்ற கோரிக்கை வலுப்பெற்று இருக்கிறது.

மன்னிப்பு கேட்ட ராணுவம்

பட மூலாதாரம், AFP
உகாண்டா ராணுவம் ஊடகவியலாளரை தாக்கியதற்காக மன்னிப்பு கோரி உள்ளது. உகாண்டா ராணுவம் மன்னிப்பு கோருவது அரிதினும் அரிதான நிகழ்வாகும் . நாடாளுமன்ற உறுப்பினர் பாபி வைன் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டர். அவரை விடுவிக்க கோரி அவரது ஆதரவாளர்கள் போராடி வருகின்றனர். அந்த போராட்டத்தை பத்திரிகையாளர்கள் படம் பிடித்து செய்தி சேகரித்து கொண்டிருந்தபோது தாக்கப்பட்டு இருக்கிறார்கள். பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதும் படம் பிடிக்கப்பட்டது.

குற்றத்தை ஒப்புக் கொண்ட வழக்கறிஞர்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பின் முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோவன் 2016-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திய நிதி தொடர்பாக சட்டத்தை மீறியதாக மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
வேட்பாளரின் உத்தரவுக்கு இணங்க தேர்தல் முடிவுகளில் பாதிப்பு ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு தான் இவ்வாறு செய்ததாக அவர் கூறினார். டிரம்புடன் தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்களுக்கு ரகசியமாக பணம் அளித்தது தொடர்பாக கோஹன் இந்த சாட்சியம் அளித்திருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












