மத்திய அரசின் உதவி ஏமாற்றமளிப்பதாக கேரள நிதியமைச்சர் கவலை

பட மூலாதாரம், Hindustan Times
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
மழை வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு உடனடி உதவியாக மத்திய அரசு 500 கோடி ரூபாயை மட்டும் ஒதுக்கியிருப்பது ஏமாற்றமளிப்பதாக கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்தார்.
அதே நேரத்தில், இந்த வெள்ள பாதிப்பினால் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏழு சதவீதத்துக்கும் கீழே குறையக்கூடும் என்றும் அவர் கவலை தெரிவித்திருக்கிறார்.
ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கி சுமார் பத்து நாட்கள் கடுமையான பாதிப்புகளை கேரளம் சந்தித்துள்ள நிலையில், விவசாய நிலங்கள் பெருமளவு பாழ்பட்டுள்ளன; அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பெரும் சேதத்தை எதிர்கொண்டுள்ளன என்பதால் மாநிலத்தின் வருவாய் கடுமையான சரிவை சந்திக்கும் என்று நிதியமைச்சர் தாமஸ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
''கடந்த முப்பது ஆண்டுகளாக இந்திய சராசரியான ஏழு சதவீத ஜிடிபி என்பதைக் காட்டிலும் அதிகமான வளர்ச்சியை கேரளா கொண்டிருந்தது. எட்டு சதவீதமாக இருந்த ஜிடிபி இந்த ஆண்டு சரிவை சந்திக்கும் என்று சந்தேகிக்கிறேன். அதிலும் ஏழு சதவீதிற்கும் குறைவாக இருக்கும். இந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட இழப்புகளின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.20,000 கோடியை எட்டும்,'' என்று தெரிவித்தார்.

கேரளாவுக்கு முக்கிய வருவாய் தரும் தொழில்கள் என்னென்ன என்றும் வெள்ளபாதிப்பால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கேட்டபோது அமைச்சர் தாமஸ் விளக்கமாக பதில் அளித்தார்.
''கேரளாவில் சுற்றுலா மற்றும் விவசாயம் ஆகிய துறைகள் பெருமளவு வருவாயை தரும் துறைகள். குறுகிய காலத்தில் அதிக லாபத்தை தரும் துறை சுற்றுலாதான். ஆனால் சுற்றுலாத்துறை பேரழிவால் சீர்குலைந்துள்ளது. நீங்கள் தற்போது கூட வயல்களில் பசுமையான செடிகள், மரங்கள் இருப்பதை பார்க்கலாம். ஆனால் வயல்வெளிகள் எல்லாம் சீரழிந்துள்ளன. அடுத்ததாக கட்டுமானங்கள், கிராமங்களில் இருந்த சுயசார்புதொழில்கள் அனைத்தும் அழிந்துள்ளன. இந்த இழப்புகளில் இருந்து மீள்வது உடனே நடக்காது,'' என்கிறார் அமைச்சர் தாமஸ்.
நெகிழச் செய்யும் உதவிகள்
இந்திய அளவில் மட்டுமல்லாது, சர்வதேச அளவில் கேரளாவுக்கு வந்து சேரும் நிதி உதவி குறித்து கேட்டபோது, ''இந்தியாவின் பல மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசினார்கள். ஒவ்வொருவரின் பங்களிப்பும் எங்களை ஆச்சரியப்படவைத்துள்ளது. இதுவரை அவர்களின் பங்களிப்பு சுமார் ரூ.153 கோடியை தொட்டுள்ளது. நாங்கள் எந்த மாநிலத்திடமும் கேட்கவில்லை. ஆனால் அவர்கள் எங்களின் நிலையைப் புரிந்துகொண்டு உதவ முன்வந்துள்ளனர். இதோடு பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் நிதி அளித்து வருகிறார்கள். ஆனால் உடனடி நிவாரணத்தொகையாக மத்திய அரசாங்கம் குறைந்தபட்சம் ரூ.1,000 கோடியாவது அளிக்கும் என்று நம்பினோம். வெறும் ரூ.500 கோடி என்பது மிகவும் சிறிய தொகை. எங்களுக்கு இது கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது,'' என்கிறார்.

பட மூலாதாரம், HIDUSTAN TIMES
நிவாரணத்திற்காக தற்போது குறைவான நிதியை மத்திய அரசு வழங்கியிருந்தாலும், கேரளா தன்னை முழுமையாக மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய தருணத்தில் மற்ற மாநிலங்களைப் போல மத்திய அரசும் உதவும் என்று எதிர்பார்ப்புடன் இருப்பதாக தெரிவித்தார்.
''கேரளத்தின் மறுகட்டமைப்பு என்பதில் மத்திய அரசின் சில திட்டங்களில் திருத்தங்களை செய்வதும் அடங்கும். இதை அவர்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்,'' என்றார் தாமஸ்.
உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
கேரளத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எந்தவிதமான மறுகட்டுமானப் பணிகளுக்கு உடனடி நிதி தேவைப்படும் என்று கேட்டபோது, '' லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். வீடுகள் கட்டப்படவேண்டும். சாலைகளை மீண்டும் புதிதாக போடவேண்டும். சுமார் 10,000 கிலோ மீட்டர் சாலைகள் பழுதாகியுள்ளன. பல இடங்களில் மின்சார இணைப்புகள் புதிதாக கொடுக்கப்படவேண்டும். நீர் சேகரிப்பு நிலையங்கள், குடிநீர் வழங்குவதற்கான கட்டுமானங்கள் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். அடுத்ததாக விவசாய நிலங்களில் ஏற்பட்ட இழப்புகளுக்கு உதவி தேவை,'' என்று பட்டியலிட்டார்.

பட மூலாதாரம், AFP
நிதியுதவி பல்வேறு இடங்களில் இருந்து வருவதாலும், பல்லாயிரக்கணகாணவர்கள் உதவி வேண்டி காத்திருப்பதாலும், சரியான நபர்களுக்கு நிதி சென்றுசேர அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டபோது, ''முகாம்களுக்கு வந்துள்ள ஒவ்வொரு குடும்பங்களையும் நாங்கள் கணக்கெடுத்து வருகிறோம். மிகவும் துல்லியமான அளவீடுகளைக் கொண்டு, வெளிப்படையாக நிதியை வழங்கவுள்ளோம். சரியான நபருக்கு நிதி சென்று சேர முழு முயற்சியை செய்து வருகிறோம்,'' என்றார் தாமஸ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












