கேரள வெள்ளம்: திட்டமிடாமல் அணைகளை திறந்ததே காரணமா?
- எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
- பதவி, பிபிசி தமிழ்
கேரளத்தில் எதிர்பாராமல் பெய்த பெருமழை ஓய்ந்து, ஊழி போல் வந்த வெள்ளப்பெருக்கு வடியத் தொடங்கியிருக்கிறது. அதிர்ச்சியிலும், பீதியிலும் உறைந்து கிடக்கிற மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப காலம் பிடிக்கும்.

பட மூலாதாரம், Hindustan Times
நிவாரண முகாம்களில் அடைந்து கிடக்கிற 7 லட்சம் பேரின் வாழ்க்கையைக் கட்டியெழுப்ப காலமும், பொருளும் நிறைய தேவைப்படும். அரசியல் வேறுபாடுகளை மறந்து மீட்புப் பணிகளில் ஓருயிராய் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட கேரளம் இப்போதுதான் தம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஏன் இப்படி நடந்தது என்று கேள்வி கேட்டுக்கொள்கிறது.
இதுவரை அரசைப் பற்றி விமர்சிக்காமல் பேரிடரை எதிர்கொள்வதில் இணைந்து நின்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, தற்போது எதனால் இப்படி நடந்தது என்று பிபிசி தமிழிடம் பேசினார்.
"மொத்த கேரளமும் மீட்புப் பணியில் இணைந்து நிற்கிறது. அதே நேரம், அரசுத் தரப்பு செய்யத் தவறியவையும் இருக்கிறது. பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்துக்கு பருவமழை மட்டும் காரணமல்ல. திட்டமிடாமல் அணைகளைத் திறந்ததும் காரணம். தவறான நேரத்தில், முன்னேற்பாடுகள் இல்லாமல் அணைகள் திறக்கப்பட்டன.

பட மூலாதாரம், Shankar/The India Today Group/Getty Images
மழைப் பொழிவைக் கணக்கிட்டு, நிலைமையை ஆராய்ந்து, வேறு சாத்தியக்கூறுகளை ஆலோசித்து அரசு நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். துரதிருஷ்டவசமாக அது நடக்கவில்லை. ஆனால், இந்தத் தவறுகளைப் பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை. ஏனெனில் இது நெருக்கடி நேரம்," என்றார் அவர்.
மத்திய நீர் வள ஆணையம், வானிலை ஆய்வுத் துறை உரிய முறையில் முன்கூட்டியே பெருமழை பற்றி எச்சரிக்கை செய்திருந்ததா என்று கேட்டபோது, "மீட்புப் பணிகள் முடிந்தவுடன் இதைப்பற்றியெல்லாம் நாங்கள் கேள்வி எழுப்புவோம்" என்றார் சென்னிதலா.

இது குறித்து அரசின் கருத்தை அறிய மாநிலத் தலைமைச் செயலாளரையும், பொதுப்பணித் துறை அமைச்சரையும் தொடர்புகொள்ள முயன்றும் அவர்களை உடனடியாகத் தொடர்புகொள்ள முடியவில்லை.
அதே நேரம் பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன் வேறொரு தருணத்தில் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த கேரள அரசின் மாநிலங்களிடை நீர் தாவா தொடர்பான ஆலோசகர் ஜேம்ஸ் வில்சன், தீவிர மழை பொழிவு இருக்கும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றுதான் வானிலை ஆய்வு மையத்தில் இருந்து தகவல் வந்தது. ஆனால், ஏற்பட்டதோ வரலாறு காணாத மழை. பேரிடர். எனவே இதைத் தவிர்த்திருக்க முடியாது என்றார்.

ஆகஸ்டு 15 அன்று ஐயப்பன் கோயில் உள்ள பத்தனம்திட்டா, ஆலப்புழா மாவட்டங்களெல்லாம் தீவுகளாகிவிட்டன. மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் திருவனந்தபுரம், கொல்லம் தவிர 12 மாவட்டங்களில் வெள்ள அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
1924-ம் ஆண்டுக்குப் பிறகு கேரளத்தில் ஏற்பட்ட மோசமான வெள்ளம் என்று இது விவரிக்கப்படுகிறது. நூற்றாண்டுக்குப் பிநைய மோசமான வெள்ளம் என்கிறார் மாநில முதல்வர் பினராயி விஜயன்.

எப்படி நடந்தது இந்தப் பெருவெள்ளம்?
2015 டிசம்பரில் கடும் மழைச் சூழலில் ஒரே ஒரு செம்பரம்பாக்கம் ஏரியை எதிர்பாராத விதத்தில் திறந்துவிட்டதால் சென்னை மாநகரில் என்ன ஆனது?
பல பகுதிகள் வெள்ளக்காடாகின. சாலைகளில் படகு சென்றது. வீடுகளில் முதல் மாடி வரை வெள்ளம் சென்று எல்லாவற்றையும் அள்ளிச்சென்றன. மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
நெடிய கடற்கரையை உடைய கேரளத்தில், கடும் மழைக்கு நடுவே, 44 ஆறுகள் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த நிலையில், முதல்வரே குறிப்பிட்டபடி 80 அணைகள் திறக்கப்பட்டால் என்னவாகும்? ஒரு மாநிலமே வெள்ளக்காடாகும். அதுதான் நடந்தது கேரளத்தில்.
ஜூன் 1-ம் தேதி அங்கு பருவமழை தொடங்கியது. தொடக்கம் முதலே பருவ மழை வீரியம் கொள்ளத் தொடங்கியது. ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான இரண்டரை மாத காலத்தில் கேரளத்தில் சராசரியாகப் பெய்திருக்கவேண்டியதை விட 30 சதவீதம் கூடுதல் மழை பெய்திருக்கிறது என்கிறது வானிலை ஆய்வுத்துறையின் புள்ளிவிரம்.

இந்த 30 சதவீதம் என்பது சாதாரணமாகத் தெரிந்தாலும், சில குறிப்பிட்ட பகுதிகளில், குறிப்பிட்ட சிலநாள்களில் மழையின் ஆவேசமும் அடர்த்தியும் அதிகம் என்பதில்தான் பிரச்சினையின் தீவிரம் இருந்தது. எடுத்துக்காட்டாக இடுக்கியில் 70 சதவீதம், பாலக்காட்டில் 57 சதவீதம் குறிப்பிட்ட காலகட்டத்தில் வழக்கத்தைவிடக் கூடுதலாகப் பெய்துள்ளது.
ஜூன் 1-ம் தேதி முதலே கடும் பருவமழை நொறுக்கிக்கொண்டிருந்த கேரள மாநிலத்தில், அந்த மாநிலத்தின் 44 ஆறுகள் பெரும்பாலானவற்றில் ஏற்கெனவே வெள்ளம் ஓடிக்கொண்டிருந்த நிலையில், ஆகஸ்டு 8-ம் தேதி பருவமழை தீவிரமடைந்தது.
அத்துடன் கடல் போல் பரந்துவிரிந்த இடுக்கி நீர்த்தேக்கம் ஜூலை மாத இறுதி வாக்கிலேயே திறக்கப்பட்டிருந்த நிலையில், தீவிரமடைந்த மழையால் மேலும் கேரள மாநிலம் முழுவதும் பல பெரிய நீர்த்தேக்கங்களை திறக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

"இடுக்கி நீர்த்தேக்கத்தின் செறுதோணி அணைக்கட்டின் ஐந்து மதகுகளும் திறக்கப்பட்டன. அதிகபட்சமாக விநாடிக்கு 15 லட்சம் லிட்டர் தண்ணீர் பெரியாற்றில் திறந்துவிடப்பட்டதாக" அம்மாநிலத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவிக்கிறார். பெரியாற்றின் கிளைகளிலும், வாய்க்கால்களிலும் இந்த வெள்ள நீர் கடல் போல் பாய்ந்து சென்று அவற்றின் கரைகளில் இருந்த ஊர்களை, நகரங்களை வெள்ளக்காடாக்கியது.
பல வீடுகளில் முதல் மாடி அளவுக்கு வெள்ள நீர் சென்றது. இடுக்கி, எர்ணாகுளம் மாவட்டங்களில் வெள்ள நிலைமை மோசமானதற்கு இந்த அணை நீர் திறப்பு பெருங்காரணம் என்கிறார்கள் மீட்புப் பணியாளர்களும், மாநிலப் பத்திரிகையாளர்களும்.

வயநாடு மாவட்டத்தில் உள்ள பெரிய அணையான பானாசுரா சாகர் அணையின் நான்கு மதகுகளும் எவ்விதமான எச்சரிக்கையும் இல்லாமல் திறக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதைப்போலவே இடமலையாறு அணைக்கட்டின் நான்கு மதகுகளும் திறக்கப்பட்டன.
பாதிப்பு
இந்த மழை வெள்ளத்தால் வீடுகள், சாலைகள், ரயில் தடங்கள், கேரள மாநிலத்தின் உயிராதாரமான சுற்றுலா கட்டமைப்புகள் ஆகியவை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைப் போல ஆழ்துளைக் கிணறுகளை அல்லாமல் கேரளம் குடிநீருக்கு பெருமளவில் கிணறுகளை நம்பியிருந்த மாநிலம் என்றும் இந்தக் கிணறுகள் எல்லாம் தற்போது வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சேதாரங்களை ஈடுகட்டுவதும், மறுகட்டுமானம் செய்வதும் மிகப்பெரிய சவால்.
மனிதத் தவறுகளா?
கேரளத்தில் ஏற்பட்ட பேரழிவு மனிதத் தவறுகளால் நிகழ்ந்ததா? இதைத் தவிர்த்திருக்க முடியுமா? என்று பூவுலகின் நண்பர்கள் என்ற சூழலியல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜனிடம் கேட்டபோது, "பருவநிலை மாற்றத்தினால், குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்யும் நிகழ்வுகள் அதிகம் இருக்கும். நடக்கிறது. ஆகஸ்ட் 15 அன்று மட்டும், கேரளத்தில் சராசரியாகப் பெய்யும் மழையைப் போல 8 மடங்கு மழை பெய்துள்ளது.
ஏற்கெனவே கேரளத்தில் இருந்த பாரம்பரிய நீர் நிலைகள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டதும், ஆற்றோரத்தில் கட்டப்பட்ட ஓய்வு விடுதிகளால் ஆற்றின் கரைகள் சுருக்கப்பட்டதும் பல பகுதிகள் மூழ்குவதற்குக் காரணமாக இருந்தன. குறிப்பாக, எர்ணாகுளம் நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு, அந்நகரின் நீர்வழித்தடங்கள் அழிக்கப்பட்டது காரணம். சென்னையின் நீர்வழிகள் அழிக்கப்பட்டது 2015 சென்னை வெள்ளத்துக்குக் காரணமாக இருந்ததை ஒப்பிடலாம்" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
பெருமளவு சேதத்துக்கும், உயிரிழப்புகளுக்கும் மண் சரிவே காரணமாக இருந்ததை சுட்டிக்காட்டிய சுந்தர்ராஜன், மேற்குத் தொடர்ச்சி மலைகள் உயிரினங்கள் உருவாவதற்கு முன்பே உருவான மலைத்தொடர் என்றும் பாறைகளும், மரங்களும் நிரம்பிய இந்த மலைத்தொடரில் சுமார் 10-20 ஆண்டுகளுக்கு முன்புவரை நிலச்சரிவுகள் ஏற்பட்டதில்லை என்றார்.
"பெரிய அணைகள் கட்டுவதற்காகவும், நீர் மின் நிலைய சுரங்கப் பணிகளுக்காகவும், உல்லாச விடுதிகள் கட்டுவதற்காகவும் பெருமளவு மரங்கள் அழிக்கப்பட்டதும், மலைகள் தோண்டப்பட்டதும் இம்மலையின் மண்பரப்பு மழையில் நெகிழ்ந்து மண் சரிவுக்கு காரணமாகின. கேரளம் போன்ற சிறிய மாநிலத்தில் 39 பெரிய அணைகள் என்பதெல்லாம் உண்மையில் அளவுக்கு மீறியது" என்றும் கூறினார் சுந்தர்ராஜன்.
ஆனால், பிபிசி தமிழிடம் பேசிய தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.கே.ஜெயின் கேரள மாநிலத்தில் பேரிடர் மேலாண்மை அமைப்பு நல்லவிதமாக இருப்பதாகவும், ஏற்பட்டிருக்கிற பேரிடரின் அளவைக் கொண்டு பார்க்கையில் உயிரிழப்பு அளவுகள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்.
மண் சரிவு
வெள்ளம், உயிரிழப்பு, மீட்புப் பணியில் சவால் ஆகியவற்றுக்கு மற்றொரு மிக முக்கியக் காரணம் நிலச்சரிவுகள். பாலக்காடு, வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் மண் தொடர் மழையால் தளர்ந்து பல இடங்களில் மாபெரும் நிலச்சரிவுகளுக்கு வழிவகுத்தது.

பட மூலாதாரம், Getty Images
வல்லுநர்களின் அறிவுரையை மீறி பல மலைப்பகுதிகளில் கட்டுமானங்களை அனுமதித்ததே காரணம் என்ற விமர்சனங்களும் எழுந்தன. சுற்றுச்சூழல் விஞ்ஞானி மாதவ் காட்கில் பரிந்துரைகளை புறக்கணித்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கட்டுமானங்களை அனுமதித்திராவிட்டால் வெள்ளத்தின் பாதிப்புகள், மண்சரிவுகள் இவ்வளவு மோசமாக இருந்திராது என்ற குரல்களும் எழுந்தன.
மாபெரும் மீட்புப் பணி...
வரலாறு காணாத மிக மோசமான வெள்ளப் பாதிப்பாக இருந்தாலும், முதல்வர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், ராணுவம், கடற்படை, கடலோரக் காவல் படை, விமானப்படை, மீனவர்கள் ஏராளமான தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து இந்த மாபெரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஆகஸ்ட் 17ம் தேதி கேரளத்தை நேரில் சென்று பார்வையிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ரூ.500 கோடி கேரள வெள்ள நிவாரணத்துக்கு என ஒதுக்குவதாக அறிவித்தார். இந்தத் தொகை போதுமானதல்ல என்ற குரல்களும், கேரள வெள்ளத்தை தேசியப் பேரிடராக அறிவிக்கவேண்டும் என்ற குரல்களும் சமூக வலைத்தளத்திலும், அரசியல் அரங்கிலும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
ரூ.20,000 கோடி அளவுக்கு சேதம் நிகழ்ந்திருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியிருக்கிறார். மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதாது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












